திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்:பாகம் 3

JR கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்திய அமைதிப் படை வடக்குகிழக்கில் நிலைகொள்ள ஆரம்பித்தது.

பிரபாகரன் டெல்லியிலிருந்து திரும்பும்போது – மெட்ராஸ் இல் இந்திய இராணுவ தளத்திலுள்ள தளபதிகளுக்கான விருந்தினர் வரவேற்றப்புக்கூடத்தில் (Area Headquarters Officers’ Mess Guest Suite) – இந்திய அமைதிப்படை தளபதி – Lt Gen Depinder Singh – உடன் சந்திப்பு நடைபெற்றது – பிரபாகரனுடன் யோகியும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். (IPKF in Sri Lanka -p 47)

டெல்லி சென்ற குழுவில் திலீபன் சென்றாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்று – பாகம் 2 – இல் குறிப்பிட்டிருந்தேன். 15- 09- 2009 Tamil Guardian பத்திரிகை கட்டுரை ஒன்று திலீபனும் பிரபாகரனுடன் டெல்லி சென்று திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளது.

2-08-1987 காலை இந்திய விமானப்படை விமானத்தில் பிரபாகரன் நாடு திரும்பினார். 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் – Depinder Singh ஐ மீண்டும் சந்தித்து – ஆயுத ஒப்படைப்பு தொடர்பான கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

4ம் திகதி சுதுமலையில் – பொதுக் கூட்டமொன்றில் ஆயுத ஒப்படைப்பு தொடர்பாக பிரபாகரன் பொதுமக்களுக்கு அறிவித்தார். 5-08-1987 பலாலி இராணுவ முகாமில் ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றது.

யோகி – அடையாளமாக ஒரு பிஸ்டல் ஐ பாதுகாப்பு செயலரிடம் கையளித்தார். பாதுகாப்பு செயலாளர் சேபால ஆடடிக்கல – JR இன் சார்பில் 31-07-1987 வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவர்க்கும் பொது மன்னிப்பு வழங்குவதான கடிதத்தை யோகியிடம் வழங்கினார். (IPKF in Sri Lanka p50)

இதனை தொடர்ந்து பிரபாகரன்- மாத்தையா செய்தியாளர் மகாநாடு நடைபெற்றது – திலீபன் அங்கு பிரசன்னமாக இருக்கவில்லை.
ஒப்பந்தம் பற்றியும் – பிரபாகரனின் டெல்லி விஜயம் பற்றியும் பல்வேறு ஆதங்கங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் – LTTE – இந்திய இராணுவத்திற் கிடையே ஆரம்ப காலகட்டத்தில் சுமுகமான உறவே நிலவியிருக்கிறது.

ஒப்பந்தத்தின் உடனடி விளைவாக இலங்கை இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட்டிருக்கிறது – 3800 வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்- இந்த கால கட்டத்தில் தான் – புலிகளின் முக்கிய தளபதிகள் குமரப்பா – புலேந்திரன் போன்றவர்களின் மணப்பெண்கள் இந்திய விமானப்படை ஹெலி மூலம் கிழக்கிலிருந்து யாழ் வந்தனர், திருமணங்கள் நடந்தன. திருமணங்களில் இந்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதேவேளை ஒப்பந்தத்தின் பிரகாரம் – வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைந்த மாகாண சபைக்கு – உடனடியாக தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என்பதால் – தேர்தல் வரை இடைக்கால அரசு நிறுவுவதென்றும் – அதன் தலைவர் – முதலமைச் சருக்கான அதிகாரங்களுடன் – செயற்படுவார் என்றும் – இதற்கான ஏற்பாட்டை சட்டரீதியாக JR தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் செய்தல் – என்பதுவே இந்திய இலங்கை அரசுகளிற்கிடையே ஏற்பட்ட இணக்கம் என்று தெரிகிறது.

இந்த சபையில் LTTE இற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை LTTE ஏற்றுக்கொண்டுள்ளது என்பதற்கு பிரபாகரனுக்கும் – இந்திய பிரதிநிதிகளுக்குமிடையே பின்னர் நடைபெற்ற நேரடி பேச்சுக்கள் – ஒப்பந்தங்கள் – சாட்சியங்களாக இருக்கிறது.

மாகாண சபைக்கான தேர்தல் இன்றி – இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுவதால் – TULF உட்பட்ட ஏனையவர்களுக்கும் – இந்த சபையில் அங்கத்துவம் இருக்கவேண்டும் என்கின்ற கருத்து பரவலாக எல்லோரிடத்திலும் இருந்தது.

LTTE – தாம் தமிழ் மக்களின் “ஏகப் பிரதிநிதிகள்” என்ற வகையில் தமக்கே – முழுமையான பிரதிநித்துவமும் தரப்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பிரச்சாரத்திற்காக வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் LTTE இற்கும் – இந்திய அரசிற்குமிடையேயான முக்கிய – பிரச்சினையாக – முரண்பாடாக – இதுவே இருந்தது.

அதே வேளை – யுத்தம் நின்றமை – இலங்கை இராணுவம் படிப்படியாக வெளியேறுகின்றமை – பூசாவிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து இயக்க இளைஞர்கள் – தமிழ் நாட்டிலிருந்து – திரும்பிய ஏனைய இயக்கத்தவர்கள் – நம்பிக்கையுடன் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இதில் சிலர் தமது அரசியல் வேலைகளிலும் ஈடுபட்டனர்.

இந்த சூழ் நிலையில் – 13-09-1987 அன்று – மாத்தையா தலைமையிலான – LTTE குழுவினரால் – 75 பேர் வரையில் – கிழக்கில் கிரான்- உன்னிச்சை – பழுகாமம் – சித்தாண்டி.. என்று பரவாக – PLOTE – EPRLF ஐ சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் முக்கியமாக PLOTE இன் முக்கிய தலைவர்களில் ஒருவரான வாசுதேவாவும் 19 பேரும் – பயணம் செய்த மினிவானொன்றில் வைத்து கொல்லப்பட்டார்கள். (உதயன் பத்திரிகை 18-09 – 1987) – இது இந்தியா- வெளிநாடு பத்திரிகைகளில் பரவலாக பேசப்பட்டது.

14-09-1987 அன்று இயக்க மோதல்களை தவிர்க்க வேண்டுமென சமாதானம் பேசச்சென்ற சம்மாந்துறை -AGA விக்னராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். (17-09-1987 உதயன் பத்திரிகை)

15-09-1987 – உண்ணாவிரதம் ஆரம்பிக்க முன்னர் – திலீபன் யாழ் கோட்டை முன்றலில் பொதுமக்கள் முன்னிலையில் – உணர்ச்சிவசப்பட்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். ” காலத்திற்கு காலம் எமது மக்களின் விடுதலை வேட்கையை மழுங்கடிக்கவே ஒப்பந்தங்கள் வந்தன . அந்த வரிசையில் இன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்திருக்கின்றது என்றார்.

மேலும் – கோட்டையை சுட்டிக்காட்டி – ஆரம்பத்தில் எம்மை அடிமைப்படுத்த வந்த – டச்சுக்காரர்கள் இங்கு குடியிருந்தனர்- – பின்னர் சிங்களவர்கள் குடியிருந்தனர் – தற்போது இந்தியர்கள் வந்திருக்கிறார்கள் – எமது நோக்கம் இந்தியர்களை இங்கிருந்து விரட்டி – எமது கொடியை இந்த கோட்டையில் பறக்கவிடுவதே என்றார்.(The Broken Palmyra – p 60)

இதனை தொடர்ந்து 15- 09-1987 இல் திலீபனின் உண்ணாவிரதம் பின்வரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

  1. திட்டமிட்ட குடியேற்றங்களைத் நிறுத்துதல்
  2. தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படல்
  3. அவசரகாலச் சட்டம் நீக்கப்படல்.
  4. ஊர்காவல் படையினரின் ஆயுதங்கள் களைதல் .
  5. தமிழர் பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதை நிறுத்துதல்
    (Google search : திலீபனின் கோரிக்கைகள் என்ன?)
    15-09-1987 அன்றே பாலசிங்கமும் சென்னையிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் பலாலி வந்தார்.
    (இது ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரை அல்ல – 1983 கலவரம்- அதனைத்தொடர்ந்து – இந்திய அரசின் நேரடி தலையீடு – பற்றிய சில முக்கிய சம்பவங்கள் – 1987 செப்டம்பர் திலீபனின் உண்ணாவிரதம் – – பற்றிய சிறு குறிப்புகளே இவை.
    உண்மையிலேயே இந்த சம்பவங்களுக்கு பின்னாலுள்ள அரசியலை – ஆர்வமுள்ள எதிர்கால சந்ததியினர் அறிந்து மேலும் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வதற்காக- முடிந்த வரையில் – திகதி, ஆண்டுகளை குறிப்பிட்டிருக்கிறேன். தற்போது இந்த விடயங்கள் பற்றி பத்திரிகை ஆவணக்காப் பகங்களிலும்- குறிப்பாக noolaham.org இல் குறிப்பிடத்தக்களவு உதயன் – ஈழநாடு போன்ற யாழ் பத்திரிகை சேகரங்கள் உள்ளன. மேலும்- Google – ChatGPT – DeepSeek – போன்ற தேடல் தளங்களிலும் ஆர்வமுள்ளவர்கள் தேடி அறியலாம். )
    (தொடரும்….)