கி.ரா.வுக்கு அரசு மரியாதை: தமிழக அரசுக்கும் கௌரவம்

தான் சார்ந்த கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் தமிழ் இலக்கியத்தின் மையப் பரப்புக்கு கி.ரா. கொண்டுவந்த பிறகே தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பகுதிகளிலிருந்தும் மண்ணை மையமாகக் கொண்ட இலக்கிய இயக்கங்கள் உருவெடுத்தன. தமிழிலிருந்து நோபல் பரிசுக்கும் ஞானபீட விருதுக்கும் முன்னிறுத்தக்கூடிய தகுதி படைத்த முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.

கி.ரா.வினுடைய முதல் கதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. இவரது ‘வேட்டி’, ‘கதவு’, ‘நாற்காலி’, ‘கன்னி’, ‘பேதை’ போன்ற சிறுகதைகள் பரவலான கவனிப்பைப் பெற்றன. 1976-ல் வெளியான அவருடைய முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்’ இலக்கிய உலகில் கி.ரா.வின் இடத்தை உறுதிப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக கி.ரா. எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த வரிசை நாவல்களில் மூன்றாவதாக ‘அந்தமான் நாயக்கர்’ நாவலை எழுதினார். இவை தவிர ‘கிடை’, ‘பிஞ்சுகள்’ போன்ற குறுநாவல்களும், புனைவு நூல்களில் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’யும் முக்கியமானவை.

வெவ்வெறு தலைப்புகளில் சிறுசிறு நூல்களாக அவர் வெளியிட்ட நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகள் ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ என்ற ஒரே நூலாக வெளியிடப்பட்டது. தமிழுக்கு கி.ரா. அளித்த மாபெரும் கொடைகளுள் இந்நூலும் ஒன்று. ‘மழைக்காகத்தான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன், அப்போதும் மழையையே பார்த்துக்கொண்டிருந்தேன்’ என்று எழுதிய கி.ரா.வின் மகோன்னதத்தை உணர்ந்த புதுச்சேரி பல்கலைக்கழகம் அவரை சிறப்புப் பேராசிரியராக்கிப் பெருமை கொண்டது.

நாட்டார் மரபை ஆவணப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன் எழுத்தில் அந்த மரபுக்கு செவ்வியல் அந்தஸ்தையும் கொடுத்த கி.ரா., இறுதிக் காலம் வரை தளராமல் எழுதிக்கொண்டிருந்தார். தமிழே அவர் மூச்சாக இருந்தது. நிறைவாழ்வை முடித்துச் சென்றிருக்கும் கி.ரா.வின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டிருப்பதும், அவருக்கு அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் தமிழகத்தில் மிகுந்த வரவேற்புக்குரிய ஒரு புதிய தொடக்கம். மக்கள் இலக்கியர் கி.ரா. இன்னொரு மரபின் தொடக்கத்துக்கும் விதையாகியிருக்கிறார். இது தமிழக அரசுக்கும் கௌரவம்!