மறக்கடிக்கப்பட்ட முஸ்லிகளின் மனித உரிமைகள்

சுவிசர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய செய்திகள்தான் அண்மைய நாட்களில் பத்திரிகைகளையும் இணையத்தளங்களையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் நாட்டின் ஆட்சியைப் பாரமெடுத்த பிற்பாடு, கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்பின்னணியில் ஜெனீவா அமர்வு இடம்பெறுகின்றமையால் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை விடயத்தில் மனித உரிமைப் பேரவை எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது? முன்னைய ஆட்சியாளரைப் போலவா அல்லது அதைவிட நெகிழ்ச்சித் தன்மையுடனா இன்றைய அரசாங்கத்தை ஜெனீவா கையாளப் போகின்றது என்பதை இலங்கை மக்கள் மாத்திரமன்றி உலக நாடுகளே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் ஒரு நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் ஆரம்பித்த இனவிடுதலைப் போராட்டம் 1980களில் வேறு ஒரு முகத்தை எடுத்தது என்றே சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகளும் இலங்கை அரச படைகளும் பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றில் மோதத் தொடங்கியிருந்தன. இக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் ஏனைய ஆயுதக் குழுக்களையும் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். ஆயுதக் குழுக்களால் கிழக்கு உட்பட பல இடங்களில் பொலிஸார் கொல்லப்பட்டனர். உயிர்களைப் பறிப்பது பாவம் என்றாலும் நேரடியாக யுத்த களத்தில் நிற்கும் ஒரு வீரரைக் கொல்வதில் ஒரு நியாயம் இருந்தது. பதிலுக்கு புலிகள் பெருமளவான இராணுவத்தினரை இலக்குவைத்துத் தாக்கிக் கொன்றனர். இப்படியாக – மெதுமெதுவாக உச்சஸ்தாயி நோக்கி யுத்தம் நகர்ந்தது.

இதே சமகாலப்பகுதியில் இன்னுமொரு விடயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வடக்கு, கிழக்கிலும் தெற்கின் சில பகுதிகளிலும் பொது மக்களை கொல்கின்ற வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ‘தமிழர்கள் எல்லோரும் புலிகளே’ என்ற ஒற்றை வசனத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமறியா தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். தமிழ் குக்கிராமங்களுக்குள் இரவு வேளைகளில் புகுந்த இராணுவத்தினரும் அவர்களுடன் பிற்காலப்பகுதியில் இணைந்தியங்கிய ஒட்டு ஆயுதக் குழுக்களும், அந்த அப்பாவிகள் கண்விழிப்பதற்குள் உயிர் குடித்துச் சென்ற கதைகள் ஏராளம் ஏராளம். அதேபோன்று, சிங்கள, முஸ்லிம் எல்லைக் கிராமங்களுக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் – மக்களை அழித்தொழிப்புச் செய்து விட்டு வெளியேறிய சம்பவங்களும் இடம்பெறாமலில்லை.

பஸ்ஸுக்குள் குண்டு வைத்தது, வணிக வளாகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியமை, பௌத்த மதத்தலங்களுக்குள் குண்டை வெடிக்கச் செய்தமை என பொது மக்கள் கூடும் இடங்களில் ஏற்பட்ட அழிவுகள் நீளமான வகையறாக்களைக் கொண்டவை. இவ்வாறான பொது இட தாக்குதல்களை பெரும்பாலும் அரச படைகள் மேற்கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றின் அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில், அவ்வாறு செய்வதைவிட்டும் ஏதோவொன்று இராணுவத்தினரை (ஆரம்பத்தில்) தடுத்தது. ஆனால், ஆரம்பம் தொட்டு வலுவான ஓர் ஆயுத இயக்கமாகவும் அதேநேரத்தில் மிகவும் கட்டுப்பாடான ஆயுததாரிகளாகவும் அறியப்பட்ட விடுதலைப் புலிகள் பின்னர், தலைக்குமேலால் வெள்ளம் போகின்ற போது சான் என்ன முழம் என்ன என்ற நிலைப்பாட்டுக்கு வந்ததாகச் சொல்ல முடியும். அதன்படி சகட்டுமேனி தாக்குதல்கள் பல அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது சம்பவத்தை புலிகளா? இராணுவமா? ஆரம்பித்து வைத்தது என்பதே மர்மமாக இருந்தது.

கணிசமான தமிழர்களின் குரலாக புலிகள் இருந்தனர். அரச கொள்கைக்கு சிங்கள மக்கள் ஆதரவளித்தனர். இந்த நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்கள், தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு உள்ளார்ந்த ஆதரவைத் தெரிவித்து வந்தனர். ஆனால், அதற்கு அப்பாற்பட்டவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இவ்வாறான நிலையில், புலிகளுக்கு ஆதரவளித்தனர் என்ற காரணத்துக்காக தமிழர்களை அரச படைகள் பழிவாங்கின என்று சொன்னால், அதிகமான இராணுவத்தினர் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிங்கள சிவிலியன்களை கொல்லப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடலாம்.

ஆனால், முஸ்லிம் மக்கள் ஏன் கொல்லப்பட்டனர்? அவர்களது மனித உரிமைகள் ஏன் மீறப்பட்டன?

இங்கு முஸ்லிம்களின் கொலை, உரிமை மீறல் என்று குறிப்பிடுவதில் பிரதானமானது, ஒரு பொது இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நடந்ததல்ல. சரியாக ‘முஸ்லிம்’ என அடையாளப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மீறல்களாகும். அந்தவகையில், இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகள் தவறானவை என்று கூறி முஸ்லிம்கள் இராணுவத்துக்கு ஆதரவளிக்கவில்லை. அவ்வாறே, இராணுவத்துக்கு எதிராக புலிகளுடன் முஸ்லிம் மக்கள் கூட்டுச் சேர்ந்து செயற்படவும் இல்லை. இவ்வாறிருந்தும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், அவர்களது அடிப்படை மனித உரிமைகள் கொச்சைப்படுத்தப்பட்டதும் எதற்காக?

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் யுத்தகாலத்தில் இரு தலைக் கொள்ளிகளாக இருந்தார்கள். இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராண்டித்தனங்களில் அதிகமானவை புலிகளாலும் ஏனைய ஆயுத இயக்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இதில் பல சம்பவங்களுக்கு முஸ்லிம்களிடையே சாட்சிகள் இருக்கின்றன. சில சம்பவங்கள் ஆதாரமற்ற விதத்தில் நம்பப்படுகின்றன.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு பின்னர், முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்களை புலிகள் ஏகத்துக்கு கட்டவிழ்த்து விட்டிருந்தனர் என்று குறிப்பிடலாம். குறிப்பாக, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது மிக முக்கியமான மனித உரிமை மீறலாகும். அதற்கு பிற்பாடு காத்தான்குடி, ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலைகள், அழிஞ்சிப்பொத்தானை இனஅழிப்பு, குருக்கள்மடத்தில் ஹஜ் பயணிகள் படுகொலை செய்யப்பட்டமை, அக்கரைப்பற்று பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, அப் பிரதேசத்துக்கு மேற்குப் புறமாகவுள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தோர் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டமை, முஸ்லிம் பிரதேசங்களில் எத்தனையோ முதலாளிமார் வாகனத்தோடு கடத்தப்பட்டு காணாமல் போனதை என இன்னோரன்ன விடயங்களாக எண்ணிலடங்கா அநியாயங்களை ஒட்டுமொத்த தமிழ் ஆயுதக்குழுக்களும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டதை மறுக்கவியலாது. எத்தனை முறைதான் மறுத்தாலும் கருணா அம்மான் போன்றோர் இது விடயத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இன்று மனித உரிமை பற்றி பேசுகின்றவர்கள், போர்க்குற்றம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கின்றவர்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற இரண்டாவது சிறுபான்மையினத்தின் மீதான மனித உரிமை மீறல்களை, விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய இழப்புக்களை பற்றி பேசுவதில்லை. ஆயினும் இவ்விடத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக, அரச படைகள் இறுதி யுத்த காலத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருக்கின்றன. அந்த முழுப் பூசணிக்காயை மறுக்க முடியாது.

விடுதலைப் புலி தலைவரும் போராளிகளும் கொல்லப்பட்டது வேறு விடயம். ஆனால், விடுதலைப் போராட்டத்துக்கு மானசீக ஆதரவு வழங்கிய ஒரு மக்கள் பிரிவினர் என்பதற்காக அப்பாவி தமிழர்கள் சகட்டுமேனிக்கு சுடப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டும், கொத்தணி குண்டுகளால் சிதறடிக்கப்பட்டும் மரணிக்கச் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள இயலாது. இது விடயத்தில், இராணுவம் இழைத்த தவறை அவர்கள் நாட்டைப் பாதுகாத்தவர்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக சமாளிக்கவும் கூடாது. அந்த அடிப்படையில் சர்வதேச விசாரணையோ அல்லது சர்வதேச கண்காணிப்புடனான உள்ளக விசாரணையோ நடத்தப்படுவது தவிர்க்க முடியாததாகி இருக்கின்றது.

அதேபோல், எவ்வாறு தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் மீது கரிசனை காட்டப்படுகின்றதோ அதுபோலவே விதத்தில் இரண்டாவது சிறுபான்மை மக்களின் உரிமை மீறல்கள் பற்றியும் அக்கறை காட்டப்படுவது இன்றியமையாதது. இதனை ஜெனீவாவும் சர்வதேசமும் வசதியாக மறந்து விட முடியாதபடி தார்மீக கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. ஒசாமா பின்லேடனிலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிலும் கொண்ட கோபத்துக்காக அல்லது உலகின் பல நாடுகளில் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள்தானே என்ற பாராமுகத்தின் காரணமாக, இலங்கையில் புலிகளால், ஒட்டு இராணுவக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் போன அப்பாவி முஸ்லிம்களை கணக்கெடுக்காமல் விட முடியாது.

இந்தக் கோணத்தில் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது, சர்வதேசம் அதிலும் விஷேடமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தெளிவாக இருப்பதாகவே தெரிகின்றது. இராணுவம் மாத்திரமன்றி புலிகளும் போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றே அவர்கள் கூறி வருகின்றனர்.

இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனக் கருதி, முஸ்லிம்களின் மீதான புலிகளின் மீறல்களையும் விசாரிக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கலாம். என்றாலும், முஸ்லிம்கள் இது விடயத்தில் சுரணையற்ற ஒரு சமூகமாக இருப்பதைக் காண்கின்றோம்.

மரணம் இறைவனால் நிச்சயிக்கப்பட்டது. எனவே, அது பற்றி விசாரணை நடாத்த வேண்டிய தேவையில்லை என்றும் சிலர் நினைத்திருக்கின்றார்களோ தெரியாது.

தமிழ் சமூகம் தம்மீதான மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை விசாரிக்கச் சொல்லி ஒற்றைக்காலில் நிற்கின்றது. அதற்காக எவ்வளவு அர்ப்பணிப்புக்களையும் ஏற்பாடுகளையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் செய்திருக்கின்றார்கள். சில விடயங்கள் போலியாக சித்திரிக்கபட்டிருக்கலாம் என்றால் கூட, எல்லா சம்பவங்கள் தொடர்பிலும் தமிழர்களிடம் ஆதாரமிருக்கின்றது.

தம்மிடமுள்ள ஆதாரங்களை உள்நாட்டில் மட்டுமன்றி எந்த சுவிட்சர்லாந்துக்கும் வந்து ஒப்புவிக்க அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். தமிழ் அமைப்புக்களும் அவ்வாறே. ஆனால், முஸ்லிம்களிடம் என்ன ஆதாரமிருக்கின்றது?

சின்னச் சின்ன விடயங்களுக்காகக் கருத்து முரண்பட்டுக் கொள்கின்ற நூற்றுக்கணக்கான முஸ்லிம் அமைப்புக்களும் சமய இயக்கங்களும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட இழப்புக்கள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் பற்றி என்ன தகவலை வைத்திருக்கின்றன.

ஒன்றுமே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற ஒருசில தகவல்களைத் தவிர முற்றுமுழுதாக ஆவணப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் முஸ்லிம் சமூகக் கட்டமைப்பில் இல்லை. ஆணைக்குழுவுக்கு முன்னால் வந்து சாட்சியமளிப்பதற்கு பின்வாங்குகின்ற ஒரு சமூகத்தின் தகவல்களை – எவ்வாறு ஆவணப்படுத்த முடியும் என்ற பிரச்சினையும் இதில் இருக்கின்றது.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை ஜெனீவா மறந்து விட்டதாக அமைச்சரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் கவலை வெளியிட்டிருக்கின்றார். அவர் சொல்வது உண்மைதான். ஆனால், வேறு சில தலைவர்களுக்குக் கவலைகூட கிடையாது. அதேபோல், முஸ்லிம்களின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடமோ, மக்கள் காங்கிரஸ் தலைவர்

ரிஷாட் பதியுதீனிடமோ, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவிடமோ 100 சதவீதமான தகவல்களை உள்ளடக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள், சாட்சியங்கள், ஒளிப்படங்கள் இருக்காது. இப்படியிருக்கையில், சர்வதேசம் முஸ்லிம்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

முதலில் கவலை வர வேண்டும். அந்த நிலைக்குக் கூட இன்னும் சிலர் வரவில்லை. ஆனால், வெறும் கவலை மட்டும் போதாது என்பதை முஸ்லிம் மக்களும் அமைப்புக்களும் அவர்களது தலைவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
(Tamilmirror)