வெனிசுவேலா: கலையும் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கனவுகள் அழகானவை; பல சமயம் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி நினைத்ததிலும் அதிகமாகலாம். கனவு தரக்கூடிய மகிழ்ச்சியை நனவு மறுக்கிறது. ஆனால், கண்ட கனவை நனவாக்கிச் சாதித்தவர்களும் இப் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் வாழ்கிறார்கள். சாத்தியமற்றதாய்த் தெரிவதைச் சாத்தியமாக்குவதற்கான வித்து கனவிலேயே விதைபட்டு நனவில் அறுவடையாகிறது. கண்ட கனவு கண்முன்னே கரைந்து மெல்ல மெல்லக் கலைவதைக் காண்பது வேதனையானது.

வெனிசுவேலா பெரிய நெருக்கடியில் உள்ளது. தொடர்ந்து சரியும் எண்ணெய் விலைகள் உலகின் முக்கியமான எண்ணெய் உற்பத்தி நாடாகிய வெனிசுவேலாவைக் கடுமையாகப் பாதித்துள்ளன. வெனிசுவேலாவில் நிலவும் பொருளாதார மந்தமும் அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்களின் எதிர்ப்பும் அந்நாட்டின் அதி பிரபலமான ஜனாதிபதியாக இருந்து மறைந்த ஹியூகோ சாவேஸின் ‘பொலிவாரியக் கனவின்’ முடிவைக் காட்டுகின்றன.

21 ஆம் நூற்றாண்டில் இடதுசாரி அலையை தென்னமெரிக்கா எங்கும் எழுப்பிய பிரதான அரங்காடியாகத் தென்னமெரிக்காவின் முதன்மையான நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவின் வகிபாகம் முக்கியமானது. அமெரிக்காவின் கொல்லைப்புறம் எனப்பட்ட தென் அமெரிக்கா, அமெரிக்காவின் கைப்பொம்மை அரசுகளற்று அமைந்த 1990களின் தொடங்கிய இடதுசாரி மீள்எழுச்சியால் தோன்றியது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் தென்னமெரிக்காவில் ஏற்பட்ட இடதுசாரி எழுச்சியால் வெனிசுவேலா, பொலிவியா, நிக்கராஹுவா, சிலி, பிரேசில், ஈக்குவடோர், ஹெய்ற்றி போன்ற நாடுகள் தமக்கான சுய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்துச் சொந்தக் கால்களில் முன்னேற முனைந்துள்ளன. அமெரிக்காவின் காவலர்கள் போன்று தென்னமெரிக்க நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடத்திய பிற்போக்குக் குழுக்கள் அடுத்தடுத்துச் சரிந்தன. இது இடதுசாரி இயக்கங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. இப் பின்னணியிலேயே ஹியூகோ சாவேஸின் வருகை நிகழ்ந்தது.

2006 ஆம் ஆண்டிலிருந்து தென் அமெரிக்காவில் வீசிவந்த இடதுசாரி அலை உலக வரலாற்றில் முக்கியமானது. வழமைக்கு மாறாக, சோசலிச இடதுசாரிகள் தேர்தல்கள் மூலம் பதவிக்கு வந்தார்கள். அது வெறுமனே ஒரு தொழிற்சங்கச் செயற்பாட்டாலோ குறித்த ஒரு பிரச்சினையை முன்வைத்த ஓர் இயக்கத்தாலோ விளைந்ததல்ல. மாறாகப் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களாலேயே பல தென்னமெரிக்க நாடுகளில் இடதுசாரிச் சார்பாளர்கள் ஆட்சிக்கு வந்ததுடன், தங்கள் ஆட்சிகளைத் தொடர்ந்து தக்கவைத்தனர். அதற்கு முந்திய பல தசாப்தங்களாகத் தென்னமெரிக்காவை அமெரிக்க ஆசியுடைய சர்வாதிகார ஆட்சிகள் நிரப்பின. நவகொலனியமும் தாராண்மைப் பொருளாதாரமும் தென்னமெரிக்க மக்களைப் பாடாய்ப்படுத்தின. அளவற்ற வளச்சுரண்டல்களை மேற்கொண்ட பல்தேசியக் கம்பெனிகள் பல தென்னமெரிக்க, மத்திய அமெரிக்க அரசுகளை நேரடியாகக் கட்டுப்படுத்தின. குறிப்பாக மத்திய அமெரிக்க நாடுகளில் வாழைத் தோட்ட உடைமைக்காரக் கம்பெனிகள் அந்நாடுகளை மறைமுகமாக நிர்வகித்தன. அதனாலேயே வாழைக் குடியரசு என்ற பதம் உருவானது. இப் பின்னணியில் தென்னமெரிக்க மக்கள் பல தடைகளையும் உடைத்துத் தங்கள் வாக்குகளால் மக்கள்நல ஆட்சினை நிறுவினார்கள். இது தென்னமெரிக்க வரலாற்றில் முக்கியமான திசைமாற்றமாகும்.

வெனிசுவேலா உலகின் எண்ணெய் உற்பத்தியில் மூன்றாமிடத்தில் இருக்கும் நாடாகும். அதன் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக எண்ணெய் இருக்கின்றது. தென்னமெரிக்காவின் முக்கிய சக்தியாக வெனிசுவேலா உருவெடுத்ததில் ஹியூகோ சாவேஸின் பங்கு பெரிது. சாவேஸின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் அமெரிக்க ஆதிக்கத்திற்கெதிரான சக்திகளை ஒன்றிணைத்தலும் பரஸ்பர ஒத்துழைப்புக் கொள்கையும் மூன்றாமுலக நாடுகளிடையே அவருக்குச் சிறப்பான இடத்தை வழங்கின. ஏகாதிபத்தியத்திற்கெதிரான ‘பொலிவாரிய மாற்றை’ முன்மொழிந்த அவரது திட்டத்தின் பிரதான ஆயுதமாக வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் இருந்தது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை நாட்டுடமையாக்கி எண்ணெய் வருமானத்தின் மூலம் தனது நோக்கத்தைச் சாதிக்க விழைந்தார். எண்ணெய் மூலம் பெற்ற தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், சுகாதாரம், உணவு, கல்வி முதலான சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவரானார். அவ்வகையில் அவரது பொலிவாரிய மாற்றின் அடிப்படை எண்ணெய் வருமானமாகும்.

தென்னமெரிக்காவின் இடதுசாரி எழுச்சி முக்கியமான மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. இடதுசாரிச் சார்பான அரசாங்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துழைக்கின்றன. மக்கள் நலத்திட்டங்களை இணைந்து முன்னெடுக்கின்றன. 2005இல் கியூபாவும் வெனிசுவேலாவும் இணைந்து ‘அற்புத நடவடிக்கை’ என்ற திட்டமொன்றுக்கு உடன்பட்டன. அதன்படி, கியூபாவிற்கு வெனிசுவேலா வழங்கும் எண்ணெய்க்கு ஈடாகக் கியூபக் கண் மருத்துவர்கள் வெனிசுவேலாவின் வறிய கண் நோயாளர்கட்கு மருத்துவம் வழங்குவர். இத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 35 நாடுகளில் 18 இலட்சத்திற்கும் அதிகமானோரின் கண் பார்வைப் பிரச்சினைகள் கியூப மருத்துவர்களால் களையப்பெற்று, அவர்களுக்குக் கண் பார்வை மீண்டுள்ளது. 1967 இல்
சேகுவேராவைக் கொன்ற பொலிவிய இராணுவ வீரரான மரியோ தெரனுக்கும் கியூப மருத்துவக்குழுவே கண் பார்வையை மீட்டுக்கொடுத்தது. இதைப் பற்றிக் கியூப அரசு ‘கிரான்மா’ பத்திரிகையில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தது: ‘இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு மாபெரும் கனவை சிதைக்க மரியோ தெரோன் முயன்றார். இன்று சே மீண்டு வந்து இன்னொரு வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இன்று வயது முதிர்ந்த தெரனுக்கு நீலவானத்தையும் பச்சைக் காடுகளையும் காணவும் அவரது பேரப் பிள்ளைகளின் முகத்தில் தவழும் முறுவலை ரசிக்கவும் வழிசெய்துள்ளார்’. எண்ணெய் வெனிசுவேலாவை உலக அளவில் முக்கியத்துவமுடைய நாடாக உருமாற்றியது.

எண்ணெய் வளம் என்பது வெனிசுலாவின் தனிப்பட்ட பொக்கிஷமோ பொன் முட்டையிடும் வாத்தோ அல்ல; அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரமுமல்ல. எண்ணெய் வளம்மிக்க வெனிசுவேலா முதல் நைஜீரியா வரை, உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகி பல்லாயிரம் கோடி வருவாய் குவிந்த போதிலும், அந் நாடுகளில் ஏற்றத்தாழ்வுகளும் சமூக அவலங்களும் நீங்கவில்லை.

வெனிசுவேலாவின் ஏற்றுமதி சார்ந்த எண்ணெய் உற்பத்தி விரிவாக்கம் உலகப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். உலகப் பொருளாதாரமே எண்ணெய் விலைகளையும் கேள்வியையும் தீர்மானிக்கின்றன. எனவே, நீண்டகாலத்தில் தன்னிறைவான பொருளாதாரத்தையும் நட்பு நாடுகளுடன், குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளுடன் இணைந்து வெனிசுவேலா சுய சார்புப் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதன் அவசியம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

சுயசார்பான தேசிய பொருளாதாரத்தின் அடித்தளம் விவசாயம். பின்தங்கிய ஏழை நாடான வெனிசுவேலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும் விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் சிறுதொழில் உற்பத்திக்கு முன்னுரிமையும் வழங்குமாறு வற்புறுத்தப்பட்டது. எவ்வாறோ, சாவேஸ் எண்ணெய் விற்பனையை அதிகரித்து உலகப் பொருளாதாரச் சங்கிலியில் இருந்து வெனிசுவேலாவை விடுவிக்கலாம் என எதிர்பார்த்தார். அவரது பொருளாதாரத் திட்டங்கள் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதிலேயே கவனங்குவித்தன.

எண்ணெய் வருமானத்தை மையப்படுத்திய பொருளாதார வகைமாதிரி முக்கிய விடயங்கள் சிலதைச் சாதித்தது. உழைக்கும் மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாகப் பெண்களின் உரிமைகளை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தியதோடு, வீட்டைக் கவனிக்கும் பெண்களுக்கு முதுமையில் ஓய்வூதியம் வழங்கும் ஒரே நாடாக வெனிசுவேலா அமைந்தது. ஒத்த பணிகளிலுள்ள ஆண்களுக்குச் சமமாக ஊதியம் பெறும் உரிமையும் குழந்தைப்பேற்றுக் காலத்தில் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெறும் உரிமையும் பெண்களுக்கு உறுதியாகின. சாவெஸின் பத்தாண்டுக் கால ஆட்சியில் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 60 சதவீதத்தால் அதிகரித்தது. மக்களினது அடிப்படைத் தேவைகளில் பெரும்பாலானவை நிறைவுபெற்றன. அல்பா என்னும் அமெரிக்காவிற்கு மாற்றான பொலிவாரிய அமைப்பு, அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான வலுவான அமைப்பாக பிராந்திய ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் கட்டிவளர்க்க முன்னின்றது. அதை உருவாக்கித் தலைமைத்துவத்தை வழங்கியதில் சாவேஸின் பங்கு முதன்மையானதும் முக்கியமானதுமாகும். இந் நிலையில் சாவேஸின் மரணம் இடியாக இறங்கியது.

சாவேஸைத் தொடர்ந்து வெனிசுவேலாவின் ஜனாதிபதியான நிக்கலஸ் மடூரோ தொடர்ச்சியான சவால்களை எதிர்நோக்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு 100 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்ட எண்ணெய் பரல் ஒன்றின் விலை 2014இல் 88 டொலராகி 2015இல் 44 டொலராகி 2016 பெப்ரவரியில் 24 டொலராகியது. மிக மோசமாகச் சரிந்த எண்ணெய் விலைகள் வெனிசுவேலாவின் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளியது. உலகச் சந்தையை மையப்படுத்திய ஏற்றுமதியில் தங்கியுள்ள பொருளாதாரங்கள் அனைத்தும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும். வலுவான தேசிய பொருளாதாரமொன்றை எண்ணெய் ஏற்றுமதியில் தங்கியிராத வகையில் உருவாக்கத் தவறியதன் பலனை இன்று வெனிசுவேலா அனுபவிக்கிறது.

வெனிசுவேலாவின் இந்நிலை தென்னமெரிக்கப் புரட்சிகர சக்திகளுக்கு ஒரு பின்னடைவாகும். இன்று அமெரிக்கா மெதுமெதுவாக தென்னமெரிக்கக் கண்டத்தில் தனது அதிகாரத்தை மீள நிலைநிறுத்துகிறது.

ஆர்ஜென்டீனா, சிலி, பிரேசில் என வலதுசாரி அரசுகள் மீண்டும் எழுகின்றன. வெனிசுவேலாவில் இவ்வாறான ஆட்சிமாற்றம் பாரியதொரு குறியீடான வெற்றியாகும் என அமெரிக்கா நன்கறியும். எனவே எதிர்ப்புரட்சி சக்திகள் வெனிசுவேலாவில் முனைப்புடன் செயலாற்ற அது உதவுகிறது.

தென்னமெரிக்காவின் முற்போக்கு அலை முடிவதற்கான வழியைத் திறந்துவிடப் பல காரணிகள் பங்காற்றியுள்ளன. அடுத்தடுத்து ஏற்றுமதிகள் குறைந்த மூன்றாவது வருடமான 2015இல் தென்னமெரிக்க ஏற்றுமதிகள் மூன்றில் ஒன்றால் குறைந்துள்ளன. இது இந்நாடுகளின் பொருளாதாரததைப் பாதித்துள்ளது. இந்நாடுகளின் முக்கியமான வணிகப் பங்காளியான சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தம் இன்னொரு காரணியாகியது. வேளாண் எரிபொருட்களுக்கான கேள்வி எதிர்பார்த்தளவு இல்லாத நிலையில் அதன் மீதான மூலதனம் முடங்கியதோடு நட்டமும் ஏற்பட்டது. இவை முற்போக்கு ஆட்சிகளைக் கொண்ட தென்னமெரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தேங்கச்செய்தன.

வெனிசுவேலா தென்னமெரிக்காவின் முற்போக்கு அலையைக் குறிக்கும் அடையாளமாகும். அங்கு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த 2002 முதல் விடாது முயன்ற அமெரிக்கா இப்போது அது சாத்தியமாகும் வாய்ப்பைத் தவறவிட விரும்பாது. பிரேசிலில் டிவ்மா ரூசுப் ஜனநாயக் கட்டமைப்புக்குள் வஞ்சகமாகப் பதவி விலக்கப்பட்டதைப் போல மடூராவும் பதவிநீக்கப்படலாம். ஹியூகோ சாவேஸின் ‘பொலிவாரியக் கனவு’ நிறைவேறாமலே போகலாம். எனினும் பொலிவாரியத் திட்டமும் அதையொட்டி அமைந்த தென்னமெரிக்க முற்போக்கு சக்திகளின் எழுச்சியும் ஏற்படுத்திய தாக்கம் நீண்டகாலம் நிலைக்கக் கூடியது.

உலக வரலாற்றில் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்த தென்னமெரிக்க மக்கள் இப்போது விழிப்புற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கி விட்டனர். அதை இயலுமாக்கியவை தென்னமெரிக்க நாடுகளில் உருவான இடதுசாரி அரசாங்கங்களே. அவை ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி நவதாராளவாதத்தை நிராகரிக்கின்றன. வளங்களும் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டு அரசுடைமையாகின்றன. சர்வதேச நாணய நிதியம் தென்னமெரிக்காவில் தனது இரும்புப் பிடியை இழந்துவிட்டது. இது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உற்சாகமளித்திருக்கிறது. தென்னமெரிக்க, கரீபியன் நாடுகளில், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, அலை மேல் அலையாக எழுந்தவாறுள்ளது. தென்னமெரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டிக் கொள்ளையிட்ட வரலாறு தற்போது தடுத்துநிறுத்தப்படும் கட்டத்தை எட்டியுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவின் பழங்குடி மக்கள் முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்டு தொடர்ச்சியாகப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாரம்பரிய நிலங்களுக்காகவும் வளங்களுக்காகவும் தீரம்மிக்க போராட்டங்களை மேற்கொள்கிறார்கள். இந்த எழுச்சியை உருவாக்கியத்தில் வெனிசுவேலாவினதும் இலத்தீன் அமெரிக்காவெங்கும் வீசிய இடதுசாரி அலையும் குறிப்பிட்டத்தக்க பங்களிப்பபை ஆற்றியுள்ளது.

இது கனவின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. வெனிசுவேலா முன்மொழிந்த ‘பொலிவாரிய மாற்று’ கனவாகவே போனாலும் அதற்காக முயன்ற மக்களின் மீளெழுச்சியும் போராட்டகுணமும் தொடர்ந்தும் நிலைக்கும். பொலிவாரியக் கனவு விட்டுச்செல்லும் மரபும் சொல்லிச் செய்யும் செய்தியும் தெளிவானவை.

போராடுவோம்; மார்க்கம் வேறில்லை; போக்கிடம் எதுவுமில்லை.