அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்

அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் -பெயரைச் சொன்னால் கோவித்துக்கொள்வார்.தம்பட்டம் அடிக்கவேண்டுமா என்று சினப்பார்.

கோவையில் அவர் இளைஞனாய் உலவிய காலத்தே -கட்சி கட்சி என்று செங்கொடி பிடித்து அலைவதையும் -முழு நேர ஊழியராகி, கட்சிக்கு உழைக்கப்போகிறேனென்று ஒற்றைக்காலில் தவமிருந்ததையும் கண்ணுற்ற பெற்றோர் -அவரை திசை திருப்புவதற்காக எண்ணி மாய்ந்தனர்.

ஏதாகிலும் ஒரு வருவாயீட்டும் பணியில் இணைத்துக் கொண்டு விடுவானாயின், ‘திருந்தி விடுவான்’ என்று பகீரத முயற்சிகள் செய்ய -அந்தத் தோழர் என்ன செய்தார் தெரியுமா?தன் கையை எரியும் நெருப்பில் கருக்கிக் கொண்டார்!அதிர்ந்து போன பெற்றோர் வாயடைத்து நின்றனர்.அதுபோழ்தில் – ஒருநாள் – புலர்காலையொன்றில் அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.