வறுமையை முற்றாகவே ஒழித்துக் கட்டியது சீனா

குய்ஷூவில் இருந்த ஒன்பது மாவட்டங்களிலும் ஒட்டுமொத்த வறுமை பூச்சிய சதவீதத்துக்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், அந்த மாவட்டங்களில் வாழ்பவர்கள் மத்தியில் திருப்திநிலை 99 சதவீதமாக இருப்பதாகவும் நவம்பர் முற்பகுதியில் மூன்றாம் தரப்பு நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட மதீப்பீடு ஒன்று வெளிக்காட்டுவதாக மாகாண வறுமை ஒழிப்பு மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பணிப்பாளர் லீ ஜியான் செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார்.

இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வறிய மக்களின் வருடாந்த சராசரி நிகர வருமானம் 11,487 யுவான்களாக ( சுமார் 1740 அமெரிக்க டொலர்) உயர்ந்திருக்கிறது. இவ்வருடம் தேசிய வறுமைக்கோடான 4,000 யுவான்களை விடவும் இது கணிசமானளவுக்கு அதிகமானதாகும் என்றும் லீ கூறினார்.

முற்றுமுழுதான வறுமையை 2020 இறுதியளவில் ஒழித்துக் கட்டுவதற்கு சீனா உறுதி பூண்டிருக்கிறது. 2019 இறுதியில் நாட்டின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தெற்கில் 52 மாவட்டங்கள் தொடர்ந்தும் வறுமைப்பட்டியலில் இருந்தன. நவம்பர் ஆரம்பத்தில் சின்ஜியாங் உய்குர் சுயாட்சி பிராந்தியம், குவாங்சி ஷுவாங் சுயாட்சி பிராந்தியம், நிங்சியா ஹுய் சுயாட்சி பிராந்தியம் மற்றும் யுனான், சிச்சுவான், கான்சு மாகாணங்களில் உள்ள சகல வறிய மாவட்டங்களுமே வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டன.

மாகாண மட்ட பிராந்தியங்களில் மிகப் பெரிய வறுமைப்பட்ட சனத்தொகையைக் கொண்டதாக விளங்கிய குய்ஷூ 2012 ஆம் ஆண்டிலிருந்து 90 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை வறுமையில் இருந்து விடுவித்திருக்கிறது.

“வறுமையானால் பீடிக்கப்பட்டிருந்த சகல மாவட்டங்களும் வறுமைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை சீனா பல நூற்றாண்டு கால கடுமையான வறுமைப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று குய்ஷூ சமூக விஞ்ஞான அகாடமியின் ஆராய்ச்சியாளரான காவோ காங் கூறினார்.

வறுமைப் பட்டியலில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒன்று யான்ஹி ருஜியா சுயாட்சி மாவட்டமாகும். ஒக்டோபர் பிற்பகுதியில் யான்ஹியில் உள்ள பியான்ஜியாங் கிராமவாசியான ஷென் மாவோஃபூ வறுமையில் இருந்து தனது குடும்பம் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றில் கைச்சாத்திட்டார்.

கடந்த சில வருடங்களாக வறுமை ஒழிப்பு முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், போக்குவரத்து ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டதன் விளைவாக மீன்பிடி, கோழி வளர்ப்பு மற்றும் தொழில்துறைகள் கிராமத்தில் வளர்ச்சியடையத் தொடங்கின.அதன் மூலமாக கிராமவாசிகளுக்கு முன்னரை விடவும் வருவாய் கிடைத்தது.

முற்றுமுழுதான வறுமை இவ்வருடம் ஒழிக்கப்பட்ட நிலையில், நிலைபேறான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சித் திட்டத்தின் வறுமைக் குறைப்பு இலக்கை 10 வருடங்கள் முன்கூட்டியே சீனா அடையும்.

சீனாவில் 40 வருடங்களுக்கும் அதிகமான கால சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தபோக்கு 70 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் இருந்து விடுவித்து உலகளாவிய வறுமைக்குறைப்புக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. வறுமைக்குறைப்பில் சீனாவின் வெற்றியை பெரிதும் பாராட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸ் “சாதனைகள் மிகவும் உறுதியானவை” என்று வர்ணித்திருக்கிறார்.

இதேவேளை சீனாவின் வறுமைப் பட்டியலில் இருந்து வறுமையால் பீடிக்கப்பட்ட மாவட்டங்கள் சகலதும் நீக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல்லாகும் என்று கூறியிருக்கும் இலங்கை நிபுணர் ஒருவர், சீனாவின் இந்த அனுபவத்தில் இருந்து முற்றுமுழுதான வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள நாடுகள் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேணடும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

“இந்த சாதனை சீனாவின் அபிவிருத்தி அல்லது சீனப் பண்புகளுடனான சோசலிசப் பாதையின் பயனுடைத் தன்மைக்கான அறிகுறியாகும்” என்று கொழும்பில் தலைமையகத்தைக் இயங்கும் “பாத்ஃபைண்டர்” கொள்கை ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் லகஷ்மன் சிறிவர்தன கூறினார்.

“முற்றுமுழுதான வறுமையினால் பீடிக்கப்பட்ட கொத்தணிகளைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அபிவிருத்தியடைந்த நாடுகளும் சீனாவின் அபிவிருத்தி அனுபவங்கள், குறிப்பாக வறுமை ஒழிப்பில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று சிறிவர்தன கூறினார்.

-குயியாங்
( சின்ஹுவா)