காணாமல் போனாரா பிரபாகரன்?

தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.

போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தடுப்புக்காவலில் இருந்த போது, விசஊசி ஏற்றப்பட்டதான ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அண்மையில் அறிக்கைப் போர்களை நடத்தியிருந்தனர்.

இந்த விவகாரத்தை அணுக வேண்டிய முறையில் அணுகாமல், சரியான முறையில் கையாளத் தவறியதை உணர்ந்து, அவர்கள் இப்போது அந்த விவகாரத்தை அப்படியே கைவிட்டு விட்டு நிற்கிறார்கள்.

சர்வதேச மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை என்றார்கள்; அமெரிக்க மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை என்றார்கள்; உள்ளூர் மருத்துவர்களின் குழுவை அமைத்திருப்பதாகவும் கூறினார்கள்; கடைசியில் எந்த மருத்துவ பரிசோதனையும் இதுவரை நடத்தப்பட்டதாகத் தகவல் இல்லை.

இந்த விவகாரத்தின் சூடு ஆறுவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் பிரசார மேடைகளில் பிரபாகரனின் பெயரைக் கூறி, கைதட்டல்களை வாங்கி பழக்கப்பட்டுப் போன தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு, அந்தப் பெயரைப் பயன்படுத்தி, தமது பெயர்களை ஊடகங்களில் பரபரப்பாகப் பேச வைக்க முடியும் என்பது நன்றாகவே தெரியும்.

அரசாங்கத்தினாலோ, சிங்கள மக்களினாலோ, சர்வதேச நாடுகளினாலோ பிரபாகரன் என்ற பெயர் எவ்வாறு நோக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் மத்தியில் அந்தப் பெயருக்கு உள்ள மதிப்பையும் மகிமையையும் எவராலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

பிரபாகரனைப் பயங்கரவாதியாக சித்திரிப்பவர்கள் கூட இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மறுக்க மாட்டார்கள்.

இதனால்தான் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்துவதற்கும் ஒரு போதும் தயங்கியதில்லை.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்கு வந்த பின்னர், பிரபாகரன் என்ன ஆனார்? அவருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்வி இன்னமும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டதை அரசாங்கம் உறுதிப்படுத்தி, அவரது சடலம் மீட்கப்பட்டது தொடர்பான வீடியோ மற்றும் ஒளிப்படங்களையும் வெளியிட்டது.

பிரபாகரனின் சடலத்தை நேரில் பார்த்து அடையாளம் காட்டியவர்களில் ஒருவர், அவரது முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கருணாƒ இன்னொருவர் பிரபாகரனுடன் நெருங்கிச் செயற்படாத போதிலும், புலிகளின் அரசியல்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பணியாற்றிய தயா மாஸ்டர்.

ஆனாலும், பிரபாகரன் மரணிக்கவில்லை; இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார்; மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவார்; விரைவில் ஐந்தாவது கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்பது போன்ற செய்தித் தலைப்புகளையும் கட்டுரைகளையும் கடந்த ஏழு வருடங்களில் பலமுறை நாம் பார்த்தாயிற்று.

தமிழகத்தின் இருந்து வெளியாகும் சஞ்சிகைகள், புலனாய்வு இதழ்களுக்கு எப்போதெல்லாம், செய்திப் பஞ்சம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம், பிரபாகரன் அல்லது பொட்டுஅம்மான் பற்றிய இரகசியங்கள் என்று கற்பனையில் எதையெதையோ எல்லாம் எழுதுவார்கள்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினரும், இந்த மாயைக்குள்தான் தமிழ் மக்களை வைத்திருக்க ஆசைப்பட்டார்கள்.

புலம்பெயர் தமிழ் இணைய ஊடகங்கள் பலவும், தமிழக இதழ்களில் வெளியான கற்பனைக் கட்டுரைகளைப் பிரசுரித்து, புலம்பெயர் தமிழர்களை உசுப்பேற்றும் முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை.

உண்மையை வெளியிட்ட ஊடகங்களுக்கும், எழுதிய ஊடகவியலாளர்களுக்கும், தேசத்துரோகப் பட்டங்கள்தான் சூட்டப்பட்டன.

வருவார் – வருவார் என்று சொல்லப்பட்ட பிரபாகரன், ஏழு ஆண்டுகளாகியும் ஏன் வரவில்லை? இல்லாத ஒருவரை அவர்களால் எப்படிக் கொண்டு வர முடியும்?

இப்போது, புலம்பெயர் தமிழர்களை மாய உலகில் வைத்திருக்க முயன்றவர்கள் யாருமே, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லத் தயாராக இல்லை. ஆனாலும், அவர் இல்லை என்று பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாரில்லை.

அதனால்தான், போராட்டத்துக்காக உயிரைக் கொடுத்த போராளிகளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நினைவு கூர வேண்டும் என்பதற்காக, மாவீரர் நாள் என்ற உணர்பூர்வமான தினத்தைப் பிரகடனப்படுத்தி, அத்தகைய நாளில் உலகத்தையே தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரபாகரனையே, நினைவுகூர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிரபாகரனின் மரணம் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், அத்தகைய ஒரு நிகழ்வைத் தமிழ் மக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாமை, அவர்களின் அத்தகைய நிலைக்கான ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும், பிரபாகரன் உயிரோடு இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டாலும், பிரபாகரன் என்ற சொல்லின் வசீகரம் ஒருபோதும் தமிழ் மக்களிடம் குறைந்து விடவில்லை.

அதனால்தான், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அவரது பெயரைத் தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பிரபாகரனைப் புகழ்ந்துரைத்த ஒரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர், அவர் இறந்து விட்டார் என்றால், இறப்புச்சான்றிதழை ஏன் அரசாங்கம் வழங்கவில்லை என்று கேட்டிருந்தார்.

அந்தச் செய்தியின் சூடு ஆறுவதற்குள்ளாகவே, பிரபாகரனைக் காணவில்லை; கண்டுபிடித்துத் தரக் கோரி, புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமற்போனோர் செயலகத்தில் முறையிடுவது குறித்து, அவரது உறவினர்களுடன் ஆலோசிக்கப் போவதாக மற்றொரு தமிழ்த் தேசிய அரசியல்வாதியின் கருத்தை மையப்படுத்திய செய்திகள் வெளியாகின.

பிரபாகரனைக் காணவில்லை என்று காணாமற்போனோர் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என்ற செய்தி பரவலாக உள்ளூர் ஊடகங்களில் மாத்திரமன்றி, இந்திய ஊடகங்களிலும் பரபரப்பாக உலாவின.

பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை ஓர் அரசியல்வாதி நாடாளுமன்றத்தில் கேட்கிறார். இன்னொருவர் அவரைக் காணவில்லை என்று முறையிடப் போவதாக கூறுகிறார். அவ்வாறாயின் பிரபாகரன் இறந்தாரா அல்லது காணாமல்போனாரா?

பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு, இவர்கள் எதனை உறுதிசெய்யப் போகிறார்கள்- அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப் போகிறார்களா? அவருக்கான மரியாதைகளைச் செலுத்தப் போகிறார்களா? எதுவும் நடக்கப் போவதில்லை.

ஒருவேளை அரசாங்கம் இறப்புச்சான்றிதழைக் கொடுத்து விட்டால் கூட, அல்லது மரபணுப் பரிசோதனை மூலமும் இறந்தது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தியதாக கூறிய அரசாங்கம், அதற்கான சான்றுகளைக் கொடுத்தாலும் கூட, அதனை இவர்கள் உண்மை என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா?

காணாமற்போனோர் செயலகத்தில் பிரபாகரனைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்வதைப் போன்று முட்டாள்தனமாக காரியம் வெறேதும் இருக்க முடியாது. அவ்வாறு செய்ய முனைந்தால், பொறுப்புக்கூறல் தொடர்பாக, தமிழர் தரப்பினால் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தேகங்களும், கேள்விகளும், விசமத்தனமானவையாகவே சர்வதேச சமூகத்தினால் பார்க்கப்படும்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் எப்படித் தவறாக கையாளப்பட்டதோ, பிரபாகரன் விவகாரமும் இன்னொரு தவறுக்கான அடித்தளமாக மாறும்.

பிரபாகரன் காணாமல்போனார் என்ற முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றில் அவர் போரில் படையினரிடம் சரணடைந்தார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அவர், படையினரிடம் உயிரோடு பிடிபட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

படையினரிடம் சரணடையக் கூடாதுƒ படையினரிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காகவே, சயனைட் குப்பியை கழுத்தில் கட்டிய பிரபாகரன், போரின் முடிவில் படையினரிடம் உயிருடன் சிக்கினார் அல்லது சரணடைந்தார் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

போரின் இறுதியில் பலர் சரணடைந்த பின்னர் காணாமற்போயினர். சரணடையாத போதிலும், என்ன நடந்தது என்று அறியப்படாதுள்ள சிலரில் பொட்டம்மானும் ஒருவர். அவரைக் கூட யாருமே காணவில்லை என்று கேள்வி எழுப்பவோ முறையிடப் போவதாகவோ அறிவிக்கவில்லை. ஏனென்றால், அவர் சரணடையவில்லைƒ பிடிபடவுமில்லை. தன்னுடலை உருத்தெரியாமல் அழித்திருக்கலாம் என்ற ஊகமே நிலவுகிறது.

புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமையேற்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரபாகரன் கடைசிவரை போரிட்டே மரணமானார் என்று கூறிய பின்னரும், அவருக்கு காணாமற்போனவர் சான்றிதழைப் பெற்றுக் கொடுக்க தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

நந்திக்கடலில் இறந்து போனவர் பிரபாகரன்தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் வரலாறு ஒருநாள் உண்மையை உணர்ந்து கொள்ளும்ƒ ஏற்றுக் கொள்ளும்.

அதேவேளை, பிரபாகரன் என்ற வரலாற்றுக்கு களங்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டியது, பிரபாகரனினதும் புலிகளினதும் பெயரால் அரசியல் நடத்துபவர்களின் பொறுப்பு என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
(கே. சஞ்சயன்)