முன்பு ஒருநாள் செய்த வினை

இந்த இனவன்முறையை வரன்முறையாக ஆராய்வதற்கான சூழல் என்றுமே இருந்ததில்லை. தமிழ்த் தேசியவாத உணர்ச்சிகர அரசியலின் முக்கிய புள்ளியான இந்நிகழ்வு, விசாரணைக்கோ விமர்சனத்துக்கோ உரியதாக என்றுமே இருந்ததில்லை. 

இதை ஒரே நாளில் நிகழ்ந்த வன்செயலாகக் காண்பது எல்லோருக்கும் வசதியானது. ஒருபுறம் இதைத் தற்செயலானது என்று சிங்களத் தேசியவாதம் கட்டமைக்கையில், அதற்கெதிராக ஒரு குறுந்தேசிய பார்வையுடன் தமிழ்த் தேசியவாதம் நோக்கியது.

“கடவுள் தான் இனித் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்” என்ற கையறுநிலை அறிவிப்போடு சேடம் இழுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய தலைமைகளுக்கு, ‘ஆபத்பாண்டவன்’ போல நிகழ்ந்ததே இந்த வன்செயல். 

இலங்கை இனப்பிரச்சினையின் இரண்டு வரலாற்று நிகழ்வின் நடுகற்களாக 1956இல் தனிச்சிங்களச் சட்டமும் 1983 இனவன்முறையும் தமிழ்த் தேசியவாதத்தால் தொடர்ந்தும் சொல்லப்பட்டன; இன்றும் சொல்லப்படுகின்றன. ஆனால், இதன் தொடக்கங்கள் அதற்கு மிகவும் முந்தியன. ஆனால், அவை பேசப்படுவதில்லை. ஏனெனில் பழக்கப்பட்ட கதைகளும் கதையாடல்களும் பழைய புண்ணைச் சொறிவது போல சுகமானவை.  

கறுப்பு ஜூலையை விளங்க வேண்டுமாயின், இனமுரண்பாட்டின் தொடக்கங்களை விளங்கிக் கொள்வது அடிப்படையானது. அதைத் தவிர்த்துவிட்டு, ஒரு முழுமையான பார்வையை நாம் வந்தடைய முடியாது. இனமுரண்பாட்டின் அறிகுறிகள் 19ஆம் நூற்றாண்டிலேயே தென்பட்டன. இதை விளங்கிக் கொள்ள, 19ஆம் நூற்றாண்டின் இரண்டு அம்சங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். முதலாவது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே சிங்களப் பேரினவாதம், யாரை யாருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தது.

அது ஒரு சிறுபான்மையினரை, இன்னொன்றுக்கு எதிராகப் பயன்படுத்த இயலும் என்பதில் உறுதியாகவிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகள் இதற்கு சான்றாகின்றன. 

இரண்டாவது, இந்தியத் துணைக் கண்டத்தில் பிரித்தானியக் கொலனியாதிக்கத்துக்கு எதிராக வீறுகொண்ட போராட்டங்கள், 19ஆம் நூற்றாண்டு எங்கும் நடைபெற்றன. 1857இல் நடந்த ‘சிப்பாய் கலகம்’ இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

இலங்கையில் நிலைமைகள் மிகவும் வேறுபட்டதாக இருந்தன. பிரித்தானியர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் சிலர் இருந்தபோதும், அடிப்படையில் கொலனி ஆதிக்கவாதிகளுடனான சமரசமே மையமாக இருந்தது. ஆனால், அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியோர், தேசியவாத நோக்கங்களுக்காகக் கொண்டாடப்படுகிறார். அதனூடு கொலனி ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு வலுவான போராட்டம், இலங்கையில் நடந்தது என்ற கட்டுக்கதை நிலைபெற்றுள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல! 

1815இல் கண்டி இராச்சியம் வீழ்ந்ததும், முழு நாடும் பிரித்தானியர் வசமானது. அதைத் தொடர்ந்த தோட்டப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சியும் அதன் வெற்றியும் பொருளாதார ரீதியான வளமான ஒன்றாக இலங்கையை மாற்றியது. இம்மாற்றம் சமூகரீதியாகவும் பிரதிபலித்தது. ஒருபுறம் தேயிலை, இறப்பர் தோட்டங்களின் பெருக்கம் மலையகத்தில் இருந்த உள்ளூர் விவசாயிகளைப் பாதித்தது. அது ஒரு கிளர்ச்சியாக வளரா வண்ணம், உள்ளூர் நிலவுடமையாளர்கள் பார்த்துக் கொண்டனர். இந்திய அனுபங்கள், கொலனியாதிக்கவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருந்தது. பொருளாதார விருத்தியும் ஏற்றுமதி பொருளாதாரத்தின் வலிமையும் பொருளாதாரம் சார் மத்தியதர வர்க்கம் ஒன்று உருவாக வழிவகுத்தது. 

இதேவேளை, கிறிஸ்தவ மத நிறுவனங்களின் வருகை, மதஞ்சார் இடைநிலை வர்க்கம் ஒன்று உருவாகப் பங்களித்தது. இவை இரண்டும் இணைந்ததாக பிரித்தானியர்களுக்குச் சேவகம் செய்கின்ற கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்ற அல்லது அம்மதத்துடன் தொடர்புடையவர்களே அதிகாரப் படிநிலையில் மேலாதிக்கம் அடையத் தொடங்கினார்கள். இவர்களே காலப்போக்கில் இலங்கை அரசியலின் முக்கிய தலைமைகளாக உருவெடுத்தார்கள். 

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்ட நிர்ணய சபைக்கு அதிகார பூர்வமற்ற உறுப்பினர்களாக இலங்கையர் நியமிக்கப்பட்டனர். இவை பிரித்தானிய கொலனியாதிக்கத்தின் ‘நன்மதிப்பை’ப் பெற்றோருக்கே வழங்கப்பட்டது. இப்பதவிகள் உயர்வர்க்க சிங்கள கொவிகம, தமிழ் வேளாள, பறங்கிய மேட்டுக்குடியினருக்கே கிடைத்தன. முஸ்லிம்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை. 

இப்பதவிக்கு சிங்களவர்களிடையே போட்டி நிலவியது. கொவிகம மேட்டுக்குடிகளுடன் சிறுபான்மையினராக இருந்த கராவே சமூகத்தினர் போட்டியிட்டனர். பண வசதி படைத்த வணிகர்களும் புதிய முதலாளிமாரும் மட்டுமன்றி கல்வித் தகுதி பெற்றோரையும் கராவே சமூகம் கூடுதலாகக் கொண்டிருந்தமையால் இப்போட்டி நிலவியது. 

ஆனால், பிரித்தானியருடன் கொவிகம மேட்டுக்குடியினர் செல்வாக்குடையவராக இருந்தனர். இதனால் கராவே சமூகத்தினரால் பதவிகளைப் பெற முடியவில்லை. இவ்விரு சமூகத்தினரும் பிரித்தானிய கொலனியாதிக்கவாதிகளுடன் இசைந்து பதவிகளைப் பெற முயன்றார்களே தவிர, கொலனியாதிக்கத்தை எதிர்க்கவில்லை. 

அதேவேளை தமிழரிடையே தனிப்பட்ட முறையில் போட்டி நிலவியது. அது சாதி அடிப்படையிலான போட்டியாக இருக்கவில்லை. மாறாக, வெள்ளாள உயர்குடியினிடையோன போட்டியாக இருந்தது. இவர்கள் எல்லோரும் பிரித்தானிய கொலனியாதிக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தனர். உயர்வர்க்க உறவு இனத்துவத்தைத் தாண்டி, இவர்களை இணைத்தது. 

சனத்தொகையில் மிகக்குறைவான இந்த உயர்வர்க்கத்தினர் பிரித்தானிய கொலனியாதிக்கத்தை தமக்கு வாய்ப்பானதாகக் கருதினர். சர்வசன வாக்குரிமையை எதிர்த்ததையும் முழுமையான சுதந்திரத்தை மறுத்ததையும் இதன் வழிப்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ மதத்தின் வருகை, இலங்கையின் மத அரசியலில் முக்கிய திருப்புமுனையானது. கிறிஸ்தவத்தின் பரவுகையால் அச்சமடைந்த பௌத்தமும் சைவமும், கிறிஸ்தவத்துக்கு எதிரான தத்தமது மத மீளெழுச்சியை நோக்கி நகர்ந்தன. இவ்வாறு முனைப்படைந்த பௌத்த மீளெழுச்சியை பேராசிரியர் கணநாத் ஒபசேகர ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’ என்று குறிக்கிறார். 

இந்த மீளெழுச்சிக்கு குறிப்பிட்ட மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், இம்மீளெழுச்சி கொலனியாதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தவில்லை. எனவே, அது கொலனியாதிக்கவாதிகளால் அனுமதிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் இலங்கையின் சுதேசிய அரசியல் செல்நெறியின் மையமாக இனத்துவம் இருக்கவில்லை. மாறாக, சாதிய சமய அடிப்படையிலேயே அவை அமைந்தன. சமூகத்தில் அதிகாரத்தில் இருந்தோரும் அதிகாரத்துக்காகப் போட்டியிட்டோரும் மேட்டுக்குடியினராவார். அவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவைப்பட்டது. அ​ந்த ஆதரவைத் திரட்டுவதற்கு, இனத்துவத்தை விட சாதி, சமய அடையாளங்களை முன்னிறுத்துவது பயனுள்ளது என்பதை அவர்கள் தெரிந்திருந்தனர். 

எனவே, அக்காலப்பகுதியில் தமிழர்-சிங்களவர் என்ற இனத்துவ வேறுபாடானது அரசியல் ரீதியாக வளர்ச்சி அடையவில்லை. தமிழ், சிங்கள மேட்டுக்குடியினரிடையே போட்டிக்குரியதாக எதுவும் இருக்கவில்லை. அதேவேளை, தம் உயர்குடி நலன்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுத்தேவை இருவருக்கும் இருந்தது. 

இதனால், சிங்கள கொவிகம, தமிழ் வேளாள மேட்டுக் குடிகளிடையே மிகவும் வலுவான நல்லுறவு இருந்தது. ஆனால், துரதிர்ஸ்டவசமாக இதே வகைப்பட்ட ஒற்றுமை, வர்க்கத்தாலும் சாதியாலும் தாழ்த்தப்பட்ட தமிழ் – சிங்கள மக்களிடையே உருவாகவில்லை. 

அதற்கான வாய்ப்புகள் இருபதாம் நூற்றாண்டில் துளிர்விடத் தொடங்கிய வேளை, இனத்துவம் முன்னிலைக்கு வந்திருந்தது. அது, இனத்துவத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணையாமலும் தொடர்ந்தும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுவதற்கும் வழிசெய்து, மேட்டுக்குடிகளின் நலன்களைக் காத்தது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் இனரீதியாகப் பிளவுற்றமையின் விளைவுகளை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே காணக் கிடைத்தது. 1893இல் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், இலங்கையில் இடம்பெற்ற முதலாவது வேலை நிறுத்தமாகும். இவ்வேலை நிறுத்தம் ஆறே நாளில் தோற்கடிக்கப்பட்டது. 

இது இரண்டு விடயங்களை உறுதியாகச் சொன்னது. முதலாவது, மேட்டுக்குடியினரின் ஒற்றுமை வர்க்க நலன் சார்ந்தது, அதேயளவு பரந்துபட்ட ஒற்றுமை, ஒடுக்கப்பட்ட மக்களிடையே இல்லை. இரண்டாவது, இந்தியா போன்று ஒரு வீரம்மிக்க விடுதலைப் போராட்டத்துக்கான வாய்ப்புகள் இலங்கையில் இல்லை. 

19ஆம் நூற்றாண்டெங்கும் மேட்டுக்குடிகள் இடையேயான ஒற்றுமை, அதிகாரமும் வர்க்கமும் சார்ந்தாகவும் சாதிய மத அடிப்படையிலானதாகவும் இருந்தது. இக்காலப் பகுதியில் எழுச்சி பெற்று வந்த நிலவுடைமை முதலாளி வர்க்கம், தனது நலன்களைப் பேணுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தது. இதற்கு கொலனியாதிக்கத்துடனான நெருக்கம், தவிர்க்க இயலாததாக இருந்தது. 

மேட்டுக்குடிகளின் நெருக்கத்துக்கான போட்டியில் சாதி முக்கிய பங்கு வகித்தது. தென்னாசிய நிலவுடைமைச் சமுதாயத்தின் ஒரு முக்கியமான கூறாக இருந்து வந்த சாதி, தேசிய உணர்வின் விருத்திக்கும் தடையாகவே இருந்தது. 

சுதந்திரத்துக்கு முந்தைய தேசிய அரசியலில் சாதியின் பங்கு முக்கியமானது. பல வகைகளில் இனத்துவ உறவுகள் முரண்பாடானமையில் அதற்கும் பங்குண்டு.