’எமது பிள்ளைகள் எங்கே?’

தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வொன்றை முன்வைக்குமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வீதியோரங்களில் பல்வேறு சிரமங்களுடன் போராடி வரும் தமக்கு, உரிய தீர்வை பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகளின் தொடர் போராட்டம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்றது.

அதேபோன்று, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

இந்த நிலையில், முல்லைத்தீவில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

யாழப்பாணம் – மருதங்கேணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அவ்வாறே, திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தமது காணாமல்ஆக்கப்பட்டுள்ள உறவுகள் தொடர்பில், உரிய தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய தீர்வொன்றை முன்வைக்குமாறு தொடர்ச்சியாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தி வருகின்றபோதும் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு, வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.