கொலம்பியா

இந்தக் கதையில் விவரிக்கப்படும் இடம் குறிப்பிடப்படாவிடிலும் விவரிப்பில் கப்பல்கள் வரும் கரிபியன் கடல்த் துறைமுக நகரம், உயர்ந்த சுவர்கள் கொண்ட வீடுகள் முன்பக்கத்தில் பார்த்தால் எதுவும் தெரியாது ஆனால் பல அறைகள் கொண்ட மாடிக்கட்டிடங்கள், வீட்டின் பின்பகுதிகள் மலர்த்தோட்டங்கள் என நீளும். இந்தக் கதையில் துறைமுகம் ,ஆறு கரிபியன் கடலில் சேருமிடம் எனக் குறித்திருப்பதால் மக்டலீனா ஆறு என அனுமானிக்க முடிகிறது. இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் கதையின் கதாநாயகி பேர்மினாவின் மேல்(Fermina Daza) புளோரின்ரினே அரியாவின் Florentino Ariza வைத்திருந்த காதல் ஒரு விதத்தில் பிளேக் நோய்க்கு ஒப்பான படிமமாகிறது. பிளேக் நோய் 18 ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் கட்டகேனவில் ஏற்பட்ட காலத்தில் இந்தக்கதை நடப்பதாக அறிய முடியகிது.

ஒரு விதத்தில் நமது நாடுகளில் ஏற்படும் ரீன்ஏஜ் காதல்போல் ஏற்பட்டுக் காதல் கடிதங்கள் வடிவத்தில் பரிமாறப்படுகிறது. அதன்பின் தந்தையின் எதிர்ப்பால் கதாநாயகிக்கு டாக்டர் ஒருவருடன் திருமணம் நடக்கிறது. பலகால திருமண வாழ்வின்பின் டாக்டர் மரணமடைகிறார். அச்சந்தர்ப்பத்தில் பிரிந்த காதலன் மீண்டும் தனது காதலைத் தெரிவிக்கும்போது ஆரம்பத்தில் பேர்மினாவால் நிராகரிக்கப்படுகிறது. அப்பொழுது ஐம்பது ஒரு வருடங்கள் ஒன்பது மாதங்கள் நாலு நாட்கள் உனக்காகக் காத்திருந்தேன் என்பதைச் சொல்லுவது மிகவும் அழகான தருணம். இந்தக் கதையை படமாகப் பார்த்தேன். நாவலில் வர்ணனையில் பேர்மினா அழகையும் இடுப்பை உயர்த்தியபடி நடப்பதையும் வர்ணிப்பதால் ஏற்பட்ட எனது மனப்பதிவு ,படத்தில் வந்த நடிகை (Giovanna Mezzogiorno) சிறப்பாக நடித்தாலும், தோற்றத்தில் எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார். எனது மனத்தில் பதிவாகிய மார்குவஸ்சின் கதாநாயகியை படத்தில் காணமுடியவில்லை.

கட்டகேனாவுககு போவதற்கு ஆவலாக இருந்தாலும் கொலம்பியாவின் நடக்கும் கொரில்லா ஆயுதப்போராட்டம்,போதைவஸ்துக் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் காளி, மண்டலின் என்ற கொலம்பிய நகர்களில் உள்ள மாபியா எனப் பலகாரணிகள் தயக்கத்தை ஏற்படுத்தியது. ஓரு இலச்சம் ஹெக்டேரில் கொக்கோ சாகுபடி நடத்தும் இரண்டு நாடுகளில் பெருவும், கொலம்பியாவும் இடம் பெறுகின்றன. உலகம் முழுவதும் இருந்து மிருகவைத்தியர்கள் கட்டகேனா மகாநாட்டில் பங்கு பற்றுவது அந்த இடத்தில் அமைதியைக் காட்டுகிறது என்ற எனது ஊகம் மனத்தைரியத்தைக் கொடுத்தது,

சந்தியாகோவுக்கு இருந்து புறப்பட்ட விமானம் கொலம்பியாவின் தலைநகரான போகட்டா ஊடாக கட்டகேனா சென்றது.

போகட்டாவில் ‘மஜிக்கல் ரியலிசம் உங்களை வரவேற்கிறது என விமான நிலயத்தில் போட்டிருந்தார்கள். கபிரியல் மார்குவஸ் எழுத்து நடையை தங்களது நாட்டுக்கு வருகைதரும் உல்லாசப்பிரயாணிகளை வரவேற்கும் தேசிய வசனமாக்கி இருப்பது எம்மைப்போல் எழுதுபவர்களை மகிழ்ச்சி கொள்ளவைக்கும். கபிரியல் மார்குவஸ் கொலம்பிய அரசை எதிர்த்து சிலகாலம் மெக்கிக்கோவில் வாழ்ந்தார்.

விக்டோரியா என்ற பெண் எங்களுக்கு விமான நிலயத்தில் வரவேற்கும் வழிகாட்டியாக வந்து ஹோட்டலை அடைந்தோம். விக்டோரியா ஒரு ஆப்பிரிக்க கருப்பு பெண். ஆங்கிலம் பேசப்படாத நாட்டில் அழகாக ஆங்கிலம் பேசுவதால் ஆச்சரியத்துடன் கேட்டபோது பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக இருந்து விட்டு வழிகாட்டியாக வேலை செய்வதாக கூறினாள்.

விமானத்தில் இறங்கியதும் கொலம்பியா, சிலிபோல் இல்லாமல் பல வர்ணத்தில் மனிதர்கள் தெரிந்தார்கள். இங்கு கிட்டத்தட்ட அரை வாசிப்பேர் கலப்பு இனமெனச் சொல்லப்படும் கறுப்பு, ஆதித் தென்அமரிக்கர் மற்றும் ஐரோப்பியர்எனக் கலந்தவர்கள். . போர்த்துக்கீசியர் பிரேசிலில் இருந்து கறுப்பு அடிமை வியாபாரம் செய்தபோது அங்கிருந்து ஆப்பிரிக்கர்களை, ஸ்பானியர்கள் வாங்கினார்கள். ஆப்பிரிக்க மக்கள் இங்கு பிரேசில்போல் அதிக அளவில்லாத போதிலும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள் . ஸ்பானிய காலனி அடிமைமுறை இருந்தபோது தப்பியோடியவர்கள் இன்னமும் ஒரு இடத்தில் பண்டு(ஆப்பிரிக்க மொழி) மொழி பேசவதாக விக்டோரியா கூறினாள்.

கட்டகேனா 16 நூற்றாணடில் ஸ்பானியர்களால் உருவாக்கப்பட்ட துறைமுக நகரம். இங்கிருந்துதான் தென்அமரிக்காவின் தங்கம் வெள்ளி என்பன ஸ்பானியருக்கு போனது. ஆரம்ப ஐரோப்பியரது வரவும் இதன் வழியாக நடந்தது. ஸ்பானியரிடமிருந்து பலதடவை இந்தத் துறைமுகத்தை கைப்பற்ற பிரான்சியக் கடற்படை முற்றுகையிட்டதுடன் நகரத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றியும் விட்டார்கள். அவர்களை எதிர்த்து ஸ்பானியர் பேரிட்டார்கள். தற்காலத்தில் இந்த நகரத்தின் பழைய பகுதி முழுவதும் யுனஸ்கோவால் கலாச்சார பகுதியாக பராமரிக்கப்படுகிறது. முழு நகரமே ஒரு வரலாற்று மியூசியமாக பாதுகாக்கப்படுகிறது. பதினாறாவது நூற்றாண்டில் ஸ்பானியர்களில் இருந்த சமூக அடையாளங்கள் அவர்களது வீடுகளில் கதவுகளில் தெரியும்.

கடலோடிகளின் இராணுவத்தினர், அரசாங்க அதிகாரிகள் ,வியாபாரிகள் என்ற வேறுபாடுகள்அவர்களது வீட்டு வாசலிலே அறிந்து கொள்ளமுடியும். முழு நகரத்தின் கட்டிடங்கள் முழுவதுமே பாதுகாக்கப்படுவதால் அந்த இடத்தில் புதிய ஹோட்டல்கள் கட்டமுடியாது. ஆனாலும் வீடுகள் ஹோட்டேல்களாக உருவாகாகின்றன. நாங்கள் இருந்த ஹோட்டேல் எட்டு அறைகள் கொண்ட மாடி வீடு. ஆனால் சகல வசதியும் கொண்டது அறையில் வடிவமைப்பு , உள்ளே இருந்த குளிக்கும் தொட்டி 200 வருடங்கள் முன்பானவை.

ஸ்பானிய கடலோடி பெட்ரோ டி கெரிடியா (Pedro de Heredia) என்பவர் 150 பேருடனும் 15 குதிரைகளுடனும் வந்து தென்னமரிக்காவின் இந்தப் பகுதியை உள்ளுரவாசிகளிடம் இருந்து கைப்பற்ற கட்டகேனா நகரத்தை 1554ல் ஸ்தாபித்தார் அவரது சிலை நகரின் முக்கிய இடத்தில் இருந்தது. இந்தப் புகழ் பெற்ற கடலோடி பிற்காலத்தில் கடலில் மூழ்கி இறந்தார்

கட்டகேனா தெருக்கள் அழகானவை சதுரவடிவ அமைப்பான நகரம். ஒடுங்கிய கல் பதித்த பாதைகள், உயரமான சுவர்களையும் அதன்மேல் பூமரங்கள் தொங்கும் சாளரத்தைக் கொண்டவை. பல தேவாலங்கள், பண்டகசாலைகள் பொதுவெளிகள் மற்றும் குதிரை வண்டிகள் என 16ம் நூற்றாண்டை கண்ணுக்குள் கொண்டுவரும். இந்த நகரத்தைப் பாதுகாக்க நான்கு பக்கங்களிலும் பெரிய கோட்டைச் சுவர்கள் அமைத்திருந்தார்கள். கோட்டைச்சுவர்களில் பீரங்கிகள் வைப்பதற்காக இடைவெளிகள் உள்ளது எதிரிகள் கடல் மார்க்கமாக வந்ததால் கடலை நோக்கிய கோட்டை மதிலின் பகுதிகள் மிகவும் அகலமாக இருந்தது. வீடுகள் கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருந்தன. தற்பொழுது முழுநகரமும் உல்லாசப்பியாணிகளது கடைகள், ஹோட்டேல்கள் உணவுச்சாலைகளாக மாற்றப்பட்டிருந்தன. இந்த நகரத்தைப் பாலத்தால் இணைத்து புதிய கட்டகேனா நகரை உருவாக்கியிருக்கிறார்கள்

சைமன் பொலிவர்
எனது மகாநாட்டுக்கும் முதல் நாள் ஊரைச் சுற்றுவது எனத் தீர்மானித்தபோது அன்றுதான் 52 வருடங்களாகஅரசாங்கத்துடன் போர் புரிந்த பார்க்(FARC)) கொரில்லா அமைப்பு அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தத்தில்கையெழுத்திடும் நாள். 50 மேற்பட்ட உலகத் தலைவர்கள் வந்திருந்தார்கள். அமரிக்க இராசாங்க காரியதரிசி , கியூபா தலைவர்என இடதுசாரி வலதுசாரி என்றில்லாமல் சகல லத்தீன் அமரிக்க நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தார்கள்.

சமாதான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் வைபவம் மதியத்திற்கு பின்பாக நடந்தது . அவர்கள் கையெழுத்திடும் மகாநாட்டு மண்டபம் எமது ஹோட்டேலுக்கு சில கட்டிடங்கள் தள்ளியிருந்தது. ஊரெங்கும் பொலிஸ் பாதுகாப்பு என பல பாதைகள் வாகனப் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்தன. வீதித்தடைகளில் பொலிஸ், இராணுவம் பாதுகாப்பிற்கு நின்றார்கள்.

‘போகட்டா- தலைநகரில் நடத்தாமல் இங்கு ஏன் இந்த வைபவத்தை வைக்கிறார்கள்?’ என்றபோது ‘கட்டகேனா இலகுவில் பாதுகாக்கக்கூடிய நகரம்’ ‘ என பதில் வந்தது.

கொலம்பியாவின் இரத்தகறை படிந்த வரலாறு பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்டதுடன் , பல இலட்சம் மக்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்து வாழுகிறார்கள். உலகத்திலே அதிகமானவர்கள் இடம் பெயர்ந்து வாழுவது கொலம்பியாவிலே. ஒரு பகுதியில் போதைமருந்து கடத்தல் மறுபுறத்தில் ஆயுதப்போர் என அரைநூறறாண்டுகள் தவித்த ஒருநாட்டின் ஒரு முக்கியமான நாளில் நாமும் அங்கு நிற்கிறோம் என்ற நினைவு நிறைவைக் கொடுத்தது. அதே நேரத்தில் பல இடங்களை பார்க்க முடியாமல் போய்விடுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

எங்களது வழிகாட்டியாதான விக்டோரியாக்கு 30 வயதிருக்கும் பல இடங்களுக்குப் போகமுடியாது கைப் பிசைந்தபடி நின்றாள். ‘நடந்து போவதற்கு பல இடங்களில் தடை இராதுதானே? நடப்போம்.’ என அவளை இழுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

நாங்கள் சென்ற இடம் சைமன் பொலிவர் பூங்கா. அங்கு சைமன் பொலிவர் குதிரையில் அமர்ந்தபடி இருந்தார். தென் அமரிக்க சரித்திரத்ரதை உருவாக்கிய இருவர் . ஒருவர் ஆர்ஜன்ரீனா ஜெனரல் ஜேசே டீ சான் மாடடின் ( José de San Martín) மற்றவர் சைமன் பொலிவர்.

சைமன் பொலிவர் ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல, பல தென் அமரிக்க நாடுகளை விடுதலை செய்தவர். வெனிசுலாவில்பிறந்தது ஐரோப்பவில் பல இடங்களில் பயணம் செய்தவர். ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி பெரிய கொலம்பியா என்ற நாட்டை உருவாக்கி ஆண்டதுடன் தென்அமரிக்காவில் ஒரு ஸ்பானீஸ் ஐக்கிய அமரிக்காவாக கொண்டு வரக் கனவு கண்டவர். சில வருடங்கள் அரச அதிபராக இருந்துவிட்டு மிகவும் இளம் ( 47 ) வயதில் இறந்தவர். அவரது இறந்தபின் அவர் ஆண்ட நாடு கொலம்பியா , வெனிசூலா , ஈகுவடோர் , பொலிவியா , மற்றும் பனாமாவாகப் பிரிந்தது, அவரது பெயரில் பொலிவியா உருவாகியது. சைமன் பொலிவர் புரட்சியாளர் , இராணுவ வீரர் என்பதோடு சிந்தனையாளராகவும் , எழுத்தாளராகவும் இருந்தார்

சைமன் பொலிவர் பூங்காவிற்கு முன்பாக இன்குசிசன் மியூசியம் இருந்தது. வெளியால் நின்று பார்த்துவிட்டு உள்ளே போகத் துணிவு ஏற்படவில்லை. ஏற்கனவே உள்ளே இருப்பவையை இணையத்தில் பார்க்கமுடிந்தது.. அக்காலத்தில் சித்திரவதைக்ககுப் பாவிக்கப்பட்ட கருவிகளை வைத்திருந்தார்கள். .

போர்த்துக்கேயரும் ஸ்பானியர்களும் 400 வருடங்களுக்கு மேல் செய்த கைங்கரியம் இது. கத்தோலிக்க சமயமும் அதன் தலைவரான போப்பாண்டவரும் செய்த பாவங்கள் எக்காலத்திலும் பாவ மன்னிப்பு பெறமுடியாதவை. ஆரம்பத்தில் ஸபெயின் என்ற நாடு இருக்கவில்லை . அதன் முன்னோடியான கஸ்ரில் (Castile)) அரசு தன்னை நிலை நிறுத்த இன்குசிசன் பயன்படுத்தப்பட்டது.

இன்குசிசன் என்பது கடும் விசாரணை.: அமரிக்கர்கள் ஈராக்கிலும் நமது நாடுகளில் இராணுவம் , பொலிஸ் , விடுதலைப்புலிகள் என்பவர்கள் செய்யும் சித்திரவதைக்கு கொள்ளுத்தாத்தா. இந்த இன்குசிசன். ஆரம்பத்தில் கத்தோலிக்கர்களாக மாறிய யுதர்கள் மீது நடத்தப்பட்டது. மதம் மாறியபின்பும் இரகசியமாக யுத மத வழிபாடுகள் செய்கிறார்களா எனவிசாரிப்பதற்காக போப்பாண்வரின் உத்தரவால் உருவாக்கிய இந்த விசாரணை பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொலைசெய்தும் , சித்தரவதை செய்வதிலும் முடிந்தது. இதனாலே அக்காலத்தில் ஸ்பெயினிலும் ,போர்த்துக்கலிலும் இருந்த 3000 யூதர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மிகுதியினர் ஸ்பெயினில் வசிக்க முடியாமல் சகல சொத்துக்களையும் விட்டு வட ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றனர். இவர்களே செபாடிக் யூதர்.

பிற்காலத்தில் இன்குசிசனில் இஸ்லாமியர்களையும் சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். அத்துடன் போர்துக்கேயர் , தங்கள் காலனிகளாகிய பிரேசில் மற்றும் கோவாவுக்கும் எடுத்து சென்றார்கள். இதனால் கோவாவில் இருந்து இந்துகள் வெளியேறினார்கள். ஸ்பானியர்கள் தென்னமரிக்காவில் கத்தோலிக்கர் அல்லாதவர்கள் மீதும் தென்னமரிக்காவின் ஆதிவாசிகளுக்கும எதிராக இன்குசிசன் நடந்தினார்கள்.. அப்படியாக விசாரணைகள் நடந்த இடம் பிற்காலத்தில மியூசியமாக மாறியது.

பிறதேர்ஸ் ஒவ் கரமாட்சேயில் (brothers of Karamazov இயேசநாதர், ஸ்பெயினுக்கு வந்தபோது அவரும் இன்குசிசன் உடபடுகிறார் எனும் அழகான படிமமாக தாஸ்கரவ்வகி கையாளுகிறார்.