பயிரை மேய்ந்த வேலிகள்..(23)

( தேவனாலும் மறவனாலும் குறி வைக்கப்பட்ட மாணவர்கள்.)

முழு அளவினான போர் தொடங்கி இரண்டு நாட்களே கடந்திருந்த நிலையில், விமானப் படையினரும், தங்களது தாக்குதல்களை இப்போது முழுமையாக தொடக்கியிருந்தனர். முன்னைய ஈழப்போர் போன்று அல்லாமல், ஈழப்போர் நான்கில் புலிகளைவிட , இராணுவத்தினரின் கை மோலோங்க ஆரம்பித்திருந்தது. இராணுவம் தரை வழித் தாக்குதல்களை வடக்கில் தொடங்காத போதும், விமானப் படையினர் மூலம் வன்னி வான் பரப்பை மாத்திரமல்லாமல், முழு நாட்டினது வான் பரப்பையும் , 24 மணி நேரமும் தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்று கொண்டிருந்தனர்.

இக் காலத்தில் புலிகள் தமக்கான விமானப் படையொன்றை உருவாக்கியிருந்தமையாலும், விமானங்களில் சென்று தாக்கும் வசதியையும் பெற்றிருந்தமையாலும் இலங்கை விமானப்படையினர் அதிக முனைப்புடன் செயறப்பட்டுக்கொண்டிருந்தனர். புலிகளின் நிலைகள் மீது, விமானப்படையினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, இப்போது வன்னியெங்கும் ஆகாயவழி தாக்குதல்கள், எந்நேரமும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இஸ்ரேலிய தயாரிப்பான க்ஃபிர் விமானங்களும், உக்ரேனிய தயாரிப்பான மிக் 27 விமானங்களும், இரவு பகல் என்று இல்லாமல், சில நிமிட நேர இடவெளியில் கூட மீண்டும் மீண்டும் தொடர் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

புலிகளின் நிலைகள் மட்டுமல்லாமல், புலிகள் கூடும் இடங்கள், புலிகளின் தலைவர்கள் நடுமாடும் இடங்கள் மற்றும் அவர்களது நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன், அங்கு விரைந்து வந்து தாக்குதல்களை நடத்தத் தொடங்கியிருந்தனர்.இதனால் பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, புலிகளின் நிலைகளில் இருந்து விலகியிருக்கவே விரும்பினர். புலிகளின் பயிற்சி முகாம்களில் சிக்கிக் கொண்டுள்ள தமது பிள்ளைகள் தொடர்பில் , அவர்கள் அச்சமும் கொள்ளத் தொடங்கினர். இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீடுகளுக்கு திருப்பி அனுப்புமாறு புலிகளை கேட்கத் தொடங்கினர்.

மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நான்கு பயிற்சி முகாம்களும் புலிகளின் காடுகளுக்குள் இருந்த முற்று முழுதான பயிற்சி முகாம்களின் நிலையிலிருந்து வேறுபட்டே காணப்பட்டன. விமானத் தாக்குதல்களை சமாளிப்பதற்கோ அல்லது அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கோ ஒழுங்குகள் எதுவும் அங்கே காணப்படவில்லை. அத்துடன் போதுமான அளவு பங்கர்களும் அங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை. அவை பாதுகாப்பற்ற நிலையிலேயே இருந்தன.

இவ்வாறான முகாம்களில் மாணவர்களை தடுத்து வைத்து பயிற்சியளித்ததன் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்களையும் , மாணவிகளையும் உயிராபத்தான ஒரு பயங்கரமான சூழ்நிலைக்குள் புலிகள் தள்ளியிருந்தனர். புலிகள் கூடும் இடங்கள் மீது , விமானத் தாக்குதல் நடைபெறுவதால் , மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட இந்த முகாம்கள் மீதும் எந்த நேரத்திலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற நிலையில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் புலிகளுடன் முரண்பட தொடங்கியிருந்தனர்.

பலவந்தமாக பயிற்சி வழங்கப்பட்ட மாணவர்களும்மாணவிகளும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தப்பி ஓட முயன்றனர். இந்நிலையிலும் புலிகள், இம் மாணவர்களை, எப்படியாவது முழுமையாக புலி உறுப்பினராக்கிவிடுவதற்கும், அவர்களை போர்க் களங்களுக்கு அனுப்பி வைப்பதிலும் குறியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

காளி மாஸ்டரின் நாவட்காடு பயிற்சி முகாமில் அகப்பட்ட முல்லைத்தீவு மாணவர்களை போன்றே வட்டக்கச்சி பண்ணையில் சிக்கிக்கொண்ட கிளிநொச்சி மாணவர்களும் புலிகளின் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அதுவரை சர்வதேச சமூகத்துக்கு சமாதான தேவனாக தன்னை இனம் காட்டிக் கொண்டிருந்த புலிகளின் சமாதான முகத்தோடு நடமாடிக் கொண்டிருந்த அவர்களின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனும் தமிழீழ கல்வி கழக துனைப்பொறுப்பாளரான புலிமறவனும் இப்போது அந்த கிளிநொச்சி மாணவர்களுக்கு தங்களது உண்மையான முகத்தை வெளிக் காட்டத் தொடங்கியிருந்தனர்.

அந்த முகாமுக்கு செல்லும் புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் மாணவர்களின் நெற்றியிலும் மார்பிலும் துப்பாக்கியை வைத்து இயக்கத்தில் சேர்ந்து விடுமாறு பலவந்தப்படுத்தி அச்சுறுத்தத் தொடங்கினர். மிகவும் இனிமையானவராக தெரிந்த புலித்தேவனும், அவரது சகோதரன் புலிமறவனும் நடந்து கொள்ளும் முறையில் மாணவர்கள் அதிர்ந்தே போயினர். மென்மையான நடத்தை கொண்டவராக கிளிநொச்சியில் காணப்பட்ட புலித்தேவனின் மறு முகத்தை கண்டு மாணவர்கள் கடும் அச்சமும்அருவருப்பும் கொள்ளத் தொடங்கினர்.

இப்படியான கொடூர முகம் கொண்ட புலித்தேவனினதும் புலிமறவனினதும் வன்கொடுமையில் இருந்து, சில மாணவர்கள் சாதுரியமாக தப்பியும் சென்று கொண்டிருந்தனர்.அங்கிருந்து தப்பி வந்த மாணவர்களில் ஒருவர் புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் தமக்கு புலிகள் இழைத்த கொடுமைகளை பற்றி அப்போது கிளிநொச்சியில் உள்ள .நா அதிகாரி ஒருவருக்கு கூறிக்கொண்டிருக்கும் போது, புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் நடத்திய அடக்கு முறை பற்றியும் கூறினார்.

அதைக் கேட்டு ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்ற அந்த அதிகாரிக்கும், அவரின் உதவியாளருக்கும் புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் குறித்து அப்போது அந்த மாணவன் கூறியதை நம்ம முடியாமல் இருந்தது. அந்தளவுக்கு உயரிய பண்பாளராக தன்னை வெளிக்காட்டிய புலித்தேவன் இந்த மாணவர்கள் மீது கட்டவிழ்த்த சித்திரவதையை வேறு பல மாணவர்களும் உண்மை என உறுதிபடுத்திய பின்பே புலித்தேவனின் உண்மை முகத்தை அறிந்து கொண்டனர்.

வட்டகச்சி பண்ணை பயிற்சி முகாமில புலித்தேவனின் கைகளில் கிலிநொச்சி மாணவர்கள் சிக்கிகொண்டு தவித்த அதேவேளை புதுக்காடு முகாமிலிருந்த கிளிநொச்சி மாணவிகளை, மோதல் நடந்து கொண்டிருந்த, முகமாலை முன்னரங்க நிலைகளுக்கு தாக்குதல்களில் ஈடுபடுத்த ஏற்றிச் செல்வதற்காக புலிகளின் வாகனங்கள் அங்கு வந்தடைந்திருந்தன.

நாவட்காட்டில் முல்லைத்தீவு மாணவர்களை போர்க்களத்துக்கு அனுப்பும் வேலையில் காளி மாஸ்டர் அதிக முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

வள்ளிபுனம் முகாமில் மட்டிக் கொண்ட முல்லைத்தீவு மாணவிகளில் சிலர் தப்பி சென்று விட்ட நிலையில் , இன்னும் சிலர் தப்பிக்க முயன்று கொண்டிருந்தனர். கட்டாயத்தின் பேரில் நான்காவது நாளாகவும் பயிற்சியை முடித்த மாணவிகள் தப்பிச் செல்வது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்த அந்த கடும் இரவில் முகாமுக்கு அருகே சில மர்ம மனிதர்களின் நடமாட்டமும் ஆங்காங்கே தென்படத் தொடங்கியது.

இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவும் அணிக்கு (Long Range Reconnaissance Patrol – LRRP ) கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த அவர்கள் புலிகள் கூடும் எனகருதி, அதனை அடையாளப்படுத்தும் நோக்கில் ,அங்கிருந்த நீர்த் தாங்கியில் அடையாள கொடி ஒன்றையும் வைத்து விட்டு சென்றிருந்தனர். இன்னும் சில மணி நேரங்களில் இந்த இடம் குறித்து உலகமே அதிர்ந்து போகப் போகிறது என்பது குறித்து தெரியாத அவர்கள் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமில் இருந்த புலிகளும் , பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களும் , மறுநாள் தாம் இருக்கும் அந்த இடம், வேறு ஒரு பெயர் கொண்டு எதிர்காலத்தில் அழைக்கப்பட போவதை அன்று அறியாமல் தத்தமது வேலைகளில் குறியாக இருந்தனர்.

தொடரும்..

(RajH Selvapathi)