கும்பகர்ணர்கள்

(மொஹமட் பாதுஷா)

நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற நம்முடைய எம்.பி.க்களில் சிலர், எல்லா வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் உயர்ந்தபட்சமாக உபயோகப்படுத்துகின்ற போதிலும் சபையில் உரையாற்றுதல் என்ற சிறப்புச் சலுகையை மட்டும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த பொடுபோக்குத்தனம் எம்மில் பலருக்கு அதிகமாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் ‘ஹன்சாட்’ பதிவேடுகளைப் பரிசோதித்தால் – முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் பிராந்திய தளபதிகளையும் எத்தனை தடவைகள் தத்தமது ஆசனங்களில் இருந்து எழுந்து மக்களுக்காக பேசியிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை விலாவாரியாக அறிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றம் என்பது சினிமா தியேட்டரோ, கருத்தரங்கு மண்டபமோ அல்லது எம்.பி.க்கள் களைப்பாறுவதற்கான ஓய்வு மையமோ அல்ல. அது, இந்த நாட்டின் மீயுயர் சபை. இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை பேசி, அவற்றுக்குத் தீர்வு கண்டு வருவதற்காக, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளே அதில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், அவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்களோ அந்தக் காரியத்தை செய்வதில் வெளிப்படுத்துகின்ற ஆர்வத்தை விட, சுகபோகங்களையும் சிறப்புச் சலுகைகளையும் அனுபவிப்பதிலேயே அளவுகடந்த ஆர்வத்தை வெளிப்படுத்துவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஓரிரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தமது மக்களின் அபிலாஷைகளுக்காக, உரிமைகளை வென்றெடுப்பதற்காக சபையில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மற்றையோர் – தம்முடைய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதங்கள் இடம்பெறுகின்ற போது எழுந்து பேசுகின்றனர், தம்மைப் பற்றி ஏதாவது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் சிலர் ஆசனத்தை விட்டு எழுகின்றனர், சபையில் அமளிதுமளி ஏற்படுகின்ற போது கூட்டத்தோடு கோவிந்தாவாக, சிலர் கோரஸாக கூச்சலிடுகின்றனர். இந்த வரையறையை தாண்டி மக்களின் ஒவ்வொரு பிரச்சினையையும் கிரமமான அடிப்படையில் தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய எம்.பி.க்கள் யாரையும் அண்மைக்காலங்களில் நாடாளுமன்றத்துக்கு முஸ்லிம்கள் அனுப்பவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.

எம்.எச்.எம்.அஷ்ர‡ப் என்றொரு தலைவர் முஸ்லிம்களுக்கு இருந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை மு.கா.வின் தற்கால தலைவர் ரவூப் ஹக்கீமோ அன்றேல் அக்கட்சியில் இருந்து வெளியேறிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா போன்ற பாசறை பயிலுனர்களோ, அவ்வாறில்லாவிட்டால், பெரும்பான்மை கட்சிகளில் சங்கமமாகி இருக்கின்ற முஸ்லிம் எம்.பி.க்களாலோ நிரப்ப முடியவில்லை. அது இலகுவில் சாத்தியப்படக் கூடிய காரியமுமல்ல. உண்மையாகப் பார்த்தால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக, அஷ்ர‡ப் என்ற ஒரு தனிமனிதன் செய்து கொண்டிருந்த வேலையை – இவர்கள் எல்லோராலும் 15 வருடங்களாக கூட்டாகக்கூட செய்து முடிக்க இயலாது போயிருப்பது பட்டவர்ததனமானது. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் இந்த மக்களுக்காக பேசுவோமா என்றால் அதுவும் இல்லை. ‘நாடாளுமன்றத்தில் பல மணிநேரம் மக்களுக்காக அஷ்ர‡ப் உரையாற்றினார்’ ‘அவர் உரையாற்றனார்;, இவர் வாதம் புரிந்தார்’ என்று புகழ்ந்துரைக்கின்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது தமது பதவி மற்றும் பட்டம் என எல்லாவற்றையும் துச்சமென மதித்து அவ்வாறான அசூர (?) காரியம் ஒன்றைச் செய்திருக்கின்றார்களா என்பது விடைதெரியாத கேள்வி அல்ல.

உதாரணமாக, ஒரு தலைபோகின்ற வேலையை செய்து முடிப்பதற்காக ஒரு நபரை கூலிக்கு அமர்த்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஊரிலிருந்து புறப்பட்டுப் போன அவர் குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்காமல், வயிறுமுட்ட புரியாணி சாப்பிட்டுவிட்டு, நட்சத்திர ஹோட்;டலில் உறங்கிக் கிடந்தால் நமக்கு எவ்வளவு ஆத்திரம் வருமோ, அதைவிட ஒருபடி மேலான ஆத்திரமும் வெஞ்சினமும் – எம்.பி.க்கள் விடயத்தில் மக்களுக்கு பல ஆண்டுகளாக இருக்கின்றது. ஆனால், தேர்தல் வருகின்ற போது வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்களை பார்த்ததும் மக்கள் பாவமன்னிப்பு வழங்கி விடுவது ஆகப் பெரிய துரதிர்ஷ்டமாக இருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் தமது தொழில் என்னவென்றே தெரியாதிருக்கின்றார்களோ என்ற ஐயப்பாடு சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. எம்.பி. பதவி என்பது, தமது தேர்தல்கால செலவுகளை உழைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் என்றும், கட்சியில் நாம் பட்ட சிரமங்களுக்காக கிடைத்த சன்மானம் என்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்கள், அப் பதவியை வைத்துக் கொண்டு நன்றாக உழைக்கின்றனர். கேட்டால் ஒரு சதமும் உழைக்கவில்லை என்பார்கள். ஆனால், மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாரின் பெயரில் நிறைய சொத்துச் சேர்க்கின்றார்கள். சிலர் கிடைக்கின்ற எம்.பி. பதவியையும் உறவினருக்கு கொடுத்து உவகை கொள்கின்றனர். மக்களின் பிரச்சினைகளை எல்லாம் கவனிப்பது போன்று ஒரு மாயை ஏற்படுத்திக் கொண்டு, ‘உழைப்பில்’ கவனமாய் இருக்கின்றனர். இவ்வாறு, நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்கள்

பிஸியாக இருப்பதால், அங்கே வந்தததும் களைப்படைந்து உறங்கி விடுகின்றார்களோ தெரியவில்லை. ஏனெனில் வாயைத் அடிக்கடி திறக்கின்றார்களே இல்லை.

ஆனால், தேர்தல் மேடைகளில் நன்றாக பேசுவார்கள். இடைவிடாது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஏமாறுவதையே விதியென நினைக்கும் வாக்காளர்களும் கட்சிப் போராளிகளும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஏனென்றால், தேர்தல் மேடையில் எதையும் பேசலாம். ஏற்கெனவே மனப்பாடம் செய்து வைத்த விடயங்களை ஒப்புவித்துவிட்டு போவது போல, உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் வசனங்களை பேசி மக்களை உசுப்பேற்றிவிடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே. இருப்பினும் மேடையில் பீரங்கிப் பேச்சாளர்களாக முழங்குபவர்கள் நாடாளுமன்றம் அல்லது மாகாண சபைக்கு சென்றால், மக்களுக்காக பேசுவதென்பது மிக மிக அரிது. ஆத்திபூத்தாற்போல் எப்போதாவது பேசினால்தான் உண்டு.

அந்த வகையில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை பற்றி பேசி இருக்கின்றார்கள். ஹக்கீம் இவ்வாறு தம்முடைய மக்களின் முக்கிய பிரச்சினை ஒன்றை முன்வைத்து சபையில் பேசிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. அல்லது அண்மைக்காலத்தில் முதலாவது சந்தர்ப்பமாகவும் இருக்கலாம்.

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களை எப்படி ஏமாற்றலாம் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் அவர், இம் மக்களின் உண்மையான பிரச்சினைகள் எவை என்பதை முழுமையாக அறிந்து வைத்திருக்கின்றாரா என்பதும், அதை தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் உழைக்கின்றாரா என்பதும் – முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடையே கூட இருக்கின்ற ஒரு பெரிய வினாவாக இருக்கின்ற நிலையில் ஹக்கீம் இவ்விடயத்தை பேசியிருக்கின்றார்.

அமைச்சர் ஹக்கீம் மட்டுமல்ல 99 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைமை இதுதான். ஆனால், தேசிய தலைவர் என்று சொல்லிக் கொள்வோரே இந்த மக்களுக்காக ஆடைக்கொரு தரம் கோடைக் கொருதரம் சபையில் பேசுவார் என்றால், குறுந்தேசிய, பிராந்திய அரசியல் தொழில் செய்வோரின் சமூக அக்கறை எப்படி இருக்கும்? பல வருடங்களாக தீர்க்கப்படாதிருக்கின்ற காணிப் பிரச்சினை பற்றியே இப்போதுதான் பேசப்படுகின்றது.

ஒரு சிவில் நிர்வாக பிரச்சினையை கையாள்வதற்கு இவ்வளவு காலம் எடுக்குமாயின், ஏனைய உரிமைசார், அரசியல் அபிலாஷைகளை பேசுவதற்கும் வென்றெடுப்பதற்கும் எத்தனை யுகங்கள் வேண்டும்? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு எத்தனையோ பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு இருக்கின்றன.

இத்தனை பிரச்சினைகளும் கிடப்பில் கிடக்கையில், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி அவற்றுக்கு தீர்வு காணாமல் வீணே காலத்தை இழுத்தடிக்கின்ற எம்.பி.க்கள் தமது மனச்சாட்சியை தொட்டுப் பார்க்க வேண்டும். அரசியல் என்பது எல்லாம் கலந்த ஒரு கலவை. ஆயினும் அதில் சமூக அக்கறை சற்று கூடுதலான சதவீதத்தில் கலந்திருக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான கொடுப்பனவுகளும் சிறப்புரிமைகளும் ஏராளம் உள்ளன. அமைச்சரொருவர் 65 ஆயிரம் ரூபாயையும், பிரதியமைச்சர் 63,500 ரூபாயையும் நாடாளுமன்ற உறுப்பினர் 54,525 ரூபாயையும் அடிப்படைச் சம்பளமாக பெறுகின்றனர். இதற்கு மேலதிகமாக – தீர்வையற்ற வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி கட்டணம், வீட்டுவசதி, ஊழியர் மற்றும் இன்னோரன்ன வசதிகள் என நிறைய வெகுமதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கின்றன.

அவர்களை கௌரவப்படுத்துவற்கும் சமூக அந்தஸ்தை பேணுவதற்கும் நிச்சயமாக இவையனைத்தும் வழங்கப்பட வேண்டியவையே என்பதில் மறுபேச்சில்லை. இந்த கொடுப்பனவுகள் மற்றும் படிகளை மேலும் அதிகரிப்பதற்கு தற்போது கலந்துரையாடப்படுகின்றது.

அதுபோல, சம்பளமும் மேலதிக கொடுப்பனவும் பெறுகின்ற ஓர் ஊழியர், திறம்பட வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு சூழலில், இத்தனை வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளும் பெறுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவற்றுக்கு பரிகாரமாக மக்கள் சேவை ஆற்றுவது கட்டாயமாகும். இவை எல்லாம் சும்மா வந்து, இருந்து விட்டுப் போவதற்காகவும் தூங்கி விட்டுச் செல்வதற்காகவோ வழங்கப்படுபவை என்று அரசியலமைப்பில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை.

எனவே, இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். சில அரசியல்வாதிகளிடமிருந்து சில விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். முழுத் தகவல்களையும் கையில் வைத்துக் கொண்டு கோரிக்கைகளை சபையில் முன்வைக்க வேண்டும். ஆனால், அதை எந்தளவுக்கு செய்வார்கள் என்பது தெரியாது.

எனவே, அரசாங்கமும் முஸ்லிம் மக்களும் இது குறித்து கடுமையாக கவனம் செலுத்துவது இன்றியமையாதது. அரசியல்வாதிகளுக்கு பிரத்தியேக வகுப்பு நடாத்தியாவது சில விடயங்களை விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு நல்லாட்சி அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

எந்தெந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குரிய கடமைகளை சரியாக செய்கின்றார்கள், மக்களுக்காக சபையில் பேசுகின்றார்கள் என்பதை அரசாங்கம், மேற்பார்வை செய்ய வேண்டும்.

அவ்வாறு செயற்படாத, அதாவது ஒன்றுக்கும் உதவாத உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து வழங்குவதா என்பதையும், அவ்வாறானவர்களுக்கு எதற்காக (5 வருட சேவைக்காலத்தின் பின் ஓய்வுபெற்றால்) ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதையும் அரசாங்கம் ஆழமாக மீளாய்வு செய்ய வேண்டியுமிருக்கின்றது.

தம்முடைய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசாத தேசிய தலைவர்கள், பிராந்திய தளபதிகள், எம்.பி.க்களுக்கு வாக்களித்து மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதா அல்லது அவர்களை பதவியிறக்கம் செய்வதா என்ற முடிவுக்கு மக்கள் வந்தாக வேண்டும்.
– See more at: http://www.tamilmirror.lk/162365/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-#sthash.m1JF5OJG.dpuf