அடுத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்கும் காலம் (Timing) அரச தரப்புக்கு பெருமளவுக்கு உசிதமற்றதாகவே இருந்து வருகிறது என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் NPP பெற்றுக் கொண்ட அமோக வெற்றியையடுத்து சில காலம் பதுங்கிக் கிடந்த தீவிர தேசியவாத / இனவாத சக்திகள் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர்) ஓரளவுக்குப் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் ‘இனம்’ மற்றும் ‘மதம்’ போன்ற தேசாபிமான சுலோகங்களுடன் களமிறங்கியிருக்கும் ஒரு சூழ்நிலையலேயே சிங்களப் பொதுச் சமூகம் பூஜித்து வரும் ‘ரணவிருவாக்களை’ (War Heroes) வெறும் சிப்பாய்களாக (Soldiers) ‘தரமிறக்கும்’ விதத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார்.
போரில் உயிர் நீத்த வீரர்களை குறிப்பிடுவதற்கென கடந்த 25 ஆண்டுகளாக பொது வழக்கில் உள்ள சிங்களச் சொல் ‘ரணவிருவா’ (War Hero) என்பது. ஆனால், ஜனாதிபதி தனது உரை நெடுகிலும் அச்சொல்லை பயன்படுத்துவதை மிகக் கவனமாக தவிர்த்துக் கொண்டதுடன், அதற்குப் பதிலாக ‘சிப்பாய்கள் (Soldiers) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
தென்னாசிய கலாச்சார பாரம்பரியங்களை பொருத்தவரையில் போர் வீரர்களை ‘வெற்றி வீரர்கள்’ என வர்ணிப்பதும், அவர்களை அதிமானுடர்களாக கட்டமைப்பதும் வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வந்திருக்கும் இயல்பான ஒரு செயல். தமிழில் கலிங்கத்துப் பரணி தொடக்கம் கலைஞரின் ‘பாயும் புலி பண்டார வன்னியன்’ வரையில் அனைத்துப் போர் இலக்கியங்களும் இந்த ரணவிரு ‘ Concept’ ஐயே முன்வைக்கின்றன. எவரும் அந்தப் போர் வீரர்களை வெறும் சிப்பாய்களாக பார்ப்பதுமில்லை; வர்ணிப்பதுமில்லை.
‘இரத்தத் திலகம்’ (1963) தொடக்கம் ‘அமரன்’ (2024) வரையில் திரையிடப்பட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களும் ‘ஜவான்களை’ வீரமும், தேச பக்தியும் நிறைந்த உத்தம புரிஷர்களாக சித்தரித்துக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் என்று சொல்லலாம்.
‘எம்மைப் பொருத்தவரையில் அவர்கள் எமது தாய் மண்ணுக்காக போராடி உயிர் நீத்தவர்கள். வெறும் Soldiers அல்லது Officers அல்ல. தாய் மண்ணை உயிரினும் மேலாக நேசித்த ரணவிருவாக்கள். ஜனாதிபதி ஆனாலும் சரி அவர்களை இவ்விதம் சிறுமைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது’ என்பது எதிர் தரப்பினர் ஆவேசத்துடன் முன்வைக்கும் வாதம்.
‘டயஸ்போரா’ புலிகளிடமிடமிருந்து காசு மற்றும் இன்னபிற காணிக்கைளைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி மாபெரும் தேசத் துரோகத்தை இழைத்திருக்கிறார்’ என கடும் உணர்ச்சிவசப்பட்ட தொனியில் பேசியிருக்கிறார் விமல் வீரவங்ச – “ஜனாதிபதி தனது உரையில் எந்தவொரு இடத்திலும் வாய் தவறியும் கூட ‘ரணவிருவா’ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
அது மட்டுமன்றி, அவர் ‘இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு’, ‘இறைமை’ மற்றும் ‘பிரிவினைவாத பயங்கரவாதம்’ போன்ற சொற்களையும் தவிர்த்துக் கொண்டார்…….. இதுவரையில் எந்தவொரு அரச தலைவரும் செய்யத் துணியாத ஒரு செயல் இது………..”
“டயஸ்போரா” புலிகளின் மனதை கொஞ்சமும் புண்படுத்தக் கூடாது என்ற கரிசனையுடன் நிகழ்த்தப்பட்ட உரை இது” என்கிறார் உதய கம்மன்பில.
மறுபுறம், 1983 வன்செயல்களைத் தூண்டிய முக்கிய புள்ளிகளில் ஒருவரான எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மற்றொரு யூடியூப் சண்டியராக எழுச்சியடைந்திருக்கும் ராஜாங்கன சந்தாரதன தேரர் என்ற சர்ச்சைக்குரிய பிக்கு ‘அடேய் அநுர, நீ புலிகளுக்கு ……. தை கொடுக்கும் துரோகி……. உன்னை நாங்கள் சும்மா விடப் போவதில்லை….’ எனக் கடுமையாக ஜனாதிபதிக்கு அச்சுறுத்துல் விடுத்திருக்கிறார்.
தீவிர சிங்கள தேசியவாதிகள், அந்த முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (பலங்கொடை கஸ்ஸப தேரர் போன்ற) ஒரு சில முன்னணி தேரர்கள் மற்றும் பிரபல்யமான யூடியூபர்கள் பலரும் இது தொடர்பாக AKD ஐ கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்.
“கடும் மத வெறுப்பாளர்களான எமது ஆட்சியாளர்களும், அவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில காவியுடை கயவாளிகளும் புத்த சாசனத்தையும், நமது இனத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்…..”
“இதனைப் பார்த்துக் கொண்டு மகாநாயக்க தேரர்கள் வாளாவிருக்கக் கூடாது. ‘இந்த ஆட்கள் இனிமேலும் நமது நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்க முடியாது’ என்ற செய்தியை அவர்கள் மக்களுக்கு விடுக்க வேண்டும்” என்று ஆவேசத்துடன் பேசுகிறார் மட்டக்களப்பிலிருந்து சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் அம்பிட்டியே சுமனரதன தேரர்.
‘இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்’ என்ற விதத்தில் சமூக ஊடகங்களில் வாதப்பிரதிவாதங்கள் நிகழும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது.
வடக்கிலும், தெற்கிலும் வருடாந்த போர் நினைவேந்தல் நிகழ்வுகள் வங்குரோத்து அரசியல்வாதிகளின் சுயநல அஜென்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவிகளாக மாறி வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் பின்னணியில், ஜனாதிபதியின் உரைக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கும் தென்னிலங்கையின் ‘மாபெரும் தேசாபிமானிகளுக்கு’ சவால் விடுக்கும் விதத்திலான ஓர் அங்கதக் குறிப்பு இது –
“சிங்களவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ சட்ட திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ‘சிப்பாய்’ (சொல்தாதுவா) என்ற சொல்லை நீக்கி விட்டு, ‘ரணவிருவா’ எனப் பெயரிடுவதற்கும், ரணவிரு நலன்புரிச் சேவைகளுக்கென ஒரு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒவ்வொரு சிங்களப் பிரஜையிடமிருந்தும் வருடாந்தம் ரூ. 1000/- ரணவிரு நினைவேந்தல் வரி ஒன்றை அரவிடுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
- பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி
மறுபுறம், வடக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அரசியல் குறித்த சிவா முருகுப்பிள்ளையின் இந்த முகநூல் பதிவு முக்கியமானது –
“……………மே 18, 2009 அன்று பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டது உண்மை. இந்தக் கொலைகளை இலங்கை ராணுவம் எவ்வளவு செய்ததோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்.”
“இது ஒரு மிருகம் மக்களை கேடயமாக கைது செய்து. தம்மை காப்பாற்றிக் கொண்டு சென்று, இன்னொரு அரசு மிருகம் கொல்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த உச்ச பலி கொடுப்பு நிகழ்வு ஆகும்”.
“இந்தத் தேர்தலில் பிரதான நீரோட்டத்திலிருக்கும் அனைத்து ‘தேசியம்’ பேசும் தமிழ் கட்சிகளும் அன்று ‘மனிதக் கேடயங்களை விடுவியுங்கள்’ என்று குரல் கொடுக்கவில்லை”.
“மாறாக ‘உள்ளுக்கை வரவிட்டு அடிப்பார்கள்’ என்று கூறி உசுப்பேத்தியவர்கள்”.
“……..கனடா போன்ற நாடுகள் தமது மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த நாடுகள். இவ்வாறான ஒரு நாட்டின் அரசியல் தலைவர்களிடமிருந்து எமது அரசியல் விடுதலையை தேடி நிற்கிறோம் என்பது எமது சமூகத்தின் அவலம்………….”
“உங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், நினைவுச் சின்னங்களும் அழிந்த மக்கள் பற்றியதோ எதிர்காலம் நாசமாய் போன எங்கள் இனம் பற்றியதோ அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது”.
“அது வேண்டுமென்றால் உங்களுக்கான வாக்கு வங்கி சரிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.”
“தீர்வுகளை, அதிகாரப் பரவலாக்கத்தை நாங்கள் உள்ளுக்குள்ளே தான் போராடி, பேச்சுவார்த்தை நடத்தி தந்திரோபாயங்கள் மூலம் (கடந்த காலத்தில் தவறவிட்டது போல அல்லாது) பெற்றுக்கொள்ள வேண்டும்.”
ஒரே வரலாற்று நிகழ்வுக்கு இரு தரப்புக்கள் வேறு வேறு வியாக்கியானங்களை வழங்குவதை ‘Contested Histories’ என்று சொல்வார்கள். இலங்கையை பொருத்தவரையில் 1956 ஆட்சி மாற்றத்தையும், 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரையும் சிங்கள மற்றும் தமிழ் தரப்புக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டங்களில் நோக்கி வருகின்றன.
2009 முள்ளிவாய்க்கால் அவலத்தை தமிழர்கள் மாபெரும் இனப் படுகொலை என வர்ணித்து, அங்கு மரணித்தவர்களுக்கு வருடாந்தம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே வேளையில், தெற்கு சிங்கள தரப்பு அதனை ஒரு வெற்றி விழாக் கொண்டாட்டமாக பெருமிதத்துடன் நினைவு கூர்ந்து வருகின்றது.
ஆனால், இந்த ஆண்டு போர் வீரர்களை நினைவு கூரும் அரச வைபவத்தில் பங்கேற்று ஜனாதிபதி ஆற்றிய உரையையும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய பின்வரும் உரையையும் போர் குறித்த தெற்கின் பார்வையில் ஒரு ‘Paradigm Shift’ ஏற்பட்டு வருவதைக் காட்டும் குறியீடுகளாக கருத முடியும் –
“…..இதனை வெற்றி விழாவாக கொண்டாட முடியாது. அது ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்த முடியும். அதற்குப் பதிலாக, போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வருதல் வேண்டும்………..”
“………தெற்கு இளைஞர்களைப் போலவே, உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கு குரலெழுப்பிய வடபுல இளைஞர்களும் வீரர்கள் ஆவார்கள் ……… தெற்கில் போலவே வடக்கிலும் இளைஞர்கள் மரணித்த பொழுது நாங்கள் கண்ணீர் வடித்தோம். எங்களிடம் துளியும் இனவாதமில்லை……….. நாங்கள் அவர்களையும் நினைவு கூர வேண்டும்……………. அதில் எந்தத் தவறுமில்லை.” - அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க