வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!

(சாகரன்)

‘A single spark can start a prairie fire’ என்று கூறினார் சீனப் புரட்சியின் தந்தை மாவோ சே துங். கனடா வந்திருக்கும் இலங்கை வடமாகாண சபையின் முதல் அமைச்சர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மொதம் 18 கேள்விகள் ஊடகவியலாளர்கள், அமைப்புகளால் கேட்கப்பட்டன. இதில் 17 கேள்விகளும் வடமாகாணப சபையின் முதல்வரை சிந்திக்க வைப்பதற்கு பதிலாக அவரை சந்தோஷத்திற்குள் உள்ளாக்க முன்வைத்த அரசவை புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பொற்காசு பெறும் கேள்வி என்ற வரையறைக்குள் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தன. தற்போதைய வடமாகாண சபையின் யதார்த்த செயற்பாட்டை கேள்விகளுக்குள் உள்ளாக்கும் நோக்கில் வைக்கப்பட்டன அல்ல.

எவை எப்படி இருப்பினும் வடமகாணசபையின் முதல் அமைச்சராக மக்களால் தெரிவு செய்யபட்டவர் என்ற வகையில் அவர்தான் வடமாகாணசபையின் முதல் அமைச்சர் என்பதை யாவரும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் இதுவே ஒரு தேர்தல் பாரம்பரியத்தின் பண்பாடும் கூட. இதனைக் யாரும் மறுத்துரைக்க முடியாது. இதே மாதிரியான கருத்துரையை கிழக்கு மகாணசபையின் முதல் அமைச்சராக பிள்ளையான் என்ற சிவநேசத்துரை 2009 மே மாத யுத்தத்தின் பின்னர் தெரிவு செய்யப்பட்டபோது பல ஊடகவியலாளர்கள் அரசியல் ஆய்வாளர்கள் முன்வைத்திருந்தனர். இந்த சமூக ஆய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் பலர் இவரின் துப்பாக்யினால் குறி வைக்கப்பட்வர்களும் இருந்தனர்

இதே வேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடுகளுக்கும் உள்ளானவர்கள். இவர்கள் தாம் அதிக விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவரகள் என்பதற்காக கேள்விகளுக்கு அப்பாற்பட்டவரகள் என்ற செயற்பட முடியாது. இவர்களை கேள்விகளுக்குள் உட்படுத்துபவர்கள் இவரகள் வகிக்கும் பொறுப்புக்களில் திறம்பட சரியாக செயற்படும் நோக்குடன் செயற்படுபவர்கள். ஒரு செயலூக்கம் மிக்க மாகாண சபையாக முன்னகர்த்தி செல்லவேண்டும் என்ற சமூகப் பொறுப்புடன் செயற்படுபவர்கள். .

கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாகாநாட்டில் ஒரு ஊடகவியலாளர் முன்வைத்த ஒரு கேள்வி மா வோ இன் கூற்றுப் போல் ‘பெரும் தீப்பொறியை’ ஏற்படுத்திருக்கின்றது. இது இலத்திரனியல் ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் சமூகத்தளங்களிலும் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. முதல் அமைச்சர் கேள்விக்கு பதில் கூறாமல் தனது பொறுப்பை தட்டிக்கழித்திருக்கின்றார,; பதில் கூறமுடியது திணறி இருக்கின்றார் ‘சதி’ என்று அபாண்டமாக குற்றம் சாட்டி தப்பிக்கொள்ள முற்படுகின்றார், கூடவே தானாகே பொய்களையும் அவிழ்த்துவிட்டிருக்கின்றார் தனது தலமையிலான அரசு செயற்திறன் அற்றது வினைத்திறன் அற்றது மக்களுக்கான திட்டமிடல் எதனையும் கொண்டிருக்கவில்லை கூடவே தமது அமைச்சர் அவையில் குற்றம் சாட்டப்படரவ்களை காப்பாற்றும் தொனியல் கருத்துக்களையும் இதற்கான செயற்பாட்டைச் செய்வதிலும் ஈடுபட்டிருப்பதை நியாயப்படுத்தவும் முற்பட்டிருக்கின்றார்.

இவற்றை உறுதி செய்யும் வகையில் அமைந்த இரு வேறு வேறானவர் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைக்கின்றேன். ஊடகவியலாளர் எழுப்பிய ஒரு கேள்வி தட்டியிருக்கும் ‘பொறி’ எவ்வளவிற்கு கொழுந்துவிட்டெரியச் செய்திருக்கின்றது என்பதற்கு உதாரணமாக இக் கட்டுரைகள் அமைவதால் இதனை இணைத்துள்ளேன். மக்களே நீங்களே வரலாற்றை தீர்மானிப்பவர்கள் முடிவை உங்களிடம் விட்டுவிடுகின்றேன்.

கட்டுரை 1:

கனடாவில் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்

(மீன்பாடும் தேனாடான்)

 

கனடாவில் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்து மூக்குடைபட்டுள்ளார்.

உங்களது மூன்று வருட ஆட்சியில் நீங்கள் மக்களுக்காக செய்த பணிகளில் சிலவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? என கேட்கப்பட்ட போது அவரிடம் பதிலேதும் இருக்கவில்லை.
இதே கேள்வியை கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) கேட்டிருந்தால் அவர் என்ன சொல்ல முடிந்திருக்கும்.

*மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் பல்வேறு திட்டங்களை செய்து முடித்தேன்.

*மட்டக்களப்பு நகரின் மத்தியில் இருந்த 30 வருட பழமை வாய்ந்த மிக சிறு பஸ் நிலையத்துக்கு பதிலாக பிரமாண்டமான புதிய பஸ்நிலையம் அமைத்தேன்.

*ஏழை மக்கள் குறைந்த செலவில் தமது வைபவங்களை நடத்த கலாசார மண்டபங்களை அமைத்து அவற்றை பிரதேச சபைகளுக்கு பாரம் கொடுத்தேன்.அவற்றுக்கு எம்முடன் இணைந்து போராடி மரணித்த வீரர்களின் பெயர்களை (நந்தகோபன்,ரெஜி,குகனேசன்) பொறித்தேன்.

*மிக பெரிய,சிறிய நூலகங்களை புதிதாக உருவாக்கி வாசகர்களுக்கு தந்தேன்.

*படுவான்கரை போன்ற பின்தங்கிய பிரதேசங்களை மேம்படுத்த புதிய (வவுணதீவு,திருக்கோவில் )கல்வி வலையங்களை உருவாக்கினேன்.

*43 குக்கிராமங்களை உள்ளடக்கிய பிட்படுத்தப்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தின் வளர்ச்சிக்காக அந்த பிரதேச சபையை இடம்மாற்றி புதிய கட்டிடம் அமைத்து செயலூக்கம் மிக்கதாக மாற்றினேன்.

*மாகாணமெங்கும் நூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை திருத்தி,அபிவிருத்தி செய்து அவற்றை தரமுயர்த்தினேன்.

*முடிந்தவரை பின்தங்கிய பாடசாலைகளின் கணித விஞ்ஞான,ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய பரபட்சமற்ற இடமாற்றங்களை செய்தேன்.

*பல்வேறு கிராமிய வீதிகளையும் மின்னிணைப்புகளையும் புனர் நிர்மாண பணிகளையும் செய்தேன்.

*பல குளங்களை தூர்வாரி, திருத்தி,புனரமைத்து விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

*பல கிராமிய ஆயுள்வேத வைத்திய சாலைகளை புதிதாக உருவாக்கினேன்.

*பல எல்லைக்கிராம மக்களை மீள குடியேற்றி அவர்களது விவசாய, போக்குவரத்து பாடசாலை ,ஆலைய தேவைகளை பூர்த்தி செய்ததன் ஊடாக மாகாண எல்லைகளை பலப்படுத்தினேன்.

*திருமலையில் இருந்த பல மாகாண திணைக்களங்களின் தலைமையகங்களை மட்டக்களப்பு நகருக்கு மாற்றியதன் ஊடாக மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்கொண்ட நடைமுறை பிரயாண சிரமங்களை சீர் செய்தேன்.

*இருபது வருடகாலமாக துருப்பிடித்து கிடந்த மாகாண சபையை பொறுப்பெடுத்து அதனை கட்சி தீர்மானங்களை நிறைவேற்றும் இடமாக மாற்றி கேலிக்கிடமாக்காமல் பல்வேறு நியதி சட்டங்களை உருவாக்கி(நிதி வரி வசூலிப்பு சட்டம், மதுவரி சட்டம்,தனியார் போக்குவரத்து சட்டம் மாகாண சபையை சட்ட வலுவாக்கம் மிக்கதொன்றாக பயணிக்க வழி சமைத்தேன்.

*மாகாண சபைக்கு வருடாவருடம் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்து நிதியையும் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பணி செய்ய முழுமையாக பயன்படுத்தியது மட்டுமன்றி மேலதிக நிதியையும் பெற்று எமது மாகாண அபிவிருத்திக்கு பங்காற்றினேன். ஒரு போதும் ஒரு சதமெனும் எமது மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட பணம் எனது ஆட்சிகாலத்தில் திருப்பியனுப்பப்பட்ட வரலாறில்லை.

*அனைத்துக்கும் மேலாக எத்தனையோ போராட்டங்களுக்கும் இழப்புகளுக்கும் விலைகொடுப்புகளுக்கும் பின்னர் கிடைத்த இந்த மாகாண சபை முறைமையை கையூட்டுட்டுக்களும் கயமைத்தனங்களும் காடைத்தனங்களும் ஊழல் பெருச்சாளிகளும் கடை விரிக்கும் மையமாக மாற நான் ஒருபோதும் இடம்கொடுத்ததில்லை. என் மீதோ எனது அமைச்சர்கள் மீதோ எவ்வித ஊழல் குற்றசாட்டுகளோ ஊழல் விசாரணை ஆணைக்குழுக்களோ அமைக்கும் கேவலமான நிலைக்கு இட்டு செல்லும் வண்ணம் எனது மாகாண சபை நான் நடத்தவில்லை.

 

கட்டுரை 2:

வே.குமாரசாமி சாவகச்சேரி

(விஜய பாஸ்கரன்)
குமாரசாமி சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்தவர்.அத்துடன் உள்ளூராட்சி உதவி அமைச்சராக பண்டாரநாயக்காவின் கீழ் பணியாற்றியவர்.மகிந்த 24 வயதில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும்வரை இவரே இளம் வயது பா.உ என்ற பெருமை பெற்றவர்.இவர் முதன்முறையாகும் தெரிவு செய்யப்படும்போது வயது இருபத்தி ஆறு.

கனடாவில் ஒருவர் கேட்ட கேள்விக்கு வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் பதில் கூற முடியாமல் தடுமாறினார்.1977 பொது தேர்தலின்போது குமாரசாமியின் சேவைகள் அடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டது.அதைப் படித்தபோது நான் திகைத்துப் போனேன்.1947-1956 வரையில் அவர் செய்த சேவைகள் ஏராளம்.அந்தளவுக்கு இலங்கையில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சேவை செய்திருக்க முடியாது என்பதே எனது கருத்து.

அவரது காலத்தில் சாவகச்சேரி செம்மணி பாலம் தொடங்கி துணுக்காய் வரை விரிந்து இருந்தது.இன்றுவரை சாவகச்சேரி தொகுதியில் இருக்கும் அத்தனை வீதிகளும் குமாரசாமி அவர்களால் நிர்மாணிக்கப்பட்டவை.பல வீதிகளை திட்டமிட்டு உருவாக்கியவர்.சாவகச்சேரி மகளிர் கல்லூரி,வைத்தியசாலை,வரணி மகாவித்தியாலயம் ,வரணி வைத்திய சாலை என அடுக்கிக்கொண்டே போகலாம்.அதைவிட நீர்பாசன திட்டங்கள்,வெள்ளத் தடுப்புக்காக பல கால்வாய்கள் என பலவற்றை திட்டமிடப்பட்ட முறையில் கட்டியுள்ளார்.சாவகச்சேரி பிரதேசம் வெள்ளத்தால் பாதிக்காமல் இருப்பதற்கு அவரால் போடப்பட்ட கால்வாய்களே காரணமாகும்.அதைவிட இந்த வெள்ளகால்வாய்கள் தென்மராட்சியின் சகல வயல்வெளிகளையும் ஒன்றாக இணைக்கின்றது.மிதமிஞ்சிய நீர்கள் தொண்டமனாற்றின் கடலேரியுடன் சங்கம்மாகின்றது.இன்றைய கிளிநொச்சியின் பிதாமகன் என்றே சொல்லலாம்.தென்மராட்சி மக்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்தியவர் குமாரசாமி.இவரைப் போன்று பதவியைப் பயன்படுத்தி தொகுதிக்கும் மக்களுக்கும் அதிக சேவை செய்த அரசியல்வாதி யாரும் இருக்கமுடியாது.அதுவும் வெறும் ஒன்பது வருடங்கள்.

திரு.வி.என்.நவரத்தினம் இருபத்தி ஏழு ஆண்டுகள் பிரதிநிதித்துவம் செய்தார்.எந்த நன்மையும் இல்லை.அவரின் சேவைக்கான எந்த அடையாளங்களும் சொல்லும்படியாக இல்லை.ஆனாலும் மக்கள் வாக்களித்தார்கள் .குமாரசாமி அந்த தமிழீழ மோக்காலத்திலும் 12000 வாக்குகளை 77 பொது தேர்தலில் பெற்றார்.

இவ்வளவு சேவைகள் செய்த குமாரசாமி தனக்கு வாக்களித்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை.எமது கிராமத்துக்கு பண்டாரநாயக்கா வாக்குறுதியளித்த வைத்தியசாலையை தனது அதிகாரத்தின் மூலம் வரணியில் நிறுவினார்.சேர்.யோன்.கொத்தலாவல அவர்களை மாட்டுக்கு மாலையிட வைத்து ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தினர்.கிளிநொச்சி குடியேற்ற திட்டங்களில் திட்டமிட்டே புறக்கணித்தார்.இதன்காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாக்குகளை திசை திருப்பி வி.என். நவரத்தினம் வெற்றிகரமாக அரசியலில் கால் பதித்தார்.இதிலிருந்து குமாரசாமியால் எழும்பவே முடியவில்லை.

எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காதபோதும் எனது சமூகத்தை பகிரங்கமாக அவமானப்படுத்தியபோதும் அவரின் சேவைகளை இன்றுவரை நினைத்து வியக்கிறேன்.அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னென்ன செய்யமுடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார்.

வடமாகாண முதலமைச்சர் ஒரு கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறினார்.ஒரு அரசியல்வாதியால் மக்கள் பிரதிநிதியாய் என்ன சமூக சேவைகள் செய்யமுடியும் என்பதற்கு வே.குமாரசாமி ஒரு உதாரணம்.உண்மையில் ஆய்வுக்கு உரிய அரசியல்வாதி எனலாம்.