சோதனைமேல் சோதனை சுரேசுக்கு போதுமடா சாமி !

(மாதவன் சஞ்சயன்)
யானைக்கு குழி பறித்து அதில் தானே வீழ்வது போல் கடந்த தேர்தலில் வீழ்ந்தார் சுரேஸ். கூட்டமைப்பின் வெற்றியை மேலதிக வெற்றியாக்க யாழ் கிறிஸ்த்தவர் ஒருவரும் களம் இறங்கினால் நலம் என எண்ணி மாகாணசபை உறுப்பினர் ஆணல்ட் பெயர் பிரேரிக்கப்பட அவரை ஈ பி ஆர் எல்ல எப் க்கு கொடுத்த 2 ஆசனங்களில் ஒன்றை கொடுத்து உள்வாங்கும்படி சுரேசிடம் கேட்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சுமந்திரன் மெதடிஸ்த கிறிஸ்தவர் என்பதால் ஆணல்டின் விருப்பு வாக்கில் சுமத்திரன் பலன் பெற்று விடுவார் என சுரேஸ் மறுத்துவிட்டார்.

சுமந்திரனை பின் கதவால் வந்தவர் என நக்கலடித்த சுரேஸ் அவர் முன் கதவால் வந்துவிட கூடாது என இயன்றவரை முயன்றார். அதனால் தான் வடமராட்சியில் சுமந்திரன் பெறும் வாக்கை சிதைக்க அனந்தராஜுக்கு அந்த ஆசனத்தை கொடுத்தார். மொக்கு சுரேசுக்கு மண்டைக்குள் இருந்தது அடுத்தவர் தோல்வியே அன்றி வேறொன்றுமில்லை. குந்திக்கு புத்திரபாக்கியம் கிடைத்ததும் தன் வயிற்றில் அம்மிக் குழவியால் குற்றி 101 பிண்டங்களை பெற்ற காந்தாரி போல சுமந்திரன் வெல்ல கூடாதென குள்ள வேலை செய்து தனக்கு தானே நாமம் போட்டு கொண்டார்.

உண்மையில் ஆணல்ட் போட்டியிட்டு இருந்தால் அவர் நிச்சயம் சுரேஸ் வெற்றிக்கு உழைத்திருப்பார். சுரேஸ் வென்றிருப்பார். கூட்டு கட்சியின் தலைமை வெல்ல வேண்டும் என்று நியாயமாக வாதிட்டவர் சுமந்திரன். சுரேஸ் தான் அவரை சீண்டினாரே தவிர அவர் சுரேஸ் மீது எந்த காழ்ப் புணர்ச்சியும் காட்டவில்லை. அதற்க்கான தேவையும் அவருக்கு இருக்கவில்லை. ஆணல்ட் வரவு சுரேசுக்கு தான் நன்மை பயக்கும் என்பதை அறிந்தும் அந்த முடிவை அவர் வரவேற்றார். ஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல் சுரேஸ், ஆணல்ட் வேண்டாம் என அனந்தராஜுடன் கோவிந்தா ஆனார்.

அதேவேளை தனக்கு தரப்பட்ட பணியை ஆணல்ட் திறம்படவே செய்தார். தனது பாராளுமன்ற கனவில் அவர் மிதக்கவில்லை. தன கூட்டமைப்பின் வெற்றியில் அவர் முழுமையாக ஈடுபட்டார். அதே வேளை சுமந்திரனுக்கு குழிபறிக்க முயன்ற சுரேசுக்கு அவர் ஆதரவளிக்க முடியாத நிலையை சுரேசே ஏற்படுத்தியதால் அவர் சுமந்திரன் மாவை சிறிதரன் வெற்றிக்கு தன் முழுமையான பங்களிப்பை செய்தார். மூவரும் வென்றனர். இங்கு ஆணல்ட் உடன் வெற்றிக்கான வியூகம் வகுத்த பலரின் பெயர்களை நான் குறிப்பிட தற்போது விரும்பவில்லை. ஆனால் எதிர் காலத்தில் அந்த படித்த துறைசார் இளைஞர்கள் கையில் தமிழர் தலைமை போகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

தோற்ற சுரேஸ் தனக்கு தேசிய பட்டியல் வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்தார். கூட்டு கட்சியின் தலைவர் தோற்க கூடாது என அவருக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை சுமந்திரனுக்கு குழிபறிப்பதில் தவற விட்ட சுரேசுக்கு ஆதராவாக யாரும் இல்லை. அவரது அப்பிராணி தோழர் வன்னி ஆனந்தன் மட்டும் ஐயோ ஐயையோ இது முறையோ தகுமோ தவிர்க்காலமோ என் தலைவனை என உக்கிரதாண்டவம் ஆடி அதுவரை அவருக்கு இருந்த நற்பெயரையும் கெடுத்துக் கொண்டார். இடையில் சிவமோகனை கிள்ளிப்பார்க்க அவர் துள்ளி குதித்து நான் இயக்கமல்ல என அறிக்கை விட்டார். அதோ கதி ஆனார் சுரேஸ்.

விட்டேனா பார் என அறிக்கை மேல் அறிக்கை விட தொடங்கினார். சர்வதேச விசாரணை பற்றி சுமந்திரனை மறைமுகமாக சீண்டினார். மன்னாரில் திடீர் கட்சி மாநாடு நடத்தி தீர்மானங்கள் போட்டார். முதல்வர் விக்னேஸ்வரன் பற்றி தமிழரசு கட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயம் சம்மந்தமாக இவர் கண்டன அறிக்கை விட்டார். முடிவில் இரண்டுமே புஸ்வானம் ஆகிவிட்டது. சர்வதேச விசாரணை முடியவில்லை என்றவர் தற்போது வெளிவந்த அறிக்கையை பார்த்து விட்டு வாயடைத்து நிற்கிறார் இந்த அவசரக் குடுக்கை. முதல்வர் தனக்கும் கட்சிக்கும் எந்த முரண்பாடும் இல்லை வந்தவை வெறும் வதந்தி என கூற சுரேஸ் மூக்குடைபட்டார்.

அடுத்த அடி மிகப்பெரிய அடியாக விழுந்து விட்டது. குழுக்களின் பிரதி தலைவர் பதவி செல்வத்துக்கு போனது பொறுக்காமல் தெரிவில் கூட்டு தலைவர்கள் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை அது சுமந்திரனின் முடிவு என புலம்பினார். உண்மையில் அவர் வென்றிருந்தால் ஓடிப்போய் தானே அமர்ந்திருப்பார் இந்த ஆசன விரும்பி. மாவட்ட அமைச்சர் பதவி நீண்ட நாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே கொடுக்க படவேண்டும் என்ற கோரிக்கை வைத்து அது வன்னியில் ஆனந்தனுக்கு கிடக்கும் அதை வைத்து தெள்ளோட்டலாம் என காத்து கிடந்தவருக்கு ஆப்பு வைத்தது சாள்ஸ் நிர்மலநாதன் நியமனம். இப்போது எங்க வீட்டு காரரும் கச்சேரி போகிறார் என்பது போல ஜெனிவா பயணமாம்.

கூட்டத்தில் நின்று கூவி பிதற்றும் கஜேந்திர குமார், குதிரை கஜேந்திரனுடன் கூட்டாக கையொப்ப வேட்டையில் கலந்து கொண்டவர், சிவாஜிலிங்கம் அனந்தி கிளிநொச்சியில் தொடங்கி ஏ 9 வீதி ஊடாக வந்த நடைபவனியில் இடையில் சித்தார்த்தன் கலந்து கொண்டபோதும் இவர் கலந்து கொள்ளவில்லை. இடையில் இன்னொரு திருவிளையாடலும் அண்டனி ஜெகநாதன் மூலம் ஆரம்பிக்க பட்டுள்ளது. தற்போது இருக்கும் மாகாண அமைச்சரவை மாற்ற படவேண்டும் முல்லைத்தீவு மாவட்டம் உள்வாங்க படவேண்டும் என்பதே அது. அதன் பின் புலத்தில் இருப்பவரும் பிரேமை கொண்ட சந்திரன் தான். தம்பிக்கு அமைச்சு கிடைக்க அண்ணன் போடும் கணக்கு.

ஐங்கரநேசன் அமைச்சில் கண்வைத்து காய்கள் நகர்த்த படுகின்றதை அறிந்த அமைச்சர் குளக்கட்டை உயர்த்துவது முதல் விவசாய உத்தியோகத்தர் நியமனம், மீன்தீவன தொழிற்சாலை என தீயாய் வேலை செய்யும் குமாராய் மாறி செயல்படத் தொடங்கியதால் சுரேசின் எதிர்பார்க்கைப் படி வட மாகாண அமைச்சில் மாற்றம் வரும் சாத்தியம் இல்லை. அத்தனை அம்புகளும் பயனற்று போக எல்லா பாதையும் ரோமா புரியை நோக்கி என்பது போல சுரேசும் ஜெனீவா நோக்கி பயணிக்கிறார். மக்களுக்கு எது கிடைக்காவிட்டாலும் அவருக்கு லண்டனில் அண்ணனின் ஆறுதல், வெளிநாட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளின் அரவணைப்பு நிச்சயம் கிடைக்கும். நொந்த மனசுக்கு ஆறுதல் தேவை. ஆறு மனமே ஆறு நீ விதைத்ததை நீயே அறுத்து கொண்டாடு.
(மாதவன் சஞ்சயன்)