அதிகாரத்தில் பங்கெடுக்கலாம்

சாக்கடை அரசியல் என்ற சொல்லாடலைக் கேள்விக்குள்ளாக்கும் பலரும் ஊழல், சந்தர்ப்பவாதம், சாதி, சமயம், மொழி, இனம் போன்றனவற்றைத் தூண்டும் உணர்ச்சியான பரப்புரைகள் போன்றவற்றை அதன் அடையாளமாக நினைக்கின்றனர்; முன்வைக்கின்றனர்.

சாக்கடை அரசியலுக்கு எதிராக ‘நறுமண அரசியல்’ எப்படி இருக்கும்? எந்தக் கட்சி நறுமண அரசியல் செய்கின்றது? நறுமணத்தோடு எந்தத்தலைவர் அலைந்துகொண்டிருக்கின்றார் ?என்ற உதாரணங்களைச் சொல்வதில்லை; காட்டுவதில்லை. ஆனால் அப்படி ஒன்று இருப்பதாகப் பேசுவது மட்டும் தொடர்கின்றது.

அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அந்த அங்கீகாரத்தைத் திராவிட முன்னேற்றக்கழகமே தரமுடியும் என்று எழுதியிருக்கிறேன் என்பதும் இப்போது நினைவில் வருகின்றது.

தொல்.திருமா. அவர்களின் 62 வது பிறந்தநாளின் போது எழுதியது அந்தப் பதிவு இது. தி. மு. கழகமே இதனைச் செய்யமுடியும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு கோரிக்கை; கொள்கை நிலைப்பாடு.

தேர்தல் அரசியலில் கிடைக்கும் எண்ணிக்கை சார்ந்த உரிமை அல்ல என்பது அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறியாத ஒன்றல்ல.

எல்லாத்தரப்பினருக்கும் அதிகாரத்தில் பங்களிக்கும் மேன்மையான மனநிலைக்கு ஒவ்வொருவரையும்- ஒவ்வொரு அமைப்பையும்- நகர்த்திச் செல்லும் பக்குவம் கொண்டது நமது அரசியல் சட்டம். அதனை ஏற்றுச் செயல்படுவது சமூகநீதி அரசியல். அதனை உறுதி செய்வதற்காகவே இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருக்கிறது.

அதனைக் கைவிடாமல் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் நகர்ந்து கொண்டே இருப்பது இந்தியமக்களாட்சி முறையின் பக்குவப்பட்ட நிலை. அந்நகர்வின் கருத்தியல் வெளிப்பாடே விலக்கி வைப்பதைத் தவிர்த்துவிட்டு உள்வாங்கும் திட்டங்களை மேற்கொள்ளும் திட்டமிடல்கள்.

இதிலிருந்து பின்வாங்குவோம் என்று சொல்லும் அரசியல் இங்கு எடுபடாது என்பது நடைமுறை உண்மை.நாட்டின் வளத்தில் – மனிதவளம், பொருளியல் வளம், இயற்கை வளம் என அனைத்து வகையான வளத்திலும் இந்திய மக்கள் அனைவருக்கும் பங்குண்டு என்பதை உறுதிசெய்யும் விதமாக மக்களாட்சி முறை தொடர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

நாட்டின் வளத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பங்களிப்பை உறுதி செய்வதுபோலவே ஆட்சி அதிகாரத்திலும் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்றல்ல.

அந்த அடிப்படையில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது அரசியல் கருத்தியலாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறது.

கருத்தியல் முன்வைப்பைத் தேர்தல் கூட்டணிக்கான முன் தேவையாக – நெருக்கடியாக எப்போதும் விசிக முன்வைக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. தொடர்ந்து சமூகநீதியின் பக்கம் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை ஏற்கும் ஒரு கூட்டணியில் இத்தகைய கருத்தியல் முன்வைப்பைச் சொல்லும்போது விவாதத்திற்குள்ளாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில் தவறு எதுவும் இல்லை.

ஒட்டுமொத்த இந்தியாவில் மதம் சார்ந்த பிளவுவாத -பாசிச அரசியல் மேலெழும்பி வரும் சூழலில் அதனை எதிர்கொண்டு நிற்கும் சக்தி தனக்கு இருப்பதாக நினைக்கும் கட்சி திராவிட முன்னேற்றக்கழகம்.

அந்தச் சக்திக்குக் கூடுதல் மதிப்பைத் தருவன அதனோடு நிற்கும் கூட்டணிக் கட்சிகள் என்பதுவும் அதற்குத் தெரிந்த ஓர் உண்மை. இந்த உண்மைகளின் பின்னணியில் தான் அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தியல் முன்வைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப்புரிதலோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை முன்வைத்து நீண்டகாலமாக மக்கள் திரளை மக்களாட்சி அரசியலுக்குப் பக்குவப்படுத்தியிருப்பவர் விசிக.வின் தலைவர் தொல் .திருமாவளவன்.

அவரைப் போன்றவர்களுக்கு மக்களாட்சி முறையில் கிடைக்கவேண்டிய பங்கை – ஆட்சி அதிகாரத்தில் கிடைக்க வேண்டிய பங்கைத் தருவது என்பது தி,மு.க.வுக்கு இழப்பு அல்ல.

அவரது அரசியலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தைத் திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற ஓர் அரசியல் கட்சிதான் செய்யமுடியும்.

ஏனென்றால் அக்கட்சியின் கொள்கைகளும் இயக்கமும் வரலாறும் அனைத்துத் தரப்பினருக்கும் சமவாய்ப்பு என்ற சமூகநீதியோடு தொடர்புடையவை.

Leave a Reply