கடைசி விவசாயி

வறண்டு போயிருக்கும் கிராமத்தில் ஒரு படி நெல்லாவது செய்து தருமாறு ஊர் மக்கள் அந்த மூத்த விவசாயியை வேண்டி நிற்கின்றனர் என்று ஒரு வாழ்வியலாக தொடங்குகின்றது இத்திரைப்படம்.

ஒரு திரைப் படம் என்ன செய்யும்….? உங்களை அழ வைக்கும்…. உங்களை கேள்வி கேட்க உந்தும்…. இயற்கையை ரசிக்க தூண்டும்….. மனிதர்களை நேசிக்க செய்யும்…. அப்படி பட்ட சினிமாதான் இந்த சினிமா

ஒரு திரைப் படம் ஒருவரை அழ வைக்கும் முடியும் என்றால்! நாம விட்டு விட்டு வந்த இயற்கை வாழ்வியல் முறை…. அருமை…. இந்த வாழ்க்கை நாம் வாழ வேண்டும்…. என்று ஏங்க வைக்குகின்றது

ஒரு முறைதான் பார்த்துவிடுங்களேன் இந்த திரைப்படம்

உண்மையான விவசாயின் கதை ஒரு கிராமத்திற்கு கமராவை எடுத்துகிட்டு அந்த கிராம மக்களுக்கே தெரியாமல் படம் பிடித்திருப்பதாக உணரவைக்கும் திரைப்படத்தை…

பொது போக்கிற்கான படம் அல்ல. விஜய் சேதுபதிக்கான படமும் அல்ல. யோகி பாபு இற்கான திரைப்படமும் இல்லை. மாறாக ‘காக்கா முட்டை’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன், கிராமத்து மூத்தவர் நல்லாண்டி, விவசாயதிற்கான நல்ல சினிமாவிற்காக பாருங்கள்.

அமைதியாக திரைப் படத்துடன் ஒன்றிப் பார்க்கும் நேரம் ஒன்றைத் தெரிவு செய்து பாருங்கள். பின்பு என் விமர்சனத்திற்கு கருத்திடுங்கள். நல்ல சினிமாவை தவறவிடவில்லை என்று உணருவீர்கள் இத்திரைப்படம் சிலருக்கு பிடிக்காது அதுவும் ‘அரபிக்குத்து’ குத்தாட்டம் போடும் அதில் மூழ்கி இருக்கும் பலருக்கும் பிடிக்காது…?

அரபிக்குத்தில் மூழ்கி கிடக்கும் இளைய தலைமுறையின் கண்களில் இது போன்ற படங்கள் சில வேளைகளில் காட்சிப் பிழையாகி விடுவது கொடுமை.

இந்தப் படத்தில் விஜய சேதுபதி, யோகி பாபு ஐ தவிர வேறு யாரும் அறியப்பட்ட நடிகர்கள் அல்ல. அதுவும் விஜய சேதுபதி ஒரு சகல வல்லமையும் உடைய ஹீரோவாக காட்டாமல் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட…. மனப்பிறழ்வுள்ள இளைஞராக ரி.எம். சௌந்தரராஜனின் ‘உள்ளம் உருகுதப்பா…’ என்ற முருகன் பாடலுடன் அறிமுகமாகி கௌர வேடத்தில் வந்து படத்தின் இடையிலேயே கரைந்து போகும் பாத்திரத்தை அவரைத் தவிர வேறு எந்த தமிழ் நடிகனும் ஏற்றுச் செய்திருக்கு முடியாது. அந்த வகையில் அவருக்கு ஒரு சிறப்பு மரியாதை பாராட்டு.

வீதி ஓரத்தில் இராமையா(விஜய் சேதுபதி)விற்கு விபூதி கொடுக்கும் எச்சில் இலை பொறுக்கிச் சாப்பிடும் ஒரு ‘சாமி’ மேலதிமாக ஒரு தடவை விபூதி இராமையாவிற்கு கொடுக்க

‘…சாமி கொடுத்துவிட்டீர்களே இது யாருக்கு…?’ என்றதற்கு

‘…மறந்துவிட்டாயா அங்கே திரும்பிப் பார்… அவளுக்கு கொடு…’ என்கிறாரே

இராமையாவின் மனப்பிறழ்விற்கு காரணம் காதல் தோல்வி என்று கணக் காட்சியில் தெரிவித்திருப்பது அபாரம்

அறிவு (எஞ்சாயி… பாடல் புகழ்) எழுதிய பாடல்களுக்கு சந்தோஷ் நாராணயன் இசை அமைத்திருப்பது மிகச்சிறப்பு. சமூகம் சார்ந்த விழிப்புணர்வுப் பாடல்களை எழுதும் அறிவு ஐ மறைக்க முற்படும் சில தமிழ் திரையுலகினர் மத்தியில் அவரை முன்னுக்கு கொண்டு வருதாக அமைந்திருப்பதும் சிறப்பானது.

கிராமத்து மூத்தவர்… விவசாயி நல்லாண்டி ஐ கூப்பிட்டு மாயாண்டி ஆக நடிக்க வைத்துள்ளார்கள். நடிக்க வைத்திருக்கின்றார்கள் என்பதை விட பெரியவர் திரைப்படத்தில் வாழ்ந்திருக்கின்றார் என்றே கூற வேண்டும்.

நீதிபதிகும் சமூகத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாத நீதிபதிகள் மத்தியில் நாம் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு நீதிபதி சமூகத்தை புரிந்து கொண்ட இயல்பான இளம் வயது பெண்ணை நடிக்க வைத்திருக்கின்றார்கள். அது சிறப்பான விடயம்.

படத்தில் நடிக்காமல் வாழ்ந்து இருப்பவர் நீதிபதியாக வரும் ரேச்சல் ரெபேக்கா(ஆயுர்வேத மருத்துவர் Raichal Rabecca ) இப்படித்தான் ஒரு நீதிபதி அதுவும் பெண் நீதிபதி இருக்க வேண்டும் என்று ஒரு சமூக அங்கீகாரம் பெற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்ப வரைக்கும் அவைரை நான் நீதிபதி இடத்தில் இருந்து ஒரு நடிகையாக பார்க்க முடியவில்லை. அவர் வரும் காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நடிப்பு…. காட்சி அமைப்பு….

பொறி பறக்கும் வசனங்களை தாண்டி எமது மனதிற்குள் பொறியை ஏற்படுத்தும் வசனங்கள் என்று காட்சிகள் நகருவது சிறப்பு.

தக்காளி விதை வாங்க கடைக்கு செல்லும் நல்லாண்டி இடம் விதைப் ‘பக்கற்ரின் 600 ரூபாய் நல்லா காய்க்கும் என்றதற்கு…”

‘அப்போ அதிலிருந்து விதை எடுத்து அடுத்தமுறை கன்றுகள் எடுக்கலாம்…” என்றதற்கு

‘விதை இல்லாமல்தான் பழங்கள் வரும்…’ என்றதற்கு பெரியவர் தனது கோவத்தை மிக எளிமையாக

‘ஆம்பிளை பிள்ளை பிறந்து விதைக் கொட்டை இல்லாமல் இருந்தால் அப்போது புரியும் அவனுக்கு…’ என்பாரே

இதனை விட மரபணு மாற்றப்பட்டு நலமடிக்கப்பட்ட விதைகள் பற்றி மிகச் சிறப்பாக பொறி தட்டும் வசனங்கள் உருவாக்க முடியாது

‘உலகமே உன்னை வெறுத்தாலும் விவசாயம் உன்னை வெறுக்காது உன்னைக் கைவிடாது…’ என்று சிறையில் இருக்கும்போது சக கைதி இளைஞர் ஒருவரிடம் கூறும் வார்த்தைகள்…

என் மனக் கண்முன்னே என் தந்தையை இழுத்து வந்ததில் இந்த சினிமா என்னை ஆட்கொண்டுவிட்டது. இது எனக்கானது மட்டும் அல்ல பலருக்குமான உணர்வாக உருவாகும் காட்சி உண்மை யதார்த்தம்.

‘கடவுளின் வாகனத்தை யாரும் கொல்லுவாங்களா…? என்று மயிலைக் கொன்றதாக நீதி மன்றம் கேள்வி கேட்கும் போது பதிலளிப்பதுவமாக மாயாண்டியின் கிராமம் அங்கு நிற்கின்றது திரைப்படம் எங்கும்

கூடவே நீதிபதியிடம் ‘வயலுக்கு நீர் பாய்ச்ச வேணும் என்னை விடிவியுங்கள்..’ என்று மாயாண்டி கேட்க

‘நெல்லில் என்ன வருமானம் வரும்…?’ என்று நீதிபதி கேட்டு

‘அதற்கான காசை நீதிமன்றம் தருகின்றது… நீங்கள் சிறையில் இருங்கள் சில நாட்கள்..’ என்றதற்கு

‘சாகும் அந்த 1000 (நெல்)உயிர்களுக்கு யார் உயிர் தருவது என்று கூறுவாரே. மண்ணுக்கும் உயிர் இருக்கு என்று உருக வைத்த காட்சி இது.

‘இவரா மயிலை கொன்றிருப்பார்…” என்று நீதிபதி அவரைக் கைது செய்து நீதி மன்றம் கொண்டுவந்த பொலிஸ்காரர்களை பார்த்து கேட்பது என்றவாக போகும் காட்சிகள் வசனங்கள்.

பொதுவாக பொலிஸ்காரரைப் பற்றி எதிர் மறையான எண்ணங்களை காட்டும் திரைப்படங்களுக்கு மத்தியில்… பொலிஸ் காவலில் உள்ள மாயாண்டியின் கிராமத்தின் வயலுக்கு கடமை நேரத்தில் தினமும் நீர் பாயச்சும் படி நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட….

அதன்படி கிராமத்து வயலில் வயலுக்கு நீர்பாய்சலில் ஈடுபடும் பொலிஸ்காரர்அந்த வாழ்க்கையின் மகிழ்சிகளை உணர்ந்து கிராமத்து இளைஞர்கள் ‘சார் விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் நீர் பாய்ச்சலை…’ என்ற போது இந்த ‘இரண்டு மணி நேரமும்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்…’ என்று போடும் போடு விவசாயம் என்பது எவ்வளவு மகிழ்வானது நிறைவானது என்பதை எடுத்திம்பி நிற்கின்றது திரைப்படம்.

படத்தின் நிறைவுக் காட்சியில் பெரியவர் இறந்து விடுவார் என்ற நாம் பதபதைப்பில் இருப்போம். இருந்த ஒரு விவசாயியும் இறந்து விட்டார் என்று கதையை முடிப்பார்கள் என்றிருந்தால் அவர் எழுந்து….

கிராமத்தின் குல தெய்வ வழிபாடு அதற்கான மடைப்பண்டம் எடுத்தல் கொண்டாட்டம் ஊர் பெரியவர்களுக்கான மரியாதை செலுத்தல் என்றவாக ஊர் மக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் நம்பிக்கையுடன் திரைப்படத்தை முடித்திருப்பது சிறப்பு.

இப்பவே ஊருக்கு கிழம்பி என் தந்தையர் வாழ்ந்த அந்த தோட்டத்தின் சேத்திற்குள் கால் வைக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய திரைப்படம்.

என்னிடம் இல்லாத நிலத்தை தேடும் ஏக்கமும் எனக்குள் உட்கொண்டு உள்ளத்தில் சம்மாணம் கொட்டி உட்கார்ந்து தம்பட்டம் அடிக்க வைத்திருக்கின்றது.

நல்லாண்டி பெரியவரின் முதல் படமும் கடைசிப்படமும் இதுதான் ஏன் எனில் அவர் இப்போது உயிருடன் எம்மோடு இல்லை என் தந்தை போல்.