யாழ்ப்பாண மாநகரில் மீண்டுமொரு வெள்ளைமாளிகை ………………..

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை நினைவுபடுத்துவதாய் , வான் பார்வையில் முதலாம் உலக மகா யுத்த விமானம் போன்று காட்சியளித்து பெரு மிடுக்கோடு அமைந்திருந்த நகரமண்டபம்
உள்நாட்டு யுத்தத்தில் சாம்பலாகிப்போனதும் மாநகரசபை தனக்கென ஓர் நிலையான தளமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைந்துலைந்ததும் வரலாற்றுத்துயர். அத்தகைய கொடிய பௌதிக அழிவுகளை மேவி எம் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கப்போவது யாழ்ப்பாண மாநகரசபையின் நகரமண்டப நிர்மாணம்.“நல்லதொரு ஆரம்பம் பாதி நிறைவுற்றதற்குச்சமன்” என்கிறது ஓர் ஆங்கிலப்பழமொழி.
தற்போது செயற்பட்டு வரும் உலக வங்கியின் நிதிப்பங்களிப்பு சபைக்குக்கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் . கடந்த காலங்களில் இருந்துவந்ததான பல்வேறு எத்தனங்களின் முத்தாய்ப்பாக வந்துசேர்ந்த இந்த அருமையான வாய்ப்பினை நழுவவிடக்கூடாது என இறுகப்பற்றிக்கொண்ட மாநகர ஆணையாளரின் மனோதிடமும் சபையினது ஒட்டுமொத்த ஆசையும் நகரமண்டபப்பணி நிர்மாணித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உரமூட்டியிருக்கின்றன.உலகவங்கியின் மூலோபாய நகர அபிவிருத்தித்திட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலருடன் சபைநிதி மற்றும் நன்கொடைகளைப்பயன்படுத்தி எம் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றத் தீர்மானித்திருக்கின்றோம்.

ஓர் நகரத்தின் ஆளுகையை நிர்வகிக்கும் ஓர் ஆட்சிப்பீடம் தனக்கென மிடுக்கோடு கம்பீரமாக நகர மத்தியில் உயர்ந்துநிற்கவேண்டும் என்ற மக்களது எதிர்பார்ப்பும் ஏக்கமும், தனித்துவமும் தொன்மமும் நீண்டகால நிலைத்தலின் பொருட்டான சகல ஏற்பாடுகளும் கொண்ட நகரமண்டப மீளுருவாக்கத்தை துரிதமாக்கும் விருப்பை எமக்கு அளித்திருந்தது. சாம்பலாகிப்போன வரலாற்று நினைவுகளின் சாயங்களையெல்லாம் வார்த்தெடுத்து
உள்ளக வெளியக கருத்தியல்களை உள்வாங்கி புதிய நகரமண்டத்தை வடிவமைத்திருக்கின்றோம்.

தமிழர் வாசல்களை நினைவுறுத்தும் நான்கு தள வாயில்களுடன் புதுப்பொலிவுடன் அமையவிருக்கும் டாக்டர் சுப்பிரமணியப்பூங்காவின் பின்னே நம்மை நாமே ஆட்சிசெய்யும் நகரமண்டப நிழலானது பூங்காக்கு வருகைதரும் சின்னஞ்சிறு பாலகர்களின் மனங்களில் ஆளுகையின் நேர்த்தியையும் ஒழுங்கையும் அனுதினமும் ஊட்டுவதுடன் உயர்ந்திருக்கும் மண்டபத்தின் தோற்றம் சிறுவர்களின் எதிர்கால உயர்ச்சியையும் இலட்சியத்தையும் தூண்டும் குறியீடாக இருக்க வேண்டும் என்பது இப்பிரமாண்டமான கலைப்படைப்பின் தூரநோக்காகும். புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தரும் எம்மவர்க்கும் அந்த மழலைகளுக்கும் எம் முன்னோர் விளையாடிய முற்றத்தை நினைவூட்டுவதுடன் அவர் தம் பழம்பெருங்கதைகளை எட்டிப்பார்க்கக்கூடிய திறவுகோலாகச் செயற்படப்போவதும் இந்த நகரமண்டபமாக இருக்கும்.

மொத்தத்தில் யாழ்ப்பாண நகரின் பண்பாட்டுச்சிகரமாய் ஔிரப்போகும்
சபையின் நகரமண்டபமானது ;
பொதுமக்கள் நேரடியாக வந்து சேவை பெறக்கூடிய முதலாவது தளத்தையும்,
அம்மக்களால் அனுப்பிவைக்கப்படும் மக்கள்பிரதிகளை உள்ளடக்கிய இரண்டாவது தளத்தையும், பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புபடாத நிர்வாக மற்றும் இதர நடவடிக்கைகளுக்குரிய மூன்றாவது தளத்தையும் , அனைத்து வகையான நிகழ்வுகள்/ கருத்தரங்குகள்/ உரையாடல்களை மேற்கொள்ளத்தக்க வகையில் நவீனகர வசதிகளுடன் அமையத்தக்க நான்காவது தளத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் வடக்குப்புற பிரதான வாசலை அடுத்து வரும் முகப்பு அறையானது நகர மண்டபப்பணி உதயத்திற்கான ஆரம்பம் முதல் அடைவுமட்டம் வரையான அனைத்து வேலைப்பாடுகளையும் வருங்கால சந்ததியினருக்கும் அடையாளப்படுத்துகின்ற தனிச்சிறப்புமிக்க ஒன்றாக வரலாறுகளில் நிலைத்துநிற்கும்.

நகர மண்டபம் சாம்பலிலிருந்து மீண்டு எழப்போகும் அந்த அற்புதமான தருணத்தை நாம் உயிரோடிருக்கும் காலத்திலே தரிசிக்கக் கிடைக்குமா என்ற பொதுமக்களின் ஏகமனதான விருப்பும் , எமது துரிதமான அபிவிருத்தி நோக்கும் கட்டுமானப்பணிகளை முடிவுறுத்தும் கனவை வெகுதொலைவாக்காது…

கனவு மெய்ப்படவேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்.