மரண தண்டனை ..!

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையை உருவாக்கி, அதனை பாதுகாக்கும் நோக்குடன் புலிகள் அமைப்புடன் ஒரு தற்காப்பு யுத்தத்தை நடாத்த வேண்டிய நிலைக்கு EPRLF தள்ளப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.

இந்த புலிகளுடனான தற்காப்பு யுத்தத்தை தவறாக பயன்படுத்திய சிலர் (இந்த சிலரை தோழர்கள் என நான் குறிப்பிட விரும்பவில்லை) பொது மக்களுக்கு எதிரான சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு முழு EPRLF அமைப்புக்குமே களங்கம் விளைவித்தனர்.

இப்படியான பொது மக்களுக்கெதிராக ஏற்றுக்கொள்ள முடியாத சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்ட அந்த ஒரு சிலருக்கு, சக EPRLF தோழர்களால் யாழ்ப்பாணத்தில் மரண தண்டனையும், திருகோணமலையில் மொட்டை அடித்து பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டு அமைப்பிலிருந்து விரட்டப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றது பலரும் அறியாத விடயம்.

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையை பாதுகாக்கும் நோக்குடன் புலிகளுக்கு எதிரான தற்காப்பு யுத்தம் என தொடங்கி, இறுதியில் புலிகளை தேடி அழிக்கும் நிலைக்கு சென்றதை நிறுத்துவதை நோக்காக கொண்டு, மாவட்ட ரீதியில் தலைமை தோழர்களை திருகோணமலைக்கு அழைத்த தோழர் பத்மநாபா, சில கடுமையான உத்தரவுகளை அவர்களுக்கு பிறப்பித்திருந்தார்.

“புலிகளை இந்திய இராணுவம் பார்த்துக் கொள்வார்கள், புலிகள் உங்களை தாக்கினால் மாத்திரம் நீங்கள் திருப்பி தாக்குங்கள், அதாவது ஒரு தற்காப்பு யுத்தத்துடன் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்” என்பதே தோழர் பத்மநாபாவின் அந்த கடுமையான உத்தரவின் சாராம்சம்.

மேலும் EPRLF தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாத ஒரு சில தோழர்களுக்கு எதிராக வேறு சில நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவும் தோழர் பத்மநாபா அவர்கள் முடிவெடுத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் உள்ளது. தேவை ஏற்படின் அந்த தகவலை 100% உறுதிப்படுத்திய பின்னர் இங்கு தருகின்றேன்.

சரி இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியதும், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், EPRLF தோழர்கள் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் விட்ட தவறுகளுக்காக பொது மக்கள் மத்தியில், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் நேரடியாகவும் பகிரங்க மன்னிப்பை கோரினார்.

அனைத்து ஆயுத அமைப்புகளும் பல தவறுகளை விட்டிருப்பினும், விட்ட தவறுகளுக்காக பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஒரே ஒரு ஆயுத அமைப்பு EPRLF மட்டுமே.

தவறு விடுவது ஒன்றும் தவறல்ல விட்ட தவறை மீண்டும் மீண்டும் விடுவதே தவறு என்பதற்கமைய, 1990ம் ஆண்டுக்கு பின்னர் EPRLF அமைப்பு நினைத்திருந்தால் எவ்வாறு இந்தியப் படையுடன் நின்றார்களோ அதேபோன்று இலங்கை படையுடனும் நின்றிருக்க முடியும். ஆனால் அப்படி ஒரு தவறை மீண்டும் EPRLF அமைப்பு செய்யவில்லை. அதாவது இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின அழைப்பு விடுத்தும் EPRLF தலைமை அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மறுபுறம் இந்திய இராணுவ காலத்தில் EPRLF விட்ட தவறுகளை மட்டும் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டும் பலர், அதே காலகட்டத்தில் EPRLF செய்த பல நன்மையான விடயங்கள் தொடர்பில் வாய் திறப்பதில்லை.

அனைத்து தமிழ் கட்சிகளும், இயக்கங்களும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்த அஞ்சிய வேளையில், EPRLF மட்டும் துணிச்சலுடன் தமிழ் மக்களின் நன்மை கருதி மாகாண சபை முறைமையை ஏற்று, 800-க்கும் அதிகமான EPRLF தோழர்களை பலிகொடுத்து உருவாக்கப்பட்ட மாகாண சபையே, இன்று தமிழ் மக்களுக்கு 35 வருடங்கள் கழிந்தும் இருக்கக் கூடிய ஒரே ஒரு அரசியல் அதிகார தீர்வாக உள்ளது.

அன்று EPRLF இந்த மாகாண சபை முறைமையை ஏறுக் கொண்டிருக்காவிட்டால் இன்று தமிழ் மக்களுக்கு இருக்க கூடிய அதிக பட்ச அரசியல் அதிகாரம் உள்ளூராட்சி சபைகளாக மட்டுமே இருக்கும்.

வரலாறு வரலாறாக இருக்க வேண்டும், அது ஒருதலைப்பட்சமாக இல்லாமல் உண்மைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவே இந்த பதிவாகும்.

நன்றி!

Leave a Reply