பருவம் அடைந்த பெண்ணை, பச்சைக் கிடுகில் வேய்ந்த கொட்டிலுக்குள் சில நாட்களுக்கு (வெளியே விடாது) தனியே வைப்பர். அதன்பின்னர் அதற்கான சடங்குகள் நிகழும். அதனை “சாமர்த்தியச் சடங்கு” என்பர்.
அத்துடன், அவ்வீட்டை “சாமர்த்தியச் சடங்கு வீடு” என்றும், சுருக்கமாகச் “சடங்கு வீடு” என்பதும் உண்டு. சிலவிடங்களில் “துடக்கு வீடு” என்றும் கூறுவர். துடக்குக் கழித்தல் என்னும் நிகழ்வுகளும் நிகழும். அத்துடன் நீராட்டு விழா நடைபெறும். அதனையே “பூப்புனித நீராட்டு விழா” என்பர்.
இத்தொன்மரபு, தமிழில் இருந்து கிளைத்த மொழியினரான, தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடமும் காணலாம்.
இவர்களைத் தவிர, இன்னொரு இனத்தினரிடமும் உள்ளது. ஆம், அது சிங்களவரிடம்.
இத்தொன்மரபு, தென்னிந்தியர்களைத் தவிர சிங்களவரிடம் மட்டுமே இன்றளவும் காணப்படும் பண்பாடாகும். இது உலகில் வேறு எந்த இனத்திலும் இல்லாததாகும்.
ஈழத்தில் “கிடுகு” என்றால் வேய்ந்த ஓலையைக் குறிக்கும். “கொட்டில்” என்றால் குடிசையைக் குறிக்கும். எனவே சிங்களவர் இந்த நிகழ்வை “கொட்டல் கே” என்பர்.
“கே” என்பது “வீடு” என்பதைக் குறிக்கும் சிங்களச் சொல். “கொட்டல்” என்பது “கொட்டில்” என்பதன் சிங்களத் திரிபு வழக்கு.
பவுத்தம் இலங்கையில் அறிமுகமானதன் பின்னர், தமிழுடன் பாளி மொழியைக் கலந்து சிங்களம் என்னும் மொழியை உருவாக்கிக்கொண்டு, சிங்களவர் என்னும் ஒரு தனித் தேசிய இனமாக மாறியிருக்கும் அவர்களிடம் இன்றும் தமிழின் தொன்மரபு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
பவுத்தப் போதனைகளாலும், சிங்களப் பேரினவாத அரசியல் சிந்தனையாலும், பெரும்பான்மை சிங்களவர் தம்மை ஆரியர் எனக் கூறிக்கொண்டாலும் (எல்லோரும் அல்லர்), அவர்களின் ஒவ்வொரு வாழ்வியல் கூறுகளிலும் தமிழருடனான பண்பாட்டுக் கூறுகளைக் காணலாம்.
இவற்றையெல்லாம் நன்கறிந்த இயக்கம், பவுத்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்ததே தவிர, சிங்களவரை ஒரு போதும் எதிரிகளாகப் பார்க்கவில்லை, என்பதையும் பதிவுசெய்கிறேன்.
இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய பாலசிங்கம் நடேசனின் மனைவியாரும் ஒரு சிங்களப் பெண் ஆவார்.
படம்: சிங்களவரின் “கொட்டல் கே” என்னும் “கொட்டில் வீட்டில்” நடக்கும் பூப்புனித நீராட்டு விழா.
பார்க்க: https://tinyurl.com/a7j5cyjx
ச. தங்கவடிவேல், பிரான்சு
31-05-2026