சித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள்

(எம். காசிநாதன்)

தமிழகப் ​பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், இந்திய அளவில் பேசப்படும் மரணங்களாக மாறியிருக்கின்றன.