வெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா?

இந்த இக்கட்டான நிலைமையை, தாங்கள் அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிக் கொண்டே, இதை அரசியலாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான தரப்புகள் ஈடுபட்டிருக்கின்றன. இந்த அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகள் ஒன்று இரண்டல்ல; அந்தப் பட்டியல் நீளமானது.

இதை வைத்து அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகளில், சிங்களத் தரப்புகள் இருக்கின்றன. தமிழ்த் தரப்புகள் இருக்கின்றன. ஏன் முஸ்லிம் தரப்புகளும் இருக்கின்றன. அதுபோலவே, பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவாத அமைப்புகளும், தரப்புகளும் கூட இருக்கின்றன. அவற்றுக்கு அப்பால், தனிப்பட்ட பொருளாதார, வணிக நலன்களுக்காக இதனை அரசியலாக்கும் தரப்புகளும் இருக்கின்றன.

இவ்வாறான தரப்புகளுக்கு மத்தியில், இதை உச்சக்கட்டமாக அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தரப்பாக இன்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பது, கோட்டாபய ராஜபக்‌ஷவும், அவரை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தவுள்ள மஹிந்த தரப்பும் தான்.

பொதுவாகவே எதிர்க்கட்சி என்றால், அரசாங்கத்தை விளாசித் தள்ளுவது வழக்கம். அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் குறைபாடுகளையும் தவறுகளையும் வைத்துப் பிழைப்பு நடத்துவது தான் எதிர்க்கட்சியின் அரசியல்.

அந்த வகையில், மஹிந்த தரப்பு, இந்தக் குண்டுத் தாக்குதல்களை வைத்து, அரசாங்கத்துக்கு எதிரான, மிகமோசமான அரசியலைச் செய்யத் தொடங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

இந்தத் தாக்குதலை அடுத்து, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகனும் மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான விதுர விக்கிரமநாயக்க, பாரதூரமான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“நாட்டை முப்படையினரிடம் ஒப்படைத்து விட்டு, தேர்தலை நடத்த வேண்டும்” என்று அவர் கோரியிருந்தார். இலங்கைக்கு என்று, ஓர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது; மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, நாடாளுமன்றம், அரசாங்கம் எல்லாமே இருக்கின்றன. இந்த வழிமுறைகள் தான் நாட்டின் அரசாங்கத்தை நடத்துவதற்கானது. இதில் எதிலுமே இடமில்லாத முப்படைகளிடம், ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து, ஜனநாயகத்தில் இருந்து, இராணுவ ஆட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்வதற்கான உத்தியா என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.

அதுபோலவே, இதுவரைக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றிப் பூடகமாகவும் பிடிகொடுக்காமலும் பேசி வந்த கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான், வெற்றி பெற்றால், இஸ்லாமியத் தீவிரவாதத்தை அடக்குவேன் என்றும், நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவேன் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

குண்டுத் தாக்குதல்களை அடுத்து, நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற உணர்வை அவரும், அவருக்குப் பின்னால் உள்ள தரப்புகளும், தமக்கான அரசியல் தளமாக மாற்றிக் கொள்ள முனைந்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசியல் பிரவேசம் இந்தத் தாக்குதலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலானது, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அல்லது மஹிந்த தரப்புக்குச் சாதகமான நிலை ஒன்றையே தோற்றுவித்திருந்தது. புலிகளை அழித்து, நாட்டில் ஏற்படுத்திய அமைதியான சூழல் கேள்விக்குறியாக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்பம், அவர்களைப் பொறுத்தவரை வசதியானது.

அரசாங்கத் தரப்பை மட்டம் தட்டி, செயலற்றவர்களாக விமர்சனம் செய்து, சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பலவீனமே, சிறுபான்மையினர் மத்தியில் உள்ள அவர் பற்றிய அச்சம் தான். சிறுபான்மையின வாக்குகள் அவருக்குக் கிடைக்காது என்ற பொதுவான கருத்து, மஹிந்த அணியில் உள்ள குமார வெல்கம, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களால் கூட கூறப்பட்டு வந்திருக்கிறது. தனியே சிங்கள மக்களின் வாக்குகளால், தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.

கடந்தமுறை மஹிந்த ராஜபக்‌ஷவின் காலை வாரிய நகர்ப்புற நடுத்தர வர்க்க சிங்களவர்கள், தன்னை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வைப்பார்கள் என்று அவர் நம்பினார்.

அந்த நம்பிக்கையை இந்தத் தாக்குதல்கள் இன்னும் வலுப்படுத்தி இருக்கின்றன.

நீர்கொழும்பு, தேவாலயத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ சென்றபோது, அங்கிருந்தவர்கள் “அப்பாவை (மஹிந்த) விரைவில் ஆட்சிக்கு வரச் சொல்லுங்கள்” என்று கேட்டதாக செய்திகள் வெளியாகின. இது மஹிந்த தரப்புக்கு வாய்ப்பானது.

இந்தக் கருத்தில் இருந்து, மஹிந்தவின் ஆட்சியில் தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று, நகர்ப்புற சிங்கள மக்கள் நம்புகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய வெற்றியைப் பெறுவதற்கான வழியை, இந்தத் தாக்குதல்கள் திறந்து விட்டிருக்கின்றன என்றே கூற வேண்டும்.

இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டே கோட்டாபய ராஜபக்‌ஷ தனது அரசியல் பிரவேசம் பற்றிக் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதுமாத்திரமல்ல, கோட்டாபய ராஜபக்‌ஷ மீண்டும் யுத்தவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடந்த 21ஆம் திகதிக்கு முன்னரும் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் தான் இருந்தார். அதில் வெற்றி பெறுவதற்கு அவர் வகுத்திருந்த திட்டங்கள் வேறு.

நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தான் அவரது பிரதான இலக்காகக் கருதப்பட்டது. அதற்காக அவர், புலமைத்துவம் கொண்டவர்களையும் நிபுணர்களையும் தன்னை நோக்கி ஈர்க்கத் தொடங்கினர். ‘எலிய’, ‘வியத் மக’ போன்ற அமைப்புகளின் ஊடாக, ஒரு தொழிற்திறன் வாய்ந்த ஆட்சியை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி வந்தார்.

ஆனால், திடீரென அவரது, அரசியல் இலக்கு மாற்றம் பெற்றிருக்கிறது. அதுவும், அவருக்கு நன்கு பரிச்சயமான, சாதகமான திசையில் மாற்றம் பெற்றிருக்கிறது என்பது தான் கவனிக்கத்தக்க விடயம். கோட்டாபய ராஜபக்‌ஷ எதனை வைத்து சிங்கள மக்களின் கதாநாயகனாக மாறினாரோ, அதே சூழல் அவருக்கு இப்போது வாய்த்திருக்கிறது. இது எதிர்பார்த்ததா, எதிர்பார்க்காததா என்பது கேள்விக்குரியது.

புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றி தான் கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பிரபலப்படுத்தியது. அதை மூலதனமாக வைத்தே, அவர் அரசியலிலும் இறங்கவுள்ளார்.

இப்போது அவருக்கு, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற துருப்புச் சீட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. அதனையே அவர் ஜனாதிபதித் தேர்தலில் முதன்மையான பிரசாரமாகப் பயன்படுத்துவார் என்பதை, அவரது ‘ரொய்ட்டர்ஸ்’ செவ்வியே கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது.

இங்கு தான் அவருக்கு சிக்கல் ஒன்றும் தோன்றியிருக்கிறது. எந்த இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான போரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ திட்டமிட்டிருக்கிறாரோ, அதே விடயம் தான் அவருக்குப் பாதகமானதாகவும் இருக்கிறது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஐ.தே.க அவருக்கு எதிராகப் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

அதுவும், அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் ஊட்டி வளர்க்கப்பட்டமை தொடர்பான ஆதாரங்களை ஐ.தே.கவினர் முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ மாத்திரமன்றி, அதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் கூட, தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காக, முஸ்லிம்களைப் பயன்படுத்தின.

இராணுவப் புலனாய்வு அமைப்புகளில் முஸ்லிம்களுக்கு அதிக இடமளிக்கப்பட்டது. இப்போது அதுகூட பாதகமாக மாறியிருக்கிறது. போர் முடிந்த பின்னர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்ததோடு, பௌத்த அடிப்படைவாதிகளையும் பலப்படுத்தினார்.

பௌத்த அடிப்படைவாதத்தைப் பலப்படுத்த எடுத்த நடவடிக்கை தான், 2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், மஹிந்தவைத் தோற்கடிக்க முடிவு செய்தமைக்குக் காரணம்மாகும்.

கோட்டாபய ராஜபக்‌ஷ இப்போது சிறுபான்மை வாக்குகளைப் பெறமுடியாத நிலையில் இருக்கும் போது தான், இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் இப்போது, கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் பகையாளிகள் ஆக்கியிருக்கிறது. வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இது சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

எப்படியென்றால், சிங்கள கிறிஸ்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணருகின்றனர். அவர்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவின் மூலம், தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று எண்ணுகின்ற நிலை ஏற்படலாம்.

அந்த நிலையானது, சிங்கள வாக்குகளால் மாத்திரம் வெற்றியைப் பெறுகின்ற கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்திக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.

இப்படியான நிலையில் தான், இந்தக் குண்டுவெடிப்புகள், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியை மய்யப்படுத்தியதா அல்லது இந்தக் குண்டுவெடிப்புகளை மய்யப்படுத்தி அவரது அரசியல் எழுச்சி தோற்றம் பெறுகிறதா என்ற கேள்வி எழும்புகிறது.