பின்னென்ன உயர்குல வேளாளன்!

எலும்பை ஊடறுத்து  

தீண்டும்  

ஊசிக்குளிர்  

வாழ்வின் மிடறறுத்து  

உயிரைத் உயிரை துரத்தி  

உறிஞ்சிக்குடிக்கும் வெஞ்சினம்  

கொடுமைகளில் சிதைந்தது சுற்றும்  

ஆன்மாவும் விறைக்கும்  

கூதல் வெளியில்  

தடுமாறிச் சுவாசிக்கும்  

தட்டுக் கெட்டு மிஞ்சிய சுற்றம்  

புல்லும் பூண்டும்  

செடியும் கொடியும் பூவும்  

நீயும் நானும் நம் மொழியும்  

பிரளயத்தில் இல்லாது போய்விட்ட  

மறுபொழுதின் அகால வேளையிலும்  

உயிர் வாழ்வான்  

‘உயர்குல’ வேளாளன்  

யார் இந்த  

‘உயர்குல வேளாளன்’?  

வலி பொங்கும்  

நெடும் பொழுதுகளில்  

நீர்ப்பை உடைந்து கசிய  

பொசுங்கிப் பெருகும்  

குருதிப் பெருக்கில்  

பிறப்பைத் தவிர்த்து  

பன்னீரும் பாலும்  

பாய்ந்தோடும் யோனி வழியாகவா  

பிறப்பெய்தினான் – இந்த  

‘உயர்குல வேளாளன்’  

குப்பி விளக்கின் உச்சிப் புகை நிழல்,  

சுவரில் நெளிந்து ஊர  

மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் – அந்த  

மந்தகாச இரவுகளில்  

அம்மையப்பன்  

கூடிக் கொண்டாடும்  

கலவி தவிர்த்து  

மாங்கனி உண்ணும்  

மந்திரத்தில் பிறந்தவனா – இந்த  

‘உயர்குல வேளாளன்’ ?  

பள்ளரைப் போலும்  

பறையரைப் போலும்  

நாயைப் போலும்  

அழுக்குண்ணும் புழுக்களைப் போலும்  

முடிவெட்டும் என்னைப் போலும்  

அழுக்ககற்றும் உன்னைப் போலும்  

வெள்ளைப் பச்சை அரிசியில்  

அவித்து உருட்டிய கட்டிக்காய்  

உன்னதும் என்னதும் அல்லாத மொழியிலும்  

முணுமுணுத்து மணியடிக்கும்  

பிராமணரைப் போலும்  

பிறப்படைந்தவன் தானே- இந்த  

‘உயர்குல வேளாளன்’  

பின்னென்ன ‘உயர்குல வேளாளன்’  

களத்து மேட்டில்  

கசிந்து வியர்வை  

காய்ந்துபோக நான் விசிறி தந்தேன்  

உழுத புஜத்தில்  

வலி எழும் வேளையெல்லாம்  

நீ களைப்பாற நான்  

பதநீர் தந்தேன்  

பதிலுக்கு நீ நெல்மணி தந்தாய்  

எப்படி இடையில்  

உயர்குல குலம் நீ ஆனாய்  

எளிய சாதி நானானேன்?  

ஒளி துப்பும் சூரியனும்  

அடிவானில் விடிவெள்ளியும்  

உதிக்காத இருண்ட காலங்களில்  

மனுஸ்மிருதி சாஸ்திரம் – என்னை  

மூத்திரம் கூட பெய்ய அனுமதித்ததில்லை  

புறம் தள்ளி வாழ்தலும்  

அடிமைகளுக்கு நீ  

அரசனாவதும்  

அடுப்படியிலும் படுக்கையிலும் மட்டுமே  

உம் பெண்டிரை அனுமதிப்பதையும்  

எப்படி நீ மனுநீதி என்றாய்?  

என் குடிசைக் கூரைக்கு  

கோரைப் புல்லும்  

உன் வீட்டுக் கூரைக்கு  

ஓலைக் கிடுகும் கட்டாயம் என்று  

யார் இட்டது கட்டளை?  

என் வீட்டுப் பெண்டிரை  

மாராப்பு அணிய நீ  

அன்றெல்லாம் அனுமதித்ததில்லை  

இன்றும் உம் பெண்டிர்  

படுக்கையின் சாளரம் தாண்டி  

அப்பால் வீசும் தென்றல் சுகத்தை  

சுவாசிக்க நீ விருமபுவதில்லைத் தானே ?  

பெண்பிள்ளை சிரிப்பையும்  

புகையிலை பருவத்தையும்  

ஒப்பிட்டு பாழும் மொழி சொன்னது  

இந்த உயர்குலம் தானே  

உன் மொழியில்  

வக்கிர புத்திக்கு  

உயர்குலம் என்று பொருள்  

நீ அறிந்ததுண்டா….  

எங்கள் குடிசைத் தொகுதிக்குள் தான்  

காதல் கல்யாணம்  

முதன் முதலில் அனுமதிக்கப் பட்டது.  

போன வாரப் பத்திரிகையில் கூட நீ  

சிவந்த நிற (?)  

இந்துமத (?)  

அழகான (?)  

குடும்பப்பாங்கான (?)  

உயர்குல வெள்ளாளிச்சி தேடிக்கொண்டிருக்கிறாய்.  

     நூற்றாண்டுகள் பின்தங்கிய உன்  

     வக்கிர ஆசைக்குத்  

தடுமாறும் பத்திரிகைத் தர்மம்  

                              எண்ணம் முழுவதும்  

                                         இருள் நிறைய  

                                 பகலின் திசையில்  

                        பெயர் மட்டும் போதுமா ?  

        நாகரிகம் அடைய வேண்டாமா?  

அடுத்த நூற்றாண்டின் பெரும் சுவரை  

முட்டி மோதி  

இடித்துக் தகர்த்து விட்டு  

நிமிர்ந்து நிற்கிறது எங்கள் உலகம்  

ஆறுமுக நாவலரின்  

ஐம்பாவச் சட்டத்துக்குள்  

அடைபட்டுக் கிடக்கிறது  

உங்கள் உலகம்  

நஞ்சு கக்கும் கொடியவர்க்கும்  

சூது விதைக்கும் பாதகர்க்கும்  

எங்கள் மொழியில்  

நாவலர் என்று பெயர் இல்லை  

திண்ணப் பள்ளியில்  

மண்கூட்டிய வாகைமர நிழல் மணலில்  

ஒதுங்கி ஓரமாய் நான்  

‘அ’ கூட எழுத நீ அனுமதித்ததில்லை  

பனையேறும் பள்ளனுக்கு  

பாராளுமன்றம் எதற்கென்று அன்று  

சந்தத்துடன் சத்தமிட நீ  

நாவலரிடம் தானே கற்றுக் கொண்டாய்  

சாதி தாழ்ந்தவனுடன் சமபந்தி போஜனம்  

பாவச் செயல் என்பதையும்  

உருத்திராட்சைக் கொட்டை சுற்றிய  

மண்டைக்குள் இருந்துதானே நீ  

பரிமாறிக் கொண்டாய்  

பழங்கதையெல்லாம்  

இபபோதெதற்கு என்கிறாய்  

புதுக்கதையும் நாறித்தானே கிடக்கிறது  

கிடுகு வேலி பிய்த்து  

எங்கள் பெண்கள் வெளிவந்து  

ஆணுக்கு நிகராய்  

நிமிர்ந்து நிற்க ஆரம்பித்து  

நூற்றாண்டு ஆயிற்று….  

ஆனாலும்…  

உச்சாணி மாடியின் விளிம்பில் நின்று  

தரை நோக்கிப் பாய்ந்து  

உடலும் ஆன்மாவும்  

சிதறிச் சாவது என் வீட்டுப் பெண்களல்ல….  

ஆயிரம் பேரைச் சுமந்து  

கனகதியில் பாயும்  

தொடர் வண்டி முன் பாய்ந்து  

உடலும் ஆன்மாவும்  

சிதறிச் சாவது என் வீட்டுப்பெண்களல்ல  

அப்புறப் படுத்திக் கொள்  

உன் வீட்டுக்குப்பைகளையும்  

ஆறாயிரம் ஆண்டுகால வழக்குகளையும்  

நீ உயர்குல வேளாளன் என்பதுவும்  

உனையண்டி உன் ஊரில்  

ஆயிரம் தாழ்சாதி உள்ளன என்பதுவும்  

பெண் உன் சொல்  

மீறாள் என்பதுவும்  

நீல நிறக் கண்களும்  

வெண் சருமமும் கொண்டவர்களுக்கு  

தெரிந்தாலும் கலையில்லை  

உன்னில் வீசும் மணம்  

அவன் மூக்கை அரிக்கும்  

விதி வலியது வேளாளனே  

சிணி மணம்  

உன் மூளையின்  

ஞாபக செல்களை சுரண்டுகிறது அல்லவா….  

எம் துன்பியல் கவிதையின் இருதயம்  

தினம் தினம் கண்ணீருடன்  

எவர்க்காக உருகிச் சாகிறதோ  

அவர்கள் உனக்காகவும்  

வெடித்துக் கொள்வதுதான்  

இன்னும் என் பெரிய சோகம்.  

சக்கரவர்த்தி.