கறுப்புக்கொடி கட்டுவதை விடுத்து உறவுகளைச் சந்திக்கச் செய்யுங்கள்

அன்றையநாள் தேசிய தைப்பொங்கல் விழாவை வலி வடக்கில் உள்ள பலாலியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் தைப்பொங்கல் திருநாளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. இதற்கு மேலாக, மீள்குடியமர்த்தப்பட்ட வலி வடக்கில் தேசிய தைப்பொங்கல் விழா கொண்டாடப்படு வதும் மனநிறைவைத் தருவதாகும்.

எனினும் தேசிய தைப்பொங்கல் விழாவை வட பகுதியில் கொண்டாடுவதன் மூலம் தமிழ் மக்களின் மனக்குறைகள் நீங்கிவிடும் என்று சொல்வதற்கில்லை.
காணாமல் போன மற்றும் சிறைகளில் வாடும் தங்கள் பிள்ளைகளை நினைந்து தைப்பொங்கலை மறந்த குடும்பங்கள் ஏராளம் என்ற செய்தி வேதனைக்குரியது.

தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி மைத்திரி விடுதலை செய்வார் என்று நம்பியிருந்த போதிலும் அது முழுமை பெறாத நிலையில், அரசியல் கைதிகளின் உறவுகள் இன்னமும் துயரடைத்த மனத்தோடுதான் இருக்கின்றனர்.

இத்தகையதோர் நிலையில் பொங்கல் விழாவுக்கு வருகின்ற ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் கறுப்புக்கொடி கட்டி பேராட்டம் நடத்து வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் திட்டம் தீட்டியுள்ளார்.

பொதுவில் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் சிவாஜிலிங்கம் கனதியாகக் குரல் கொடுத்து வருவது தெரிந்ததே. எனினும் கைதிகளின் விடுதலையில் ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்ற நேரிய மனநிலை கொண்ட ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தைமாதப் பிறப்பில் யாழ்ப்பாணம் வரும்போது அவருக்குக் கறுப்புக்கொடி கட்டுவதென்பது அவ்வளவு நல்லதல்ல.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம் முன்னோர் கூறிய ஆலோசனை. எனவே கறுப்புக் கொடி கட்டுதல் என்பதற்கு மாற்று வழியாக தைப் பொங்கல் விழாவுக்கு வருகின்ற ஜனாதிபதி மைத்திரியையும் பிரதமர் ரணிலையும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தால், நிச்சயம் அத னால் மன மாற்றங்கள் ஏற்பட்டு கைதிகளின் விடுதலை உடனடியாகச் சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம்.

மாறாக கறுப்புக் கொடி கட்டுவதன் மூலம் ஒரு எதிர்ப்பு நிலை உருவாக்கப்படுவதாகத் தோற்றமளிக்கும் போது அதற்கு தென்பகுதியில் உள்ள பேரினவாதிகள் வேறுவிதமான வியாக்கியானங்களைக் கொடுக்கத் தலைப்படுவர்.

நமக்குத் தேவை, சிறைகளில் நீண்டகாலமாக வாடுகின்ற எங்கள் உறவுகளை மீட்டெடுப்பது. அவ்வாறு அவர்களை மீட்டெடுப்பதை நாம் துரிதப்படுத்துவதாக இருந்தால், கறுப்புக்கொடி கட்டுவதை விடுத்து கைதிகளின் உறவுகள் ஜனாதிபதி மைத்தி ரியையும் பிரதமர் ரணிலையும் சந்தித்து, எங்கள் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது நாங்கள் வீடுகளில் பொங்கல் பொங்கி கொண்டாட முடியுமா? என்று கேட்க வேண்டும்.

இந்தக் கேள்வி நிச்சயம் அவர்களின் மனங்களைத் தொடும். அதன் விளைவு கைதிகளின் விடுதலைக்குச் சாதகமாக அமையும். எனவே வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் இக் கருத்தை கவனத்தில் கொள்வார் என நம்பலாம்.

(வலம்புரி ஆசிரியர் தலையங்கம்)