வேலையற்ற பட்டதாரிகள்! அரசின் தீர்வு?

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப் போராட்டங்களின் தொடர்சியாக கடந்த வாரம் கொழும்பில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரசாங்கத்திடம் முன்வைத்த காலக்கெடு முடிவடைந்த நிலையிலேயே இவ் ஆர்ப்பட்டத்தினை நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி முன்னேற முற்பட்ட வேளையில் அங்கு பெரும் களோபரமும் இடம்பெற்றது. இவ்வாறாக வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் நாட்டில் தொடர்ச்சியாக அதாவது ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஓர் முறையேனும் பல்கலைக் கழகங்களில் இருந்து வெளியேறிய பட்டதாரிகள் வீதிக்கு இறங்கி வேலை வாய்ப்புக்களுக்காக போராட வேண்டியுள்ளது.

பட்டதாரிகள் அரச உத்தியோகத்தினைப் பெற்றுக் கொள்வது மன உலைச்சலுடனும் போராட்டங்களுடனும் தான் என்ற நிலையே நீடிக்கின்றது. இவற்றுக்குக் காரணம், பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைத்தகு கொள்கை ஒன்று இல்லாது இருப்பதுவே ஆகும். இக் கறைபடிந்த குறைபாட்டினை நிவர்த்திப்பதற்கு தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது கேள்வியாகும்? கடந்த வருட இறுதியில் வேலையற்ற பட்டதாரிகள் விடுத்திருந்த கோரிக்கைகளுக்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினுடாக குழு ஒன்றை தாபித்திருந்தார். அரச முகாமைத்துவம், நிதி, மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கிய குழு, அமைச்சுக்கள் மற்றும் அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்களில் நிலவும் பணிநிலை வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டியிருந்தது. அத்துடன் வேலையற்ற பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

இதன் அடிப்படையில், அரசாங்கத்திடம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் சமகால விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றுள்ளது. எனினும் நடைமுறைப்படுத்தல்களையே காணவில்லை எனலாம். அரசாங்கத்தினால் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் தேசிய கொள்கைத்திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான நிரோசன் பெரேரா, தயாரிக்கப்பட்ட அறிக்கையினை இருவாரங்களில் பிரதமரிடம் கையளிப்பதாக ஜனவரியில் தெரிவித்திருந்தார். மேலும் கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா, அரச தொழில் வாய்ப்புக்கள் மாத்திரமன்றி தனியார் மற்றும் சுயதொழில் முயற்சிகளிலும் வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

வேலையற்ற பட்டதாரிகள் விடயத்தில் குறுங்காலத் தீர்வாகவே தாம் முன்வைப்பதாகவும் அவர் விபரித்திருந்தார். இவ்வாறாக அரசாங்கத் தரப்புத் தகவல்களை வைத்து நோக்கும் போது, வேலையற்ற பட்டதாரிகளின் எரிகின்ற பிரச்சினைக்குத் தீர்வு முன்வைப்பதற்காக அரசாங்கம்; சில குறுங்கால தீர்வுகளை முன்வைக்க முடியும். அது சமகாலத்தில் அரசுக்கெதிரான வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பினை இல்லாதாக்குவதாக அமையும். எனினும் மீண்டும் மீண்டும் உருவாகும் ஓர் பிரச்சினையாக வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம் நாட்டில் உள்ள நிலையில,; இதற்கு என நிலைத்தகு தீர்வு என்பது பற்றி ஆராய்ந்து செயற்படுத்துவது முக்கியமானதாகும். நாட்டில் வருடாவருடம் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்களுக்கான மூலங்களின் அடிப்படையில், பட்டப்படிப்புக்களில் நிலவும் குறைபாடுகள் சீராக்கம் செய்யப்படவேண்டியுள்ளது.

தொழில் சந்தைக்கு ஏற்றதும் இன நல்லிணக்கம், அபிவிருத்தி, என பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்தக்கதாக கல்வி வடிவமைக்கப்படவேண்டியுள்ளது. இதற்கான கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இது முக்கியமானது. இன்றைய நிலையில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் கணிசமான தொகையினர் அரசாங்கத்திடமே வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் துரதிஸ்ட முறைமைதான் காணப்படுகின்றது. பட்டதாரிகளைப் பொருத்தளவில் தனியார் துறையினர் மீதான ஈடுபாடு குறைவாகவுள்ளது. காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த எமது மக்களின் மனநிலை “கோழி மேய்த்தாலும் கவர்மண்ட் இல் தான் கோழி மேய்க்க வேண்டும்” என்ற சிந்தனையுடன் இருப்பதை பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் உதவிகேட்டு வருபவர்களில் அதிகப்படியானவர்களின் மனநிலை இது தான் என ஒரு தடவை பொது மேடையில் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு கண்டு கொள்ளத்தக்கது.

இதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. அரச பணி என்பதே, இன்று பல இடங்களில் அங்கீகாரத்திற்கு உரியதாகவுள்ளது. சம்பள விடயங்கள், ஓய்வூதியம், விடுமுறை விடயங்களில் தனியார் துறையினர் போதிய சட்ட திட்டங்களைப் பேணுவேராக இல்லை. தனியார் துறையில் பணியாற்றுவோரது தொழில் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந் நிலையில், அரசாங்கம் தனியார் துறையினை வலுப்படுத்துதலும் அவசியமாகும். இருக்கின்ற சட்டங்களை உரியவாறு நடைமுறைப்படுத்த வேண்டும். அண்மையில், தேசிய அடையாள அட்டையில் தொழில் பெயரை நீக்குவதற்கு முயற்சிகள் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. உடனடியாக இத்திட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களின் எதிர்ப்பினைச் சம்பாதித்திருந்தது. காரணம், அவர்கள் அரச பணியாளர்கள் என அடையாள அட்டையில் குறிப்பிடப்படுவதன் மூலம் ஏதோ ஓர் அங்கீகாரத்தினைப் சமூகத்தினில் பெறுகின்றனர் என்பதாலேயே இவ் எதிர்ப்புக் கிளம்பியது.

இதில் இருந்து விளங்கிக் கொள்ள முடிவது யாதெனில், அரச தொழிலுக்கும் தனியார் தொழிலுக்குமான அந்தஸ்த்தினை சமப்படுத்துவதற்கு இலங்கையில் ஓர் திட்டம் வேண்டும் என்பதே ஆகும். எனவே அரசாங்கம் தனியார் துறைப் பணியாளர்களுக்கும் அரசதுறைப் பணியாளர்களுக்கும் இடையில் சமத்துவத்தினை ஏற்படுத்துவதில் செயற்பட வேண்டியுள்ளது. பல்கலைக்கழக கல்வியின் பின்னர் இளைஞர்களை முயற்சியாளர்களாக மாற்றுவதற்கும் நாட்டில் போதிய திட்டங்கள் இல்லை. இதற்கு கல்வியில் நிலவும் குறைபாடு, மக்களின் மனங்களில் உள்ள சிந்தனை என ஏராளமான விடயங்கள் உள்ளன. எனவே பரவலான ஆய்வுகள் வேலையற்ற பட்டதாரிகள் விடயத்தில் அவசியமாகவுள்ளது. இன்றைய நிலையில் உருவாக்கப்பட்ட பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு இழுத்தடிப்புக்கள் சாதகமானதல்ல. அவ்வாறின்றி, அரச துறையில் நிலவும் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது ஒன்றே இருக்கக் கூடிய தெரிவாகவுள்ளது. காரணம், பல்கலைக்கழகங்களில் வருடக்கணக்கில் கற்பிக்கப்பட்டவர்கள் மாற்றுத் தெரிவுகள் இன்றி அரசாங்கத்திடம் நியமனத்தினை எதிர்பார்க்கின்றனர்.

வயதின் அடிப்படையில் அரச பணிக்கு 35 வயது பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட போதும் தற்போதைய பட்டதாரிகளில் சிலர் 35 வயது கடந்தும் வேலையற்றுள்ளனர். இதனால் அவர்கள், எதிர்ப்புப் போராட்டங்களில் அரச பணிக்கான வயதெல்லையினை 45 ஆக அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே இவர்களது எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இயங்கவேண்டியுள்ளது. நாட்டில் அரச துறையில் 31 ஆயிரத்து 400 வெற்றிடங்கள் நிலவுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பாடசாலைகளில் 6 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களும் மாகாண பாடசாலைகளில் 15 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களும் அரச நிர்வாகத்தில் 11 ஆயிரம் வெற்றிடங்களும் இதற்குள் நிலவுகின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து பொதுவாக பட்டதாரி நியமனங்கள் வழங்கப்படவில்லை. இந் நிலையில் இவ் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களை தொழில் சந்தைக்கு ஏற்றதாகத் தயார்ப்படுத்துதல் பற்றிய திட்டங்களை முன்னேடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு இல்லாது போனால் காலாகாலமாக வேலையற்ற பட்டதாரிகள் என்றொரு சமூகம் நட்டில் இருந்து கொண்டேயே இருக்கும்.

– நிருபா குணசேகரலிங்கம் –