27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிப் போராளிகளின் பங்களிப்பு சற்று மிகையானது என்றால்  அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடயமாக இருக்கும் சிறப்பாக பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இன் அதிக பலமே கிழக்கு போராளிகளின் அர்பணிப்பில் உருவானது. மற்றய பிராந்தியங்களைவிட கிழக்கு பிராந்திய மக்களும் இந்த அமைப்புடன் ஒரு நெருங்கிய உறவை பேணிவந்தனர். தோழர்கள் பாஸ்கரன் தேவகுமார் இருவரது வெலிக்கடைப் சிறைப்படுகொலைக்கு பிறகு மட்டக்களப்பு சிறையுடைபாக இருக்கட்டும் இதனைத் தொடர்ந்த தோழர் குமார், சிவா ஆகியோரின் தலமைத்துவத்துடனான செயற்பாடாக இருக்கட்டும் காரை நகர் கடற்படை முகாம் தகர்பாக இருக்கட்டும் தோழர்கள் வேலு கணேஸ் ஆகியோரின் அர்பணிப்பாக இருக்கட்டும்  இதே வேளை விசேட அதிரடிப்படையின் நெருக்குவாரங்களுக்கிடையில் தோழர் நிதி, தைரி போன்றவர்களின் செயற்பாடு தோழர் வெள்ளையன் (கிருபா) ஆகியோரின் திருமலை மட்டக்களப்பு செயற்பாடு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

கூடவே புலிகளின் போராடும் உரிமை மறுக்கப்பட்ட செயற்பாட்டினால் ஈபிஆர்எல்எவ ஆயுதரீதியாக ஒடுக்குதலுக்கு உள்ளாகிய போதும் இறுதிவரை தாக்குப் பிடித்த பிரதேசமாக இந்த பிராந்தியமே செயற்பட்டது இங்கு சிறப்பு கவனம் பெறுகின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு மகாணசபை அமைய முன்னரே அதிக தோழர்களைப் போராட்டத்தில் இழந்த பிராந்தியமாகவும் இது விளங்குகின்றது. ஆனாலும் தொடர்ந்து எழுந்தே நிற்கின்றது. மாகாணசபை காலத்தில் நிதி அமைச்சராக செயற்பட்ட கிருபா போன்றவர்களின் செயற்பாடுகள் இன்றுவரை பலமாக தொடரும் தோழர்களின் செயற்பாடுகள் கிழக்கின் பலத்தையும் அர்பணிப்பையும் எடுத்தியம்பி நிற்கின்றன.