எமது தேசத்தின் நிலமை

சிறை சென்று மீளும் ஒரு ஆணுக்கே வாழ்க்கை தலைகீழாக மாறும் நாட்டில் ஒரு பெண்ணின் நிலையை சொல்லவே தேவையில்லை.
அவளை சிறை சென்று பார்க்க அவள் குடும்பத்தாரோ நண்பர்களோ தயங்கினர். யாரும் சென்று பார்ப்பதே இல்லை. வெளியே வந்தபோது அவள் வேறு ஒருத்தியாக வந்தாள். என்ன சாப்பிட்டீர்கள் என்று யாரும் கேட்டாலே பதில் சொல்ல பயந்தாள். அவளிடம் முதுமை மட்டும் பலமடங்காகி இருந்தது. சமூகம் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவளை எத்தனை பேர் சிறையில் சீரழித்தார்கள், அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பதை அறிவதிலேயே நாட்டம் காட்டினார்கள். அங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என அவள் எவ்வளவுதான் கூறினாலும், அவர்கள் அதை நம்புவதாக இல்லை. காதலித்தவன் எப்போதோ காணாமல் போயிருந்தான். அவள் உள்ளே இருந்தபோது, வெளியே இருந்ததைவிட நிம்மதியாக இருந்தாள்.
இது தான் என் நாடு இது தான் என் நாட்டின் நியாயம், தர்மம், நடைமுறை, வழக்கம், தலைஎழுத்து எல்லாம்.

போராட்டத்தில் ஈடுபட்டு இறந்து போய்விடாது உயிர் தப்பி இன்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனிதர்களை பற்றி கவலையற்ற நமக்கு, உயிரற்ற கட்டங்களும் தூபிகளும் எதைத்தான் சொல்லி விடப்போகிறது. இறந்தவர்களுக்கு பொதுவெளியில் விளக்கு கொளுத்துவதையே சட்டவிரோதம் என நீதிமன்றமே கூறியபின் ஒரு சர்வாதிகார ஆட்சியில் எதை தான் தமிழர்கள் நாங்களோ, இல்லை தமிழ் அரசியல்வாதிகளோ செய்து விடமுடியும்.

புரட்சி ஆர்பாட்டம் நாலு ஆத்திரமான FB பதிவுகள் போட்டு ஆத்திரம் தீர்ப்பதை தவிர வேறு எதைத்தான் ஆக்கபூரவமாக செய்யமுடியும்.
இதில் இன்னும் எந்த உயிர் போகபோகிறதோ என்பதே என்மனதில் இப்போதுள்ள கலக்கம்.