தமிழ் நாடு: கேள்வி எழுப்பி நிற்கும் கொலையும், கொலைக்கான தீர்ப்பும்

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இதனால், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கான ஆதாரங்களாக காணொளிச் காட்சிகளும், ஒலி நாடாச் சாட்சிகளும் ஏன் கௌசல்யாவின் க(h)ண் சாட்சியும் வலுவாக இருந்தன.

வழக்கை விசாரித்து 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு வழங்கினார். அதில் முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி மேலும் இக்கொலையில் ஈடுபட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். இத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர் குற்றம் சாட்டப்டபட்ட பிரிவினர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, அவர் மனைவி ஆகியோரை விடுதலை செய்தும் மீதமுள்ள ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தனர்.

தான் விரும்பியவனை… கரம் பிடித்தவனை கலப்புத் திருமணம் செய்தேன் என்பதற்காக ஆணவக் கொலையை தன்னை பெற்றெடுத்தவர்களே செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த போது இதனை தடுத்து நிறுத்த முயன்று அரிவாள் வெட்டு வாங்கியும் அவனைக் காப்பாற்ற முடியாத போது என் காதலா அல்லது எம் காதலா இந்த கொலையை என்னை பெற்றெடுத்தவர் வடிவில் உருவெடுக்க வைத்திருக்கின்றது என் கௌசல்யாவின் உளவியலும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

முற்று முழுதாக முதற் தீர்ப்பிற்கு எதிர் மறையாக அமைந்த இந்த தீர்ப்பு இந்திய நீதித்துறையை கேள்விக்குறியாக்கி நிற்கின்றது. தமிழ் நாட்டு அரசின் செயற்பாட்டின் மீதான அறத்திற்கு எதிரான நேர்மையற்ற தன்மையை வலியுறுத்தி நிற்கின்றது.
மற்றையது பொலிஸ் காவலில் கொலை செய்யப்பட்ட தகப்பன் மகன் கொலையில் எந்த தகப்பனுக்கும் மனனுக்கும் நடைபெறக்கூடாத விடயங்கள் அரங்கேறி இருக்கின்றன.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மொபைல் கடை நடத்தி வந்தார். கடந்த 20 ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் ஜெயராஜ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். இதனை அறிந்து காவல் நிலையத்திற்கு பென்னிக்ஸ் சென்றுள்ளார்.

காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் நிலையில் பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ் இற்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸ் ஐ பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும், அவரது ஆசன வாசல் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவது மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் பென்னிக் ஸை சந்தித்த அவரது நண்பர்களிடம் போலீசார் தாக்கியதில் தனது ஆசன வாயில் இருந்து இரத்தம் வந்து கொண்டே உள்ளது என பென்னிக்ஸ் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சிறையில் அவருக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயராஜ் உம் இறந்துள்ளார்.

தனது வயதான தந்தை தன் முன்னிலையிலேயே அடித்து நொருக்கப்படும் போது காப்பாற்ற வழியற்று நின்ற ஒரு மகனின் உணர்வலைகளும், கூனிக் குறுகல்களும், தன் தோளில், மார்பில் போட்டு வளர்த்த தனையனை அடித்து உதைத்த போது எத்தனை வயதாகினும் உயிரைக் கொடுத்தாகினும் காப்பாற்றத் துடித்து முடியாமல் போன தகப்பனின் கையறுநிலையும் என்ற மன உழைச்சல் நிறைந்து அவமானகரமான நிலைகளும் இங்கு முக்கிய கவனத்தில் இடம்பிடிக்கின்றன.

இந்த சூழ்நிலையை சற்று ஆழமாக பார்த்தால் இதில் உள்ள உளவியல் அவமானங்கள் எந்த அளவில் தந்தை தன் இரத்தத்தை காப்பாற்ற முடியாமல் துடித்திருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மேற்கூறி கொலைகளும் மரணங்களும் நீதி மன்றத் தீர்புகளும் மேன்முறையீட்டுத் தீர்புகளும் 1968 ல் 44 கூலித் தொழிலாளர்களை ஒரு குடிசையிற்குள் அடைத்து தீயிட்டு கொழுத்தி கொலை செய்த நிலச்சுவாந்தாரின் கீழ் வெண்மணி படுகொலையும் அதற்காக தீர்ப்பும், மேல் முறையீட்டுத் தீர்ப்பும் என் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றன.

கூடவே 1999 இல் மாஞ்சோலை தெயிலைத் தோட்டத்தில் நடைபெற்ற 17 பேரின் கொலையும் தீர்பும் நினைவிற்கு வந்து செல்கின்றன.
முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட தீர்பிற்பு முற்று முழுதாக எதிர் மறையான தீர்ப்பு மேன் முறையீட்டில் வழங்கப்பட்டிருப்பது தமிழகத்தின் நீதித்துறை மீதும் ஆளும் அரசு மீதான நம்பிக்கையினங்களையும் சமான்ய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. பொலிஸ் நிலையக் கொலை பற்றி தமிழ்நாடு அரசுதரப்பு முதல்வரின் கருத்துக் கூறல் நம்பிக்யீனங்களை ஏற்படுத்தி நிற்கின்றன.

இன்று சங்கர் கொலையின் மேன் முறையீட்டுத் தீர்ப்பைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத ஊடகத்துறையும், எழுத்தாளர் சமூகமும், பொலிஸ் காவலில் தகப்பனும் மகனுமாக கொலை செய்யப்பட்ட விடயங்களை உலக அரங்கிற்கு கொண்டு வருவதில் ஊடகங்களும், மனித உரிமை செயற்பாடளர்களும் போதுமான அளவிற்கு செயற்படவல்லை என்ற ஆதங்கம் என்னிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இத்த நீதிமன்றத் தீர்ப்பும், பொலிஸ் நிலையக் கொலையும் எந்த வகையிலும் அமெரிக்க ஜோர்ஜ் புளொட் கொலையிற்கு குறைந்தது அல்ல. ஆனால் இவை அந்த அளவிற்கு ஊடகங்களின் கவனத்தை பெற்று உலக அளவிலான போராட்டங்களாக பரிணமித்து இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில்.

அமெரிக்கா வல்லரசாகவும்..? இந்திய மூன்றாம் உலக நாடாக இருப்பதுதான் இதற்கு காரணமா…? அல்லது உயிர்களின் மதிப்பு உலகின் அதிக சனத்தொகையுள்ள இந்தியா போன்ற நாடுகளில் மலிந்துவிட்டனவா…..? ஊடகங்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் உப கண்டத்தை தாண்டி ஒரு விடயத்தை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனவா…? அல்லது தவிர்கின்றனவா….? என்ற கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.