வட மாகாண சபையில் சுண்டைக்காய் கால் பணம்! சுமை கூலி?

வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாமா விஜயம் பட, பாலையாவின் பாடல் என் நினைவில் வர காரணமானார், மாண்புமிகு வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன். முதல்வர் தலைமையில் அவர் அரங்கேற்றிய, மர நடுகை மாத தொடக்க விழா அரங்கேற்றத்தை தான் குறிப்பிடுகிறேன். மரம் வளப்போம் மழை பெறுவோம், பழம் பறிப்போம் பயன் பெறுவோம் என்பதில், எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதற்கு விழா எடுத்து, பணம் செலவழிப்பதில் பயன் இல்லை. உடன்பாடும் இல்லை.

மரங்கள் வளர்ப்பதன் பொருளாதார பலன் பற்றி, எந்த பிரதிபலனும் எதிர்பாராது செயல்பட்ட மண்ணின் மைந்தன், பனை மரங்களின் காதலன், வாழ்ந்து மறைந்த மண்ணில் பிறந்தவன் என்பதால் தான் என் இந்த நிலைப்பாடு. மில்க்வைற் கனகராஜா என்ற அந்த பெருமகன் எத்தனை பனை மரங்களை மண்ணில் பெருக்கினார் என்பது, இன்று அறுபது வயதில் இருப்பவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். உள்ளூர் முதலீடுகளை ஊக்குவிக்க புலம் பெயர்ந்தவரை, அண்மையில் அழைத்த முதல்வர் அன்று, உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்ட, கனகராஜா ஐயாவை அறிந்திருப்பார்.

தென்னிலங்கை பெருநிதி நிறுவனத்தின் சண்லையிற் சவர்க்காரம் கோலோச்சிய காலத்தில், சிறு முதலீட்டாளரான கனகராஜா அவர்கள், தன் மில்க்வைற் சவர்க்காரத்தை, வடக்கில் களமிறக்கி வெற்றிகரமாக நடத்தினார். கூடவே அவ்வாறான சிறு தொழில் முதலீடுகள், வடக்கில் உருவாக வேண்டும் என்ற அவரின் உந்துதலால் உருவானதே, இணுவில் நடராஜா அவர்களின் அண்ணா கோப்பி. உள்ளூர் இளையவருக்கு வேலைவாய்ப்பு மட்டுமன்றி, உள்ளூர் உற்பத்திகளுக்கும் ஊக்கம் கொடுக்கும் நோக்கில், உருவான அரஸ்கோ குளிர்பானம் கூட வடக்கை வளப்படுத்திய காலம் அது.

வல்வெட்டிதுறை சோடா என புகழ் பெற்ற, பேபி பிராண்ட் சோடாவை 25 சதம் கொடுத்து வாங்கி சுவைத்த காலம் அது. தோலகட்டி நெல்லி ரசம் நாவூற செய்த காலம். அத்தனை உற்பத்திகளும் உள்ளூர் மூல வளங்களை பெருமளவில் பயன்படுத்தி, பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க ஆரம்பிக்கப்பட்டவை. இலபா நோக்கம் இருந்த போதும் பெருவிழா எடுத்து, காசை கரியாக்கவோ அல்லது கமிசன் பெறவோ, அன்று அவை ஆரம்பிக்கப்படவில்லை. அண்ணா கோப்பி ஆரம்பத்தில் துவிச்சக்கர வண்டியில் தன் பயணத்தை ஆரம்பித்து, உறவுகள் விருப்பில் அமெரிக்கா உட்பட புலம் எங்கும் பயணித்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்த லைடன் பனியன் கம்பனி பற்றி அறியாதார் இருக்கவே முடியாது. அன்று லண்டனில் இருந்து வருபவரிடம் நாம் எதிர்பார்ப்பது, சென் மைக்கல் சேட் மற்றும் சொக்லட். ஆனால் லண்டன் திரும்பி செல்பவர் காவிச்செல்வது, லைடன் பனியன், பனங்காய் பினாட்டு, பருத்தித்துறை வடை, புங்குடுதீவு புழுக்கொடியல் மற்றும் எள்ளுருண்டை. அருந்தி மகிழ்வது றிக்கோ கோப்பி, டில்கா ஐஸ்கிரீம். கூடவே தமோதரவிலாஸ் மசாலதோசை, மலாயன் கபே வடை, சுபாஸ் கபே மட்டன்றோல் என ஒரு கட்டுகட்டிவிட்டு, மறக்காமல் ஞானம் ஸ்ரூடியோவில் நண்பர்களுடன் படமும் எடுப்பர்.

பவுண்சும் டாலரும் மக்டொனல்ட், கென்ரக்கியை அறிமுகம் செய்தாலும், எம் நாவூற செய்பவை பனங்கிழங்கு துவையல், ராசவள்ளி கிழங்கு, நயினாதீவு கூழ் மட்டுமல்ல, உடல் விரும்பும் நீடித்து உழைக்கும் பண்டத்தரிப்பு ஆடைகளும், எம்மண்ணில் தந்த இன்பம் அனுபவித்தவருக்கு மட்டுமே தெரியும். அன்று உள்ளூர் பொருட்களைவிட லண்டன் சொக்லட்டும், சென் மைக்கல் சேட்டும் தந்த மையல், புலம்பெயர்ந்து வந்த பின்தான் தெரிந்தது, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று. காரணம் இன்றும் நான் பாவிப்பது யாழ்ப்பாண முறையில் தயாரிக்கப்பட்ட மிளகாய் தூள், எந்த குளிரிலும் இரவில் அணிவது மருதமுனை சாரம்.

எம் மண்ணில் அன்று நாம் அனுபவித்த இத்தனை இன்பங்களையும் எமக்கு தந்தவர்கள், அதனை ஆரம்பித்தபோது எந்த விழாவும் எடுக்கவில்லை. தம் சொந்தப் பணத்திலோ, உறவுகளின் உதவியிலோ, அல்லது கடன்பட்டோ தம் கடும் உழைப்பினால் அவர்கள் எம் மண்ணில் ஆரம்பித்த நிறுவனங்கள், போராட்ட சூழ்நிலையால் நலிந்து போயிற்று. அதை மீள் எழுச்சி பெறச் செய்யும் கடமை மாகாண சபைக்கு உரியது. சிறுபயிர் உற்பத்திக்கான உதவி, நெல் விவசாய அபிவிருத்தி கடன், மரநடுகை ஊக்குவிப்பு என்பனவற்றை செய்ய பெருவிழா எடுத்து, செலவிடும் பணமே போதும் சிறு தொழில் முதலீடுகளுக்கு என்பது என் வாதம்.

பறை அடித்து தான் மக்கள் நலப்பணி செய்வோம் என புறப்பட்டவர் செலவழிக்கும் பணம், மக்கள் வரிப்பணம். அது மக்களுக்கு பயன்பட வேண்டுமே தவிர, அமைச்சரின் அனுசரணையாளருக்கு அல்ல. சென்ற வருட மரநடுகை நிகழ்வால் வந்த ஊழல் விசாரணை கமிசன், செயல்ப்பட முன் மீண்டும் மரம் நடும் பெருவிழா முதல்வர் தலைமையில். இதிலும் லட்சக்கணக்கான மரங்களை விநியோகிக்கும் உரிமம் தனிநபர் வசம். போரினால் பாதிப்படைந்த எம் உறவுகளுக்கு உதவுங்கள் என நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள், பாதிப்படைந்த உறவுகளிடம் மரக்கன்று விநியோக உரிமத்தை பகிர்ந்து கொடுத்தால் அவர்களும் வளம்பெறுவார், கூடவே மண்ணில் மரங்களும் வளருமல்லவா?

கோண்டாவில் பெருமகன் ஒருவர் எந்த சலசலப்பும் இன்றி, தன் சொந்தப்பணத்தில் நிலம் வாங்கி அதில் வீடுகள்கட்டி, புன்னாலை கட்டுவன் பயனாளிகள் 16 பேர் பயன் அடைந்ததை, எத்தனை பேர் அறிவர். கூடவே அவர் தன் சொந்த முயற்சியில் பலாலி வீதியில் மரம் நட்டு, பெளசர் மூலம் நீர் வார்த்து பராமரிப்பதற்கு, யாரும் விழா எடுக்கவில்லை. ஊரான் வீட்டு நெய் அதுவும் என் பெண்டாட்டி கையில் என்பதாலா, வாக்களித்த மக்களுக்கு பலன் கொடுக்கவேண்டிய பணத்தை கபளீகரம் செய்யும் செயலை, வடமாகாண சபை சூழலியல்துறை செய்கிறது.

தாம் வசதியாய் அமர பெரும் நிழல் கூடாரம் அமைத்து, தம்மை நிறைகுடம் வைத்து வரவேற்ற மாணவிகளை, புழுதி பறக்கும் சாலையில், கொதிக்கும் வெயிலில் இருமரங்கும் நிறுத்திவைத்து, மரநடுகை பெருவிழாவுக்கு வந்த பெருந்தகைகளுக்கும் அவர்கள் வழங்கிய மரங்களுக்கும், எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பாடசாலை தோறும் மரம் நடுகையை உக்குவிக்கும் செயலை செய்தால் நிச்சயம் அது பலனளிக்கும். மாறாக மாணவிகளை வெயிலில் வாட்டினால் எரிச்சலை தான் வளர்க்கும். நாம் எங்கள் எதிர்கால சந்ததியை, கல்வி கொண்டு வளப்படுத்த முனையும் வேளையில், அவர்களுக்கு பொறுப்புகளும் உணர்த்தப்பட்டால் சோலைகள் உருவாகும்.

சிறு வயதில் விவசாய பாடம் கற்றபோது தான், கூட்டெரு தயாரிக்கும் முறையை அறிந்தேன். அதுவரை வளவில் விழும் சருகுகளை கூட்டி எரிக்கும் பழக்கம் விடைபெற, பழைய தகரம் கொண்டு சதுர அடைப்பில் அன்றுமுதல், சருகுமுதல் சாணம் வரை, கிடைக்கும் கழிவுகள் கலந்து சிறிது காலத்தில் உருவான கூட்டெருவில், நெளிந்தன மண் வளமாக்கி என பெயர் கொண்ட நாக்கிளி புழுக்கள். கதலி வாழை மரம் அருகே குழி பறித்து, கூட்டெரு கொண்டு நிரப்பியதால் கிடைத்தது, கப்பல் வாழை பழ பருமனில் காதலி வாழை பழம். அன்று பாடசாலை தந்த படிப்பினை இன்றும் பசுமரத்தாணி போல நினைவில்.

வீட்டு சூழலில் முன்னேற்றம் வேண்டும் என்றால், அதனை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். சமூகத்தில் மாற்றம் வேண்டும் என்றால் இளையவரை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை வழிநடத்தவும் வேண்டும். அப்படி செய்தால் தாங்கள் இந்த சமூகத்தின் அங்கம் என்ற நிலையில் வீணடிப்புகள் தடுக்கப்படும், பெரு விழாக்கள் தவிர்க்கப்படும். மாறாக மாகாண சபை நிதியை கமிசன் பெறும் நோக்கில் வீணடித்தால், ஊழல் விசாரணை கமிசன் வைப்பதிலேயே மீதமுள்ள இரண்டு வருடங்களும் கடந்து போகும். சுருட்டியது வரை லாபம் என்பவர் சிலவேளை ஒதுங்குவார் என நினத்தாலும், அரிப்பெடுத்த கையை சொறியத்தான் செய்வர்.

(ராம்)