வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 02

“நியாயம் கேட்கும்போதெல்லாம் அவர்கள் வேறு கதைகளையே பேசுகிறார்கள். நீதியைக் கோரும்போது அவர்கள் வேறேதோ சொல்ல முற்படுகிறார்கள்”

(02)

வடக்கு தமிழர்களை நம்பி வந்த மலையகத் தமிழர்

வன்முறையினால் பாதிக்கப்பட்டு வடக்கே வந்த மலையக மக்களை வரவேற்பதற்கு அப்பொழுது யாருமே இருக்கவில்லை. வடக்கில் அவர்களுக்கு உறவுகளே இல்லை. வடக்கு அவர்களுக்கு அறிமுகமான – பரிச்சியமான பிரதேசமும் அல்ல. ஆனால் அவர்கள் நம்பி வந்தது வடக்கில் உள்ளவர்கள் தமிழர்களை. அது தமிழ்ப்பிரதேசம் என்பதால். ஆகவே அந்தப் பிரதேசம் தம்மைப் பாதுகாக்கும். அல்லது தமக்கு அது பாதுகாப்பானதாக இருக்கும். அங்கே உள்ளவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்கள் தங்களை வரவேற்று ஆதரிப்பார்கள் என.

அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்க்கைக்கும் மாறான விதமாகவே நிலைமைகளிருந்தன. வடக்கே வந்த மக்கள் எந்த வகையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக –எச்சரிக்கையாக இருந்தது யாழ்ப்பாணச் சமூகம். அப்படி நுழைந்து விட்டால் அவர்கள் (மலையக மக்கள் –அப்பொழுது இந்த மக்களை யாழ்ப்பாணத்தவர், இந்தியாக்காரர், தோட்டக்காட்டார், வடக்கத்தையார், கள்ளத்தோணிகள் என்ற பெரும் சொற்களால்தான் குறிப்பிட்டனர்) காலப்போக்கில் யாழ்ப்பாணச் சமூகத்தோடு கலந்து விடுவார்கள் என்ற எச்சரிக்கையில் யாழ்ப்பாணத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

அப்போதிருந்த தமிழரசுக் கட்சி, பின்னர் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை இந்த மக்களைக் குறித்து சிந்திக்காமல் பெருந்தவறிழைத்தன. தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள்காரர்) எப்போதுமே மலையக மக்களுக்கு எதிரான சிந்தனைப்போக்கினைக் கொண்டது என்பதால் அதனிடம் இந்த விசயத்தில் புதிதாக நீதியை எதிர்பார்த்திருக்க முடியாது. ஆகவே அது இவர்களைப் பொருட்படுத்தவேயில்லை.

ஆனால் துயரம் என்னவென்றால், இடதுசாரிகளும் இவர்களைப் போல அன்று பெருந்தவறிழைத்தனர். அப்பொழுது இடதுசாரிகள் ஓரளவு பலமான நிலையிலிருந்தனர். ஆனாலும் அவர்கள் கூட இந்த மக்களின் விசயத்தில் சரியாக – நீதியாக நடந்ததில்லை என்பது வரலாற்றுத்துயரே.

என்றாலும் இடதுசாரிகள் மட்டும்தான் வன்னிக்குச் சென்று இந்த மக்களுக்காக நிறைய வேலை செய்தனர். ஆதரவாக நின்றனர். தருமபுரம், விசுவமடு, நெடுங்கேணி, முத்தையன்கட்டு, செட்டிகுளம், வவுனியாவின் எல்லைக்கிராமங்கள், நெடுங்கேணி போன்ற இடங்களில் எல்லாம் இடதுசாரிய இளைஞர்கள் மும்முரமாக இந்த மக்களுக்கான ஆதரவுப் பணிகளைச் செய்தனர். தருமபுரத்திலிருந்து களனி என்ற இதழ் கூட இந்த இளைஞர்களால் வெளியிடப்பட்டது.

இடதுசாரிகள் ஆதரவு

எனினும் இவர்களுடைய இந்த ஆதரவில் கூட பல கேள்விகளுண்டு. ஏனென்றால் இந்த மக்களை யாழ்ப்பாணத்திற்குள் ஏற்றுக் கொள்வதைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தமைக்குரிய வெளிப்படையான காரணம் என்ன? இந்த மக்களின் மத்தியில் இடதுசாரிகள் வேலை செய்தாலும் இவர்களை அமைப்பாக்கம் செய்யத் தவறியதேன்? அன்று கூலிகளாகவே இவர்களை வைத்துச் சுரண்டலுக்குட்படுத்திய சமூக அமைப்பைப்பற்றி இவர்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்? அத்தகைய சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக ஏன் போராட்டங்களை நடத்தவில்லை? குறைந்த பட்சம் தொழிற்சங்கங்களைக் குறித்துக் கூட ஏன் சிந்திக்கவில்லை? எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நெடுங்கேணி, வவுனியா போன்ற இடங்களில் இந்த மக்களை நகர்த்த முற்பட்டது ஏன்?

இந்த மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் இன்று பதிலளிக்கக் கூடியவர்கள் யார்?

காணி இருந்தும் கொடுக்கவில்லை

இவ்வளவுக்கும் யாழ்ப்பாணத்தில் ஏராளமான அரச காணிகள் அப்போதுதிருந்தன. உதாரணமாக, இப்போது “சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியேற்ற முற்படுகிறது அரசாங்கம். அங்கே ஒரு பெரிய பௌத்த விகாரையைக் கூடக் கட்டியிருக்கிறது” என்று புலம்புகிறார்களே, இதே நாவற்குழிப்பகுதி உட்படப் பல இடங்களில் நிறைய அரச காணிகள் இருந்தன. ஆனால் மனதில்தான் இடமிருக்கவில்லை. எனவேதான் இந்தச் சனங்கள் வன்னியில் நிறுத்தப்பட்டனர்.

வன்னி இவர்களுக்கு முற்றிலும் புதியது. நிலம், சூழல், தொழில் எல்லாமே அந்நியமானது. மலையகத்தில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து பழகியவர்களுக்கு இங்கே காட்டை வெட்டி, அதிலே ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டு, யானைக்கும் நுளம்புக்கும் பாம்புக்கும் நடுவில், வயலிலும் சிறுதானியச் செய்கை நிலத்திலும் மிளகாய், வெங்காயத் தோட்டங்களிலும் வேலை செய்வதென்பது இலகுவான ஒன்றாக இருக்கவில்லை. மலையகத்திலிருந்து வரும்போது கையிலோ மடியிலோ எதையும் எடுத்துக் கொண்டு வந்தவர்களுமில்லை. அப்படியானதொரு வசதியான வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்களுமில்லை.

இப்படி அநாதரவான நிலையிலிருந்து வந்தோருக்கு இங்கே வடக்குக் கிழக்கிலிருந்த அரசியற் தரப்புகளோ நிர்வாகத் தரப்புகளோ விசேட உதவிகள் எதையும் செய்ததும் இல்லை. விசேட ஏற்பாடு கூட வேண்டாம், சாதாரணமான– நியாயமான வசதிகளை –அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. அப்படி ஏற்பாடுகள் எதையும் செய்து கொடுத்தால் இந்த மக்களை குறைந்த கூலியில் வைத்திருக்க முடியாது என்பதே இதற்கான காரணமாக இருந்தது. இதனால் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

என்ன நிலை வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை அல்லவா! மறுபடி எப்படித் தென்பகுதிக்கு (மலையகத்துக்குச் செல்வது) என்ற கேள்வி இவர்களை எந்தச் சோதனைகளையும் ஏற்கும் நிலைக்குத் தள்ளியது. இருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையானோர் இங்கே இருக்க முடியாது. இதையெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாதென்று மறுபடியும் திரும்பிச் சென்று விட்டனர். ஏனையோர் நிரந்தரக் கூலிகளாகினர்.

ஏறக்குறைய ஒரு தலைமுறை இந்தக் கூலி வாழ்க்கையில் உக்கியது. உணவுக்கே பலரும் சிரமப்பட்டனர். அதை விடப் பாதுகாப்பற்ற குடிசைகளில்,இருளில், காட்டின் மத்தியில் வாழும் அவலம். இந்தச் சூழலில் இவர்கள் ஏறக்குறைய இயந்திரங்களைப் போலவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஒரு சமூகத்திடமுள்ள ஆன்மீகம், பண்பாடு போன்றவற்றுக்கான சூழலும் நிலைமையும் இல்லாத உழைப்பாளர்களின் நிலை என்பது இயந்திரத்தன்மைக்கு நேர் நிகரானது. ஏனெனில் கோயில், திருவிழா, பண்டிகை, நாடகம், கூத்து (அன்றைய கலை வடிவங்களிவை) போன்றவற்றில் இவர்களால் பங்கேற்கவே முடியாத நிலையே அன்றிருந்தது. ஒரு தலைமுறைக்குப் பின்னரே – குறைந்தது பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே –இவர்களால் மெல்லிய அளவில் கலைச் செயற்பாடுகளிலும் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் மதம் சார்ந்த வழிபாடுகளிலும் ஈடுபட முடிந்தது.

இலக்கியப் பதிவுகள்

அகதி வாழ்வின் துயரத்தில் –அலைதலின் போது – வெளிப்படும் உணர்வுகள் ஈழத் தமிழிலக்கியம் மற்றும் கலை வெளிப்பாடுகளில் ஒரு முக்கியமான அம்சமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதை இரு நிலைகளில் நாம் நோக்க முடியும். ஒன்று புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தோரின் புலப்பாடுகளும் வெளிப்பாடுகளாகவும் உள்ளன. இன்னொன்று உள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக (போர்ச் சூழலிலும் வன்முறைச் சூழலிலும் அகதிகளாக) வாழ்ந்தோரின் புலப்பாடுகளும் வெளிப்பாடுகளுமாகும்.

இதற்குக் காரணம் இந்த அகதிகளிற் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வன்னியைச் சேர்ந்த கீழ் மற்றும் மேல் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தோர். அதோடு இவர்கள் எழுத்தறிவுள்ள –வெளிப்பாட்டுச் சூழமைவுள்ளோராக இருந்தமையுமாகும். ஆனால் வடக்குக் கிழக்கிற்கு வந்த மலையக மக்கள் இந்த நிலையில், இந்தச் சூழமைவில் இருக்கவில்லை.

1958இல் நிகழ்ந்த வன்முறைக்கான பதிவாக வரதரின் “கற்பு” உள்ளிட்ட கதைகளும் கவிதைகளும் பின்னாளில் 1977இன் வன்முறையோடிணைந்த வெளிப்பாடாக அருளரின் “லங்கா ராணி”, வ.ஐ.ச. ஜெயபாலனின் “உயிர்த்தெழுந்த நாட்கள்” நீள் கவிதை போன்றவையும் உள்ளன. ஆனால் மூன்று பெரும் வன்முறைகளையும் அதைத் தொடர்ந்து பேரிடர் அகதி வாழ்க்கையையும் சந்தித்தும் அதைப் பற்றிய எந்தப் பதிவையும் வெளிப்படுத்தல்களையும் இன்றளவும் செய்ய முடியவில்லை இந்தச் சனங்களால்.

மிகப் பிந்தி, 2010 அளவில்தான் வன்னியில் இவர்கள் நிலைகொள்ளத் தவித்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு கதையை “பெருமாள் கணேசன்” எழுதியிருந்தார். மற்றும்படி மௌனப்பரப்பே மிஞ்சிக் கிடக்கிறது. இதனால் இந்த மக்களின் வரலாற்று வெளியென்பது பேசாப்பொருளாக கடந்து செல்லப்படுகிறது. இந்தத் துயரம் பெரியது. ஏனென்றால் பெரும் இடப்பெயர்வுகளையும் அதனால் புதிய சூழலில் சந்தித்த தலைமுறைகளின் உத்தரிப்பையும் பதிவு செய்ய முடியாமல் இவர்கள் இருந்தனர் என்பது குரலற்றவர்களின் வாழ்க்கைக்கான சான்றாகும். இவர்களுடைய இந்தப் பாடுகள் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி வெளியே – ஏனையோர் கூட கரிசனை கொண்டு எழுதியதாகவோ பேசியதாகவோ இல்லை. இதுவும் ஒரு வகையில் வரலாற்று அநீதி என்றே கொள்ளப்பட வேண்டியது.

(தொடரும்)