விஸ்வநாதன், விருதுவேண்டும்

அந்தப் படம் வெள்ளி விழா வெற்றி கண்டது.  அதாவது  25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலை சம்பாதித்தது.

நானும் இந்த அவுஸ்திரேலியா கண்டத்தில்  25 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றேன். இங்கே அடிக்கடி நடக்கும் விருது விழாக்களை பார்க்கின்றபோது,  எனக்குத் தரப்பட்ட விருதுகளையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

அவ்வாறு நினைத்த போதுதான் பல வருடங்களுக்கு முன்னர் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த அந்தப் பாடல் நினைவுக்கு வந்து ,இந்த விருது மகாத்மியத்திற்கு இந்தத் தலைப்பினை வைத்தேன்.

இது ஒரு கொரோனாக்காலம்.  இரண்டு வருடங்களாக இன்னமும் தொடருகிறது. தடுப்பூசி போட்டாலும் நோய் வரலாம் என்ற பயமுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எனக்கு சில கவலைகள் உண்டு. அதில் முக்கியமானது இது வரையில் எனக்கு எவரும் பொன்னாடை மட்டுமல்ல,  வெள்ளைப் பருத்தி துவாய் கூட போர்த்தவில்லை.

கல்முனை இஸ்லாமிய எழுத்தாளர்கள் மொழி விருதென ஒன்று நமக்குத் தந்தார்கள். அதே போன்று விக்டோரியா மாநிலத்தில் துணைத் தூதுவராக முன்பிருந்த பந்துதிசாநாயக்கா நான் தமிழ் மொழிக்கு உழைப்பதாக எனக்கு ஒரு கேடயம் தந்தார்.     தமிழர்களிடமிருந்து எதுவும் பெறாது இறந்து விடுவேனா என்ற பயம் தொண்டை மூலமாக இறங்கி நெஞ்சில் முட்டுகிறது. அதிலும் வசந்த காலத்தில் எனக்கு ஆஸ்த்மா வருவது வழக்கம்.  இப்பொழுது இந்தப் பயமும் சேர்ந்து கொண்டது.

இதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய் ? பன்னாடைகளும் பொன்னாடைகளும் சமமானது. அதே போல் விருதுகளும் அரைக் காசுக்குப் பிரயோசனமில்லையே. பழைய இரும்பு வாங்குகிறவனும் எடுக்கமாட்டான் என நீங்கள் முணு முணுக்கலாம். அது காற்றில் வந்து எனக்குக் கேட்கிறது.

கடந்த மூன்று வருடங்களில் நான்கு வீடுகள் மாறிய போது என் மனைவி சியாமளா,  மகன் பெற்ற விளையாட்டு விருதுகளை அடுக்கியபோது,  இரண்டு பெட்டிகள் நிரம்பின. அவனுக்குச் சிறு வயதிலே டென்னிஸ்-  கிரிகெட் –  கால்பந்து மற்றும் வலைப்பந்து என நாங்கள் பணம் கொடுத்து பயிற்சிக்கு அனுப்பினோம்.  எனது தந்தை யாழ்ப்பாணத்தில் எதுவும் செய்யாதது மட்டுமல்ல,  ஒரு நாள் நான் விளையாடிக் கொண்டிருந்த போது எனது கிரிக்கட் மட்டையைக் கொத்தியும் பந்தை வெட்டியும் எறிந்து விட்டு,  ஒழுங்காய் படி எனப் பல வார்த்தைகளில் என்னைத் திட்டியதை மனைவிக்குச் சொல்ல முடியாது. ஒரு டெண்டுல்காரை அல்லது சங்ககாரவை முளையிலேயே கிள்ளித் தூரே எறிந்துவிட்டார்.

எனக்குக் கிடைத்த அந்த இரண்டு விருதுகளுடன் எனது மகளுக்கும் ஏதோ ஒரு விருது வீட்டில்இருந்தது. எனது மனைவி சியாமளா,  என்னைப் பார்த்து,    “உங்களைப் போலத்தான் உங்கள்மகள்” எனப் பார்த்த பார்வை எனது நெஞ்சில் தீயாகக் கனன்றது.

கனலைத் தணலாக்கத்தான் இந்த அலசல்.

யாழ். இந்துக்கல்லூரியில் ஒவ்வொரு முறையும் 12  ஆம் தரத்தில் படித்த காலத்தில் அங்கு பரிசளிப்பு விழா நடந்தது.  பல்கலைக் கழக பிரவேசப் பாடங்களில் அதிகம் புள்ளி எடுத்தவர்களுக்குப் பரிசு டைக்கும். ஆனால்  74 ஆம் ஆண்டு அந்த பரிசளிப்பு விழாவே நடக்கவில்லை.  தாவரவியல், விலங்கியல் பாடங்கள் இரண்டும் டுத்து,  பல்கலைக் கழகம் சென்ற ஒரே மாணவன் நான்.  ஆனால்,    கல்லூரி அதிபரோடு பிரச்சினைப்பட்டதாலோ அல்லது வேறும் பல காரணங்களினாலோ அந்தப் பரிசளிப்பு விழா நடக்கவில்லை

பல்கலைக் கழகத்திலும் சதித்திட்டம் காத்திருந்தது.  இறுதியாண்டில் நான் நன்றாகச் செய்து வந்த பரீட்சை முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் எடுக்கச் சொன்னார்கள்.  காரணம் எனது மூன்றாவது வருடத்தில் ஒரு பாடத்தை நான்கு முறை எடுக்க வேண்டியிருந்தது.  அங்கு டாக்டர் மகாலிங்கம் என்பவர் அங்கு லிங்கமாக இருக்கவில்லை.  நந்தியாகியிருந்தார் !

அதன் பின்பு மெல்பனில் பத்திரிகை நடத்திய காலத்தில் நூற்றுக் கணக்கான அங்கத்தவர்கள் கொண்ட விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச் சங்கம் எனது நண்பர்கள் சிலருக்கு விருதுகொடுத்தார்கள்.  சந்தோசம்.  அவர்களது உழைப்பு விருதுக்குரியது.  மேலும் அக்காலத்தில் இந்த தமிழ்ச்சங்கம், சங்க கால மதுரை தமிழ்ச் சங்கம் போல் இயங்கியது.  ஆனால் மீன் கொடியையல்ல.  சோழனது புலிக் கொடியை பறக்கவிட்டார்கள்.

அக்காலத்தில் செரண்டிப் என்ற சிங்களப் பத்திரிகை எனக்குப் பத்திரிகையாளர் விருது தர அழைத்தபோது,                                  “  எனக்கு விருது தருவதற்கு உங்கள் தரம் என்ன?  “  என மறுத்துவிட்டேன்.  ஆனால்,  அக்காலத்தில் நோர்வேயிலிருந்து அவுஸ்திரேலியா வரையில் பலரும்,   நான் அன்றைய இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் மேஜர் ஜானக பெரேராவின் கையால் விருது வாங்கியதாகத் தகவல் பரப்பினார்கள்.

கடந்த காலம் மறக்க வேண்டியது.

இனிமேலாவது எனக்கு விருது கிடைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா?  எனப் பார்ப்போம். யார் விருது கொடுப்பவர்கள்? எனவும் பிரித்துப் பார்ப்போம்.

கம்பன்கழகம்,  சிட்னியில் மாருதி விருது – சான்றோர் விருது வழங்குபவர்கள்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு சுமந்திரனைக் கம்பன் கழகக்தினர் ஆதரித்தார்கள் என நான் முகநூலில் எழுதியதாக அக்கழகத்திலிருந்த எனது நண்பர்கள் குறைப்பட்டார்கள். அது கம்பவாரதியின் தனிப்பட்ட விடயம்,  கம்பன் கழகமல்ல என்றார்கள்.  இறுதியில் நான் அந்த குறிப்பை நீக்கினாலும்,  அடுத்த தேர்தலில் மீண்டும் கம்பவாரதி சுமந்திரனை ஆதரித்தால் அதைப் பற்றி எழுதுவேன் என நினைப்பார்கள்.  ஆகவே அந்தக் கழகத்திலிருந்தும் எனக்கு விருதுக்கான சாத்தியமில்லை.

விக்ரோரியா இலங்கை தமிழ்ச் சங்கம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி,    ஈழச்சங்கமாகி பின்னர் விக்டோரிய தமிழ்ச் சங்கமென்றதெள்ளாகிவிட்டது.    அவர்கள் தமிழை மறந்து இப்பொழுது கட்டிட வேலைகளிலும் கொத்தனார் வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.  அவர்கள் அந்த நேரத்தில் ஈழம் எனப் பெயர் மாற்றியபோது, அதனை எதிர்த்து பத்திரிகையில் எழுதினேன் என்ற கறள் அவர்களுக்கிருக்கும். தமிழர்களின் உள்ளத்துக் கறள் பத்து வருடங்கள் நிலத்தில் புதைத்தெடுத்த அங்கர் பால்ரின் போன்றது.

டன்டினொங்கில் இயங்கும் விக்ரோரிய கலாச்சாரக் கழகம் முன்பு இன்பத் தமிழ் வானொலி பாலசிங்கம் பிரபாகரனது தமிழ்ச் சேவையைப் பாராட்டி விருது கொடுத்தார்கள். இப்பொழுது அவர் சாதிச் சேவையும் செய்கிறார்.  எமது நண்பர் விக்கிரமசிங்கம் என்ன சொல்கிறார் என்பதைப்பொறுத்தது. அவர் ஓய்வாக இருக்கிறார்.  எனவே அவர்கள் அடங்கியிருக்கிறார்கள்.

மெல்பன் கேசி தமிழ்மன்றத்தினர் மட்டுமே 265  அங்கத்தினர்களுடன் பலவகையான சமூக விடயங்களில் ஈடுபட்டு இயங்குகிறார்கள்.   அவர்கள் விருதுகள் கொடுப்பதில்லை. தங்களைச் சேவை செய்யும் சங்கமாகக் கருதுகிறார்கள்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 70 அங்கத்தவர்களுடன் இயங்குகிறது.  அவர்கள் யாராவது 80 வயதுக்கு மேலே தாங்காது எனும் போது கவுரவிப்பார்கள்.  எனக்கு 80 வயதாவதற்கு இன்னும்  13 வருடங்கள் ஆக வேண்டும்.   அதுவரை எனது உடலும் மூளையும் தாங்குமா?

இந்த நிலையில் தனி ஒருவராக மெல்பன் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் நடேசன் சுந்தரேசன் என்பவரே இந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக நடனம், கலை,  இலக்கியம்,  கல்வி,  வானொலி எனப் பிரபலமாக இயங்குபவர்களுக்கு மெய்நிகர் வழியே விருது வழங்குவதோடு அவரும் பெற்றுக் கொள்கிறார்.

அக் காலத்து பண்ட மாற்றுப் போன்று வாங்குவதும் விற்பதும் அவரது வழக்கம்.  அவர் மெல்பனுடன் நின்றுவிடாது சர்வதேசமட்டத்தில் நியூயோர்க்,  நியூடெல்கி எனப் பல நாடுகளிலிருந்து வாங்கி விருதுகளைக் கொடுக்கிறார். அவரது மெய்நிகர் நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும் சான்றிதழ் பத்திரங்கள் கொடுக்கவுள்ளார். 

எதிர் காலத்தில் அவரது நிகழ்வுகளுக்குப் பண உதவி கொடுப்பவர்களுக்கும் விருது கொடுப்பதற்கு அவரிடம் திட்டமிருக்கலாம், யார் கண்டது ? நூறு டொலருக்கு 500 பிக்சலிலும் (Pixel)  இரு நூறு டொலருக்கு ஆயிரம் பிக்சலிலும் பிரிண்ட் போட்டு கொடுக்கலாம். 

கணினி மூலமாக இந்த விருதுகள் காட்டப்படுகிறது. இதைத்தான் ஈவிருதுகள் (E Awards)  எனலாம்.  ஒரு விதத்தில் இது ஒரு அக்டோபர் புரட்சிக்கு ஒப்பானவிடயமே.  தற்பொழுது பிற்கொயின் (Bitcoin)) எனப் பணம் வருகிறதே!  அதேமாதிரி.

அவர் என்னிடம் உதவிகேட்ட போது   “நீங்கள் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை”   எனப் பதில் எழுதி விட்டேன்.

கடைசியாக இருப்பவர் ஒரே ஒருவர்.  அவர்தான் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர் ஒரு தடவை நான் சென்ற ஒரு நிகழ்வில் தனது பெயரில் விருது செய்து இந்தியாவிலிருந்து வந்த பேராசிரியர் ஒருவருக்குக் கழுத்தில் சுருக்கு கயிறு போல் போட்டதுடன் தமிழ்ப்பணி செம்மல் என்ற ஒரு பட்டத்தையும் கொடுத்து அரைமணி நேரம் பேசினார்.  அவருக்கென ஒரு சங்கமில்லாதபோதும் அவர் அன்று பேசிய விதத்தில் ஆயிரம் சங்கங்களை ஒன்றாக்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அடுத்து அவரை அணுகுவதற்கு நினைத்திருக்கிறேன்.

எனக்கு வேறு ஏதாவது ஆலோசனை சொல்லமுடியுமா?