திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்:பாகம் 4

இந்திய இராணுவ பிரசன்னம் அதிகரிக்க தொடங்கி யபோது – புலிகளின் முக்கியத்துவம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவது அவர்களுக்கு – ஒருவித நெருடலை ஏற்படுத்தி வந்ததும் அவதானிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே செப்டம்பர் 15ம் திகதி திலீபனின் சாகும் வரையான உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது என்கின்ற அபிப்பிராயமும் .

திலீபனின் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் – இடைக்கால நிர்வாகத்தில் – புலிகளின் ஏகபிரதிநித்துவம் பற்றியே – புலிகள் இந்திய அரசுப்பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் இருந்திருக்கின்றது.

அதாவது, மாகாண சபை முறையை ஏற்றுக்கொண்டு – அதற்கான தேர்தல் நடத்தாமல் – இடைகாலநிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் – அதில் புலிகளுக்கு ஏகபிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும் என்ற இலக்கை நோக்கியே புலிகளின் இராஜதந்திரநகர்வுகள் இருந்துள்ளது.

சம்பிரதாயபூர்வமாக புலிகள் ஆயுத ஒப்படைப்பு – செய்திருந்தாலும் – புலிகளிடம் கணிசமான ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. பின்னர் அக்டோபர் 1987 இல் – இந்திய இராணுவத்துடன் மோதல் ஏற்ட்டபோதே இந்த உண்மை பொதுமக்களுக்கு தெரியவந்தது. ஆயுதங் களை வழங்கிய இந்திய அதிகாரிகளுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்ததே . அத்துடன் கிழக்கில் 13-09-1987 அன்று நடந்த படுகொலைகளின் போது கிழக்கு மக்களும் இதனை கண்டுகொண்டார்கள்.

திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பித்தபோது – கிழக்கில் 13- 09- 1987 அன்று புலிகள்நடத்திய படுகொலைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே – உண்ணாவிரதம் என்கின்ற அபிப்பிராயமும் இருந்தது. அதனால் தான் இந்திய அரசும் – உண்ணாவிரதம் பற்றி -ஆரம்பத்தில் பாராமுகமாகவே இருந்தது.

நீராகாரமும் இன்றி இருந்தமையால் – 18, 19 ம் திகதியளவில் திலீபன் பலவீனப்பட்டு – கடுமையான உடல் உபாதைகளுக்கும் உட்பட்டு – முடிவுகள் எடுக்கவோ – சிந்தித்து கருத்துக்கள் சொல்லும் நிலையிலோ இருந்திருக்க மாட்டார்.

அப்போதைய யாழ் பத்திரிகை செய்திகளின் படி – யாழ் குடாநாடெங்கும் பரவலான – இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் – ஊர்வலங்கள் நடந்திருக்கின்றன. இது இந்திய அரசிற்கும் தலையிடியை கொடுத்திருக்கிறது.

டிக்சித் தனது Assaignment Colombo என்ற புத்தகத்தில் – 11 வது அத்தியாயத்தில் – (The Sabotage begins ) தொடர்ந்து நடந்த சம்பவங்கள் பற்றி பின்வருமாறு விபரித்திருக்கிறார்.

செப்டம்பர் 10ம் திகதிக்கும் 17ம் திகதிக்குமிடையே – டெல்லியில் இருந்து டிக்சித் இற்கு – யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை சந்திக்கும்படி அறிவுறுத்தல் வந்துள்ளது. அமைதிப்படையினர் ஊடாக பிரபாகனுக்கு இந்த வேண்டுகோள் அறிவிக்கப் படுள்ளது.

19ம் திகதி (உண்ணாவிரதம் 4வது நாள் ) டிக்சித் ஐ – பிரபாகரன் சந்திக்கமாட்டார் என்றும்- பாலசிங்கம் – மாத்தையா – யோகி ஆகியோரே சந்திப்பார்கள் என்றும் புலிகளினால் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதனை டிக்சித் ஏற்றுக்கொள்ளவில்லை – எனவே 21ம் திகதி திட்டமிட்ட சந்திப்பு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

பின்னர் 23-09-1987 அன்று (உண்ணாவிரதம் 8 வது நாள்) பலாலி முகாமில் டிக்சித் தலைமையிலான இந்திய அரசு தரப்பினருக்கும் புலிகள் தரப்பிற்கும் ஆறுமணிநேரம் பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது. (உதயன் 24-09-1987)

இதில் புலிகள் சார்பில் பிரபாகரன் – மாத்தையா – பாலசிங்கம்- திலகர் – யோகி- சிவானந்தசுந்தரம் – ஆகியோர் பங்குபற்றியிருக்கிறார்கள்.

கூட்டங்கள் தொடர்ந்து 26ம் திகதியும் (திலீபன் மரணம்) 28ம் திகதியும் நடந்து – இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக – புலிகளை பெரும்பான்மையாக கொண்ட – இடைக்காலநிர்வாகத்தை – நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்வதென்று – 28-09-1987 அன்று – பிரபாகரன் – டிக்சித் – முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்று – பலாலியில் கைச்சாத்தாகியது.

இதில் புலிகள் சார்பில் மாத்தையாவும் – இந்திய அரசு சார்பில் ஹார்டீப் பூரி – கையெழுத்திடார்கள் (படங்கள் இணைப்பு கீழே)

இடைக்கால நிர்வாகம் – JR இன் நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்தே அமைக்கப்படல் வேண்டும் – அமையப்போகும் நிர்வாகத்திற்கு பிரபாகரன் தலைமை வகிக்க .- JR -இணக்கம் தெரிவித்திருந்தார். – ஆனால் பிரபாகரன் அதனை ஏற்கவில்லை.

பிரபாகரன் தவிர்ந்த வேறு யாராவது – தலைவராக இருக்கவேண்டும் என்று – புலிகள் முடிவுசெய்வதற்கு – JR சம்மதிக்கவில்லை.
இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாக நாடுதழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தன- லலித் அத்துலத்முதலி – பிரேமதாச – போன்றவர்கள் UNP க்குள்ளும் – மற்றும் -சிறிமா – ஜேவிபி – முன்னணியில் இருந்தும் – இந்த ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்த பின்னணியில் – புலிகளே நிர்வாக தலைவரை தீர்மானிப்பது – JR ஐ மேலும் பலவீனமாக காட்டும்- அரசியல் ரீதியில் இது JR இற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

இந்த நிலையை சமரசம் செய்ய – தலைவராக – புலிகள் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் – அதில் ஒருவரை JR தெரிவுசெய்வார் என்றும் இணக்கம் காணப்பட்டது. இதுவும் பிரபாகரன் முன்னிலையில் கைச்சாத்தான – 28-09-1987 ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ள விடயம்.

இதன்பிரகாரம் – CVK சிவஞானம் – பத்மநாதன் (மட்டகிளப்பு சிறை உடைப்பிற்கு உதவியதாக கைது செய்ய்யப்பட்டு நான்கு வருடங்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படட்வர்) – மற்றையவர் சிவானந்தசுந்தரம் -(பத்திரிகைகளில் இவரது பெயரை உறுதிப்படுத்த முடியவில்லை -) மூன்று பெயர்களை சிபாரிசு செய்ய அதில் JR – CVK யை தெரிவுசெய்தார்.

புலிகள் பத்மநாதன் – தலைவராக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் இந்த இடைக்கால நிர்வாகம் அமையவே இல்லை. அதன்பின்னர் நடந்தவை வரலாறு.


இந்த நான்கு பகுதி குறிப்பு – திலீபனின் உண்ணா விரதத்தின் பின்னாலுள்ள அரசியல் பற்றியதே- விரிவான ஆய்வு கட்டுரையல்ல – முடிந்தளவு தகவல்கள் – திகதிகள் உள்ளன.

திலீபனின் உண்ணா விரதத் தின்போது நடைபெற்ற அரசியல் நகர்வுகள்- முக்கியமாக – இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் புலிகளின் வகிபாகம் – இந்திய இராணுவ பிரசன்னத்தின் போது அவர்களுக்கிடையேயான சுமூகமான உறவு – புலிகளின் ஏக பிரதிநிதித்துவத்தை – இந்திய – சிறி லங்கா அரசுகள் அங்கீகரித்த நிலை – போன்ற விடயங்களுக்கு உறுதியான ஆதாரமாக இருக்கிறது.
(முற்றும்)