முதலமைச்சர்(?) வேட்பாளர்

(Karunakaran Sivarasa)

புலிகளுக்குப் பிறகான அல்லது யுத்தத்துக்குப் பிறகான அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமைக்கோரிக்கையை தளர்வின்றி ஒலிப்பவர் விக்கினேஸ்வரனே. இதை அவர் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு முன்பாகவே திமிராகச் செய்கிறார். உலகரங்கில் தெளிவாக முன்வைக்கிறார். எந்தச் சமரசங்களுக்கும் இடமளிக்காமல், துணிகரமாக, விட்டுக்கொடுப்புகளற்று அதைச் செய்கிறார். யுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேணும். அரசியல் ஏமாற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியான நிலைப்பாட்டோடிருக்கிறார். இந்தப் பங்களிப்பு ஒன்றே விக்கினேஸ்வரனுடைய தகுதிக்குப் போதுமானது என்று சிலர் சொல்லக் கூடும்.

இப்படிச் சொல்வோரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கலாம். சரி, இப்படி, இவற்றுக்காக விக்கினேஸ்வரன் உருகி நிற்கிறார், உருக்காக நிற்கிறார் என்றால், அதற்கான செயல்வடிவம் என்ன? அதாவது இவற்றை வெற்றி கொள்வதற்கான பொறிமுறைகள் என்ன? இப்படிச் சொல்வதால் மட்டும் இவையெல்லாம் நிறைவேறி விடுமா?

எதையும் யாரும் எளிதாகச் சொல்லி விட முடியும். அவற்றில் ஒன்றையேனும் செய்வதே சாதனை. ஒன்றையேனும் வெற்றிகொள்வதே வரலாறு. (மந்திரத்தால் மாங்காயை விழுத்த முடியாது?

ஆகவே இதற்குரிய வேலைகளைச் செய்திருக்க வேணும்.

அப்படியென்றால் இவை தொடர்பாக விக்கினேஸ்வரன் பல வேலைகளைச் செய்திருக்க வேணும். ஒன்று அரசியல் விடயங்களைக் கையாள்வதற்கு மாகாணசபையிலோ அதற்கு வெளியிலேயோ உரிய கட்டமைப்பொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். புலம்பெயர் சமூகத்தை இணைத்து, அரசியல், பொருளாதார, துறைசார் நிபுணத்துவக் கட்டமைப்புகளை நிர்மாணித்திருக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாவட்டங்களுக்கும் உரிய முன்னுரிமை அளித்து சிறப்பு வேலைத்திட்டங்களையும் அவற்றுக்கான அணிகளையும் உருவாக்கியிருப்பது அவசியம். சர்வதேச விவகாரங்கள் – சர்வதேச தொடர்புகளுக்கான அணியொன்றை அமைத்திருக்க வேணும்.

இப்படிப் பல வேலைகள் செய்வதற்கிருந்தன.

இதில் எதையுமே விக்கினேஸ்வரன் செய்யவில்லை. விக்கினேஸ்வரனை ஆதரிக்கும் தரப்புகளும் அவருக்கு இவற்றின் அவசியத்தை வலியுறுத்திச் செய்விக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையும் வடமாகாணசபையும் இரண்டு அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்பு நகல்களை சம்பிரதாயமாக உருவாக்கியிருந்தன. ஆனால், அவற்றை சிங்கள, முஸ்லிம் சமூகங்களிடத்திலும் உலக அரங்கிலும் பிராந்திய சக்தியாகிய இந்தியாவிடத்திலும் எடுத்துச் செல்வதற்கு அவை முயற்சிக்கவில்லை. யுத்தக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று தீரமானம் கொண்டு வந்ததோடு அந்தத் தீர்மானம் பெட்டிக்குள் அடக்கமாகி விட்டது. அதை வினைத்திறனோடு – நெருக்கடிக்குரிய தீயாக மேலெழுப்புவதற்கு விக்கினேஸ்வரனாலும் முடியவில்லை. மாகாணசபை, பேரவை போன்றவற்றாலும் முடியவில்லை.

இவ்வாறு விக்கினேஸ்வரனின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி – தூரம் – மிக மிக அதிகமாகவே உள்ளது. இதையிட்டு விக்கினேஸ்வரன் கவலைப்படாதிருக்கலாம். அல்லது அவர் வெட்கப்படாதிருக்கக் கூடும். ஆனால், அவரை ஆதரிப்போர் இதையிட்டு அப்படியிருக்க முடியுமா? அவர்களுடைய பொறுப்பென்ன?