ஒலிம்பிக் சொல்லித் தரும் மனித நேயம்

(சாகரன்)

குத்துச் சண்டை வீரர் முகமது அலியை அறியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. தான் பெற்ற அத்தனை பதகங்களையும் கடலில் தூக்கி வீசி வியட்நாமிற்கு எதிரான அமெரிக்க போருக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்ததன் மூலம் அவர் குத்துச் சண்டையில் பெற்ற புகழை வரலாற்றில் நிரந்தரமாக உலக மக்கள் மத்தியில் பாகுபாடின்றி பதிய வைத்திருந்தார். அவரின் மனித நேயச் செயற்பாடே இன்று வரை அவர் போற்றுதலுக்குரியவராக பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாகியிருக்கின்றது.

இன்று கியூபா மீது அமெரிக்கவும் அதன் நேச நாடுகளும் பல நாட்களாக பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி அவர்களின் ‘வாழ்க்கையை வாழவிடுவிடுங்கள் வாழ்த்தாவிடினும்….’ என்ற நிலையில் முகமது அலி போல் செயற்பட்டு வரலாற்றில் ஓரு ஒலிம்பியர் யாராவது இடம் பிடிப்பார்களா….? என்பதற்கான பதிலாக…. ‘ஆம்’ என்ற பதிலை வேண்டி நிற்கின்றோம் இன்று.

விளையாட்டுகள்; வியாபரமும், விளம்பர அடையாளங்களுமாக மாறிய இன்றைய நிலையில் இந்தியா போன்ற பெண் ஒடுக்கு முறை அதிகம் உள்ள நாடுகளில் ஒலிம்பிக் ஹொக்கியில் இறுதி வரை முன்னேறுவதற்கு முன்பாக அதில் விளையாடிய பல பெண்களும் பல்வேறு சமூக வசைபாடல்களை தாண்டி சாதித்து காட்டியதையும் நாம் இங்கு பார்த்துதான் ஆக வேண்டும்.

உயரம் தாண்டும் போட்டியில் இறுதி நிலையில் அதிக உயரத்தை தாண்டி நிரூபித்தல் என்று எற்பட்ட நிலையில் சிறிய காயம் காரணமாக சமநிலையை அடைந்த இருவரில் ஒருவர் போட்டியில் இருந்து பின் வாங்க மற்றையவர் இலகுவாக அடுத்த நிலையிற்கு செல்லாமலே தங்கப் பதக்கத்தை பெறலாம் என்றபட்ட போது மற்றவரும் தானான முன்வந்து போட்டியில் இருந்து பின் வாங்கி தங்கத்தை சக வீரரருட்ன் பகிர்ந்து கொண்ட அந்த பாங்கு மகத்தானது. இந்த வரலாற்றையும் இந்த ஒலிம்பிக்(2020) கொண்டுள்ளது.

இந்த மனித நேயச் செயற்பாட்டை நாம் பார்த்து சிலிர்த்து நிற்கின்றோம். உலக மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிகழ்ச்சியாக இது இங்கு பதிவும் செய்யப்படுகின்றது. இந்த மனித நேயமும் முகமது அலியின் மனித குல சமாதானத்திற்காக பாவிக்கப்பட்ட மனித நேயத்தை போல் தொடர வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பதில் நியாயங்கள் இல்லாமல் இல்லை.

தடைக் களப் ஓட்டப் போட்டியொன்றில் இறுதி நிலையில் போட்டி நிறைவுக் கோட்டை தவறாக புரிந்து கொண்டு முன்னிலையில் சென்றவர் நின்று விட அடுத்த நிலையில் வந்தவர் அவரை ‘ஓடி இறுதிக் கோட்டைத் தாண்டுங்கள்…’ என்று ஊக்கிவித்து அவரை முதலாவது இடத்தைப் பெறுவதற்கு அனுமதித்த நிகழ்வும் இங்கு பேசப்பட வேண்டும். இங்குள்ள மனித நேயமும் முகமது அலியின் மனித குல மீட்சிக்கான மனித நேயமாக உயர்த்தப்பட வேண்டும்.

இதே போல் ஒலிம்பிக் போட்டியின் களத்தில் ஓட்டத்தின் நடுவில் தடக்கி வீழ்ந்த சக ஓட்டக்காரரை கை கொடுத்து தூக்கி எழுந்து ஒடுவதற்கு உதவி செய்து போட்டியில் வெற்றி அல்ல வீழ்ந்தவனை தாங்கிப் பிடித்தல் என்பதை கைக்கொண்ட அந்த மனித நேயம்…. இன்னும் ஒரு படி மேலாகச் சென்று மனித குல மீட்சிக்கானதாக மாற்றப்பட வேண்டும்.

1988ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் படகோட்டப் போட்டியின்போது, சக போட்டியாளர் ஒருவரின் படகு கவிழ்வதை கனடாவைச் சேர்ந்த லாரன்ஸ் கவனித்தார். 2ஆம் நிலையில் இருந்த அவர் போட்டியைச் சற்றும் பொருட்படுத்தாமல், காயமுற்ற 2 மாலுமிகளுக்கு உதவ விரைந்தார். அவர்களை மீட்புக் குழுவிடம் ஒப்படைத்த பின், போட்டியைத் தொடர்ந்த அவர், 11 பேரைக் கடந்து 21ஆம் இடத்தில் போட்டியை முடித்தார். அவரின் வீரச் செயலுக்காக…. மனித நேயமும் அவருக்குக் கௌரவப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த மனித நேயச் செயற்பாடு மனித குல மீட்சிக்காக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்

டிடியர் ட்ரோக்பா(Didier Drogba) கால்பந்து ஆடுகளத்தில் 104 சர்வதேச போட்டிகளில் 63 கோல்களை அடித்தவர். இதனால் அவர் எவ்வளவு பிரபலமானாரோ, அதனையும் விட ட்ரோக்பாவின் மனிதாபிமானப் பணி இன்னும் ஈர்க்கக்கூடியது. உண்மையில், ஐவரி கோஸ்ட் இல் உள்நாட்டுப் போரில் இல்லாததற்கு அவர் ஒரு முக்கிய காரணம். ஐவரி கோஸ்ட்(Ivory Coast) நாட்டில் முதல் உள்நாட்டுப் போர் 2002 இல் தொடங்கியது, 2004 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெரும்பாலான சண்டைகள் முடிவடைந்த போதிலும், நாடு இரண்டாக பிரிந்து நின்றது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முஸ்லீம் வடக்கு மற்றும் அரசு தலைமையிலான கிறிஸ்தவ தெற்கு ஆக பிளவுபட்டு நின்றது.

ட்ரோக்பா தனது அணியினருடன் தொலைக்காட்சியில் தோன்றினார். நாட்டு மக்களுக்கு அறை கூவல் விடுத்தார். அவர்களுடைய செய்தி எளிமையானது ‘சண்டையை நிறுத்துங்கள் நாம் அனைவரும் கால்பந்து மீது இணைந்த பிணைப்பைக் காட்டுவோம்….’ என்றார். ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒன்றாக இணைந்த நாட்டு மக்களின் உற்சாக ஆதரவினால் ஐவரி கோஸ்ட் தேசிய அணி 2006 இல் முதல் உலகக் கோப்பையில் ஐவரி கோஸ்ட் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

இவ்வாறான ஒரு அணியை… வீரரை நாம் இந்த ஒலிப்பிக் போட்டியிலும் மனித குல மேம்பாட்டிற்காக எதிர் பார்த்து நிற்கின்றோம்.கொரனாவினால் பொருளாதாரத்தில் பல நாடுகள் வறுமையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் உல்லாசப் பயணத்துறை போன்றவை அடிவாங்கிய சூழலில் பொருளாதாரத்தில் தத்தளிக்கின்றது. இதற்கு கை கொடுத்து உதவிகளை செய்ய முன்வராமல் ஏற்கனவே பொருளாதாரத் தடை என்று பல ஆண்டுகளாக மிதித்துவரும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தற்போது தமது உளவு படையை அனுப்பி இருக்கும் சோசலிச நாட்டை இல்லாமல் செய்ய முயலும் மனித நேயமற்ற அரக்கத்தனத்தை நிறுத்துவதற்கு இன்னும் ஒரு முகமது அலி தேவையாக இருக்கின்றது….. அது இந்த இந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்தும்…..

உலகம் முழுவதும் நடைபெறும் விளயாட்டுகள். குழுக்களாக எதிர் எதிர் நிலையில் மோதி வெற்றியை ஈட்டுதல் என்பது கால்பந்தாட்டம், கிரிக்கட்ட, கூடைப் பந்து, பேஸ் போல், ஹொக்கி என்று எல்லாவற்றிலும் இரு அணிகளும் களத்தில் ‘எதிர்’ அணிகளாக இல்லாமல் ‘எதிரி’ அணிகளாக மாறி விளையாடுவது…. மோதுவது விளையாட்டை வியாபாரம் ஆக்கியதன் வெளிப்பாடுகள் ஆகும்.

உண்மையில் நட்பையும், சகோதரத்துவத்தையும், பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டிகள் தற்போது பணம் ஈட்டல், புகழ் பெறுதல் இதன் மூலம் விளம்பரம் போன்றவற்றால் தனிப்பட்ட முறையில் செல்வந்தர்களாவது என்று மாறியுள்ள நிலையில் முதலாம் இடம் இரண்டாம் இடம் என்பது எல்லாம் மோதல்காளாக மாறிவிட்டன. இங்கு கனிவுகளும்… நேசங்களும்… சகோதரத்துவமும் வியாபாரங்களுக்கு விலை போய்விட்டன தற்போதைய காலங்களில்.

இதற்கு விதி விலக்காக போட்டிக் களத்தில் சில வீரர்கள் இருந்தாலும் அணி என்று வந்தவுடன் எதிரிகளாக பார்க்கும் மனநிலை வருத்தத்திற்குரியது. அது விளையாட்டு என்பதற்கான அடிப்படை பண்பாட்டை. குணாம்சத்தை இல்லாமல் செய்துவிட்டதாக பலராலும் உணரப்படுகின்றது.

ஆனால் ஒலிம்பிக் போன்ற அதிகம் தனி நபர்களாக கலந்து கொள்ளும் வீரர்கள் ஒரு நாட்டின் வீரர்களாக இருந்தாலும் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்கள், வெற்றி இலக்கில் சற்று பின் தங்கியவர் என்று பரஸ்பரம் போட்டியின் முடிவில் அது தண்ணீருக்குள்ளும், தரையிலும், வானத்திலும் தழுவி, முத்மிட்டுப் பாராட்டுவதில் இந்த விளையாட்டில் இருக்கும் நட்பு, சகோதரத்துவம் என்பது இந்த ஒலிம்பிக் போட்டியிலும் வெளிப்பட்டது மகிழ்ச்சியே.

ஆனால் முகமது அலி போன்று தனது தங்கப் பதங்கங்களை கடலில் வீசி அன்று வியட்நாமுடன் நேரடி யுத்தததை செய்த அமெரிக்காவின் செயற்பாட்டை அவர் அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் மாநிலங்கள் மாநிலங்களாக சென்று போரை நிறுத்துவதற்காக பிரச்சாரம் செய்த ஒரு முகமது அலி இன்று தேவையாக இருக்கின்றது.

கியூபாவிற்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் செய்ய முற்படும் பிரகடனப்படுத்தப்படாத ஒரு தலைப் பட்சமான பனிப் யுத்தத்தை தடுத்த நிறுத்த ஒலிம்பிக் வீரர்களே…! ஒலிம்பிக் வெற்றியாளர்களே…!! பிரபல்யங்களே….!!! விளையாட்டுப் போட்டிகளில் காட்டிய உங்கள் மனிதாபிமானத்தை மனித குலத்தின் மீட்சிக்காக இன்று காட்டுங்கள்.

அவ்வாறு செயற்பட்டால் விளையாட்டு வீரர்களே ஒலிம்பிக் போட்டியாளர்களே நீங்களும் முகமது அலியின் பட்டியலில் இடம் பெறுவீர்கள். அப்படி இடம் பெற்றால் உங்களுடன் கரம் கோர்க்க கோடான கோடி உலக மக்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்கள் பிரபல்யம் இந்த மனித குலத்தை காக்க உதவட்டும் அப்படி இருக்குமாயின் நீங்கள் பெற்ற (தங்க) மெடல்களை விட பெரிய தங்கத் தாம்பாளத்தில் வைத்து மக்களின் மனங்களில் நீங்கள் சுமக்கப்படுவீர்கள்.

அதிக பதக்கங்களை பெற்று முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஒரு வீரரோ….

அதிக தங்கப் பதக்கங்களை பெற்று முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஒரு வீரரோ…..

இம்முறை தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெயர் பெற்றுக் கொடுத்த அந்த ஒரு வீரரோ…..

மிகக் குறைந்த வீரர்களை இந்த ஒலிம்பிக்கிற்கு அனுப்பி அனுப்பிய இருவரையும் பதக்கம் வெல்லச் செய்த வீரர்களோ…..

உலகத்தின் ஒடுக்கப்படும் மக்களின் குரலாக தமது குரலை ஒலிக்க வைக்க முடியும். அதனால் உலக மக்களின் பால் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற நல்எண்ணம் கொண்டு நவீன முகமது அலியை இந்த ஒலிம்பிக் போட்டியின் பின்பு நாமும் காணுவோமாகின் அதுதான் இந்த உலகத்தின் அதிக முக்கிய மனித நேயச் செயற்பாடாக பார்க்க முடியும். அது கியூபா மக்களை ‘வாழவிடுகள் அவர் போக்கில் வாழ்த்தாவிட்டாலும்….’ என்று வினையமாக கேட்கின்றோம்.

பெருந்தோற்று ஆரம்பித்த காலத்தில் பிரித்தானியாவின் உல்லாசப் பயணிகள் கப்பல் கடலில் பல நூறு மனிதர்களுடன் கைவிட்ட…? யாரும் ஏற்காது நிலையில் கோவிட் தொற்றாளர்களுடன் அவர்களை தமது நாட்டின் கரையியில் சேர்த்து அவர்களுக்கான சிகிச்சையினை மனிதாபினமானத்துடன் வழங்கி சுகதேகிகள் ஆக்கி தமக்கான உணவுத் தடையை ஏற்படுத்திய பிரிதானியாவிற்கு அனுப்பி வைத்த மனிதாபிமானத்தை நீங்கள் சந்தேகிப்பதும் அதனை செயற்படுத்திய கியூபாவை வீழ்த்தி சந்தோஷங்களை கொண்டாடும் மனித நேயமற்ற செயற்பாடுகளை நிறுத்துங்கள்.

இதற்கு ஆதரவாக ஒரு குரலாவது இந்த ஒலிம்பிக்கின் வெற்றியாளர் அல்லது ஒலிம்பிக் வீரரிடம் இருந்து ஒலிகட்டும் அது இந்த உலகை வாழவைக்கும் கியூபா மக்களையும் வாழ வைக்கும்.