வாலாஜா பள்ளிவாசலும் சிந்தி இந்துக்களும்: நல்லிணக்கத்தின் தமிழ்நாட்டு மாதிரி!

1795-ம் ஆண்டு முகலாய ஆட்சியின்போது, ஆற்காடு நவாப் முகம்மது அலி கான் வாலாஜா குடும்பத்தால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இது. தமிழகத்தின் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்று. தவிர, மதநல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாக விளங்கும் பள்ளிவாசல் என்ற பெயரும் அதற்கு உண்டு. ஆற்காடு நவாப் நிர்வாகத்தின்கீழ் வரும் இப்பள்ளிவாசலில் நிர்வாகப் பொறுப்புகளில் இந்துக்களும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

திருவல்லிக்கேணியின் நெரிசல் மிகுந்த சாலையில் நடந்து பள்ளிவாசல் நுழைவாயிலுக்குள் நுழைந்தோம். ஆயிரக்கணக்கானோர் குழுமும் பெரிய திடல்போல் இருந்தது அதன் வளாகம். ஆங்காங்கே புறாக்கள் சிறகடித்துக்கொண்டிருந்தன. நுழைவாயிலிலிருந்து சற்றுத் தொலைவில் தரைத்தளத்தில் மேடைபோல் அமைக்கப்பட்டு, அதற்கு மேல் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது.

படியேறி மேலே சென்றோம். முகப்பிலே பிளாஸ்டிக் வாளிகளில் சைவ பிரியாணி, வடை, பேரிச்சம்பழம், வாழைப்பழம், பிஸ்கட் பாக்கெட், ரோஸ் மில்க் எனப் பல வகை உணவுகள் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி ஏழு, எட்டு நபர்கள் நின்று அந்த உணவு வகைகளை ஒவ்வொன்றாகக் கைமாற்றிவிட்டுக்கொண்டிருந்தனர். பள்ளிவாசலின் முன்பகுதியில் வரிசையாகப் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. நோன்புதிறக்க வரும் மக்கள் அதில் அமர்ந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் முன்னால் கொட்டராவில் நோன்புக் கஞ்சி வைக்கப்பட்டிருக்க, வாளிகளிலிருந்து ஏனையவை பரிமாறப்பட்டன.

பரிமாறுபவர்களைக் கவனித்தேன். 22 வயது இளைஞர் முதல் 70 வயதுப் பெரியவர் வரையில் பரிமாறும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எல்லாரும் தலையில் தொப்பி அணிந்திருந்தனர். சிலரது கையில் பச்சைகுத்தப்பட்டிருந்தது. பள்ளிவாசலின் வலதுபுறப் பகுதியில் பெண்கள் நோன்புதிறக்க வரிசையாக உட்கார்ந்திருந்தனர்.

அவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்த பெண்கள் எவரும் தலையில் முக்காடிட்டிருக்கவில்லை. சற்றுக் குழப்பமாக இருந்தது. ஏனென்றால், முஸ்லிம்கள் பச்சை குத்துவதில்லை. அவர்கள் இந்துக்கள் என்றால், ஏன் முஸ்லிம்கள் அணியும் தொப்பி அணிந்து இங்கு பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்? அதேபோல், முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலினுள் கட்டாயம் முக்காடு அணிந்திருப்பார்கள். ஆனால், பரிமாறும் பெண்கள் எவரும் முக்காடு அணியவில்லை. எனில், யார் இவர்கள்?

அழைத்துச்சென்ற நண்பர் சொன்னார், “என்ன பார்க்கிறீர்கள் தோழர்? அவர்கள் முஸ்லிம்கள் இல்லை. சிந்தி இன இந்துக்கள். ஒவ்வொரு ஆண்டும் நோன்பு மாதத்தில், இங்கு நோன்பு திறப்பவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து, அவர்களே வந்து பரிமாறுவார்கள்.”

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்கள் சிலர், நோன்புக் காலத்தில் பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்குவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இங்கு நடந்துகொண்டிருக்கும் காட்சி அத்தகையது அல்ல. ஏனென்றால், அந்தச் சிந்தி இன இந்துக்கள் நோன்பாளிகளுக்கு உணவளிக்க விரும்பினால், பள்ளிவாசலுக்கு நிதி அளித்திருக்கலாம். ஆனால், அவர்கள் தாங்களே உணவைத் தயார்செய்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் வந்து பரிமாறுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000 பேர் இப்பள்ளிவாசலுக்கு நோன்புதிறக்க வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் 7 அல்லது 8 உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சராசரியாக அவற்றின் மதிப்பு 35 ரூபாய் இருக்கும். எனில், ஒரு நாளைக்கு 35,000 ரூபாய். அப்படியென்றால், முப்பது நாளைக்குக் கிட்டத்தட்ட10 லட்சம் ரூபாய். இதில் பணம் அல்ல விஷயம். அவர்கள் பரிமாறும் முறைதான் இதில் கவனிக்கத்தக்கது.