மே 18 (பகுதி 6)

(அருண் நடேசன்)

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.
தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.

எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள்.
இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர்.

அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது.

அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

(தொடரும்…..)