உண்மையில் அண்மையில் நடைபெற்று முடிந்த எதிர்கட்சிகளின் இலங்கையின் ஆளும் அரசிற்கு எதிரான போராட்டதை இவர்கள்தான்…. இவர்தான்… தலமை ஏற்றிருக்க வேண்டும்.
அந்த போராட்டம் நடைபெற்ற சில தினங்களில் கனடாவின் ரொரன்ரோவில் நடைபெற்ற இவர்களின் நிகழ்வு ஒன்றிற்கு போய் இருந்தேன் நவம்பர் 23, 2025.
‘மாற்றத்தின் குரல்கள்’ என்ற தலைப்பில் சம உரிமை இயக்கம்(Movement For Equal Rights)(கனடா) நடாத்திய நிகழ்வு ஒன்றிற்கு
இலங்கையில் மக்கள் போராட்ட முன்னணி(PSF)யின் சம கால செயற்பாடுகளை வெளிப்படுத்தும் அரசியல் கலை இலக்கிய நிகழ்வாக இதனை அவர்கள் கட்டமைப்பு செய்திருந்தார்கள்.
‘அரகலய(போராட்டம்)’ போராட்டத்தின் போது அதன் பின்னரான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பனவற்றில் இவர்களின் அரசியல் நிலைப்பாடு, பங்களிப்பு, அது பற்றி உரையாடல்கள் நம்பிக்கை தருபவனாக இருந்தன.
அவர்களின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று கனடாவில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு அவர்கள் வழங்கிய வாய்ப்புகளை பயன்படுத்தி சிறு குறிப்புரை வழங்கினேன்…. சில கேள்விகளை உள்ளடக்கி.
ஆனால் தேர்தல் அரசியலில் இவர்கள் வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை பெறவில்லை.
இவர்களின் கருத்துகள் முன்னிலை பெற்ற அளவிற்கு முன்னிலை சோசலிச கட்சி அவர்களின் ஐக்கிய முன்னணியான மக்கள் போராட்ட முன்னணி(PSA) வெகு ஜனங்களிடம் முன்னிலை பெறவில்லை என்பதாக அது உணரப்பட்டது.
தேர்தல் ஜனநாயகத்தில் வெற்றிகள்தான் ஒருவரை முன்னிலைக்கு கொண்டு வந்து ஆட்சி அதிகார வாய்ப்புகளை வழங்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் புள்ளிகள் இவர்களுக்கு போதியளவு தேர்தலில் கிடைக்கவில்லை.
ஆனாலும் தமது அரசியல் பயணம், கருத்துருவாக்கப் பயணம் தொடரும் என்றான தேர்தல் பற்றிய மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் உரை நிகிழ்த்தியது நம்பிக்கை ஏற்படுத்தியது அப்போது.
அவ்வாறு தான் நேற்று நடைபெற்ற சம உரிமை இயக்கத்தின் கனடா கிளை நடாத்திய நிகழ்விலும் அதன் தலமை உரையை கொழும்பில் இருந்து ஆங்கிலத்தில் ஆற்றிய நுவன் போபகே இன் உரை அமைந்தது.
ஒரு காலத்தில் ஜேவிபில் இருந்து இவர்கள் அவர்களுடனாக கருத்தியல் முரண்பாடுகளினால் 2011 ல் பிரிந்து வந்து உருவானதுதான் முன்னிலை சோசலிச கட்சி.
தொடர்ந்த பல வருடங்களாக இலங்கை அரசியலில் பல போராட்டங்களை மக்கள் மத்தியில் நடாத்தி வருகின்றனர். அவை தொழிற் சங்க நடவடிக்கைகளாகவும் இருந்தன.
யாரிடம் இருந்து கொள்கை முரண்பாடுகளினால் இடதுசாரிக் கருத்தியலை ஆழமாக ஏற்று செயற்படும் இவர்களின் தாய்க் கட்சியின் ஆளுமையில் ஆட்சி இருக்கும் சூழலில் இவர்களின் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதுவும் தற்போதைய அரசின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்திருக்கும் சூழலில் நடைபெற்ற கூட்டம் என்பதினால் அவரின் உரை அதனைச் சுற்றியே அதிகம் இருந்தது.
சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) நிதி பெற்று ஆட்சியைத் தொடரும் தேசிய மக்கள் சக்தி அதற்கேற்பவே ஆட்சியை தொடரச் செய்யும்… செய்கின்றது.
அந்த வகையில் தற்போதைய அரசுக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் செயற்படுத்திய விடயங்களை இவர்களும் தொடர்வதாகவும் சமான்ய மக்களின் வாழ்வியலை அது மேம்படுத்த எந்த செயற்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனப் பார்வையாக அவரின் உரை இருந்தது.
இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை.
தற்போதை ஆட்சியில் இருக்கும் தேசிய மக்க்கள் சக்தி(NPP) அரசின் போதைப் பொருள் ஒழிப்பு, ஊழலை, பாதாள உலகத்தினரை நீதியின் முன் நிறுத்தல் எல்லாவற்றையும் விட மலையக தொழிலாளர்களுக்கு வழங்கிய 400 ரூபாய் சம்பள உயர்வு போன்றவற்றை அவர் பெரிதும் தனது பேச்சிற்குள் உள்ளடக்கவில்லை.
கூடவே இலங்கையின் இராணுவ செலவினங்களை குறைத்தல் என்பதுவும் பேசப்படவில்லை. (இங்கு சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன்)
கல்வியல் பின் தங்கிப் போகின்றோம் என்று குறிப்பிட்ட இவர் கல்வியின் மறு சீரமைப்பு என்றான முன் எடுப்புகளை பொறுத்திருந்த பார்ப்போம் என்றாகவும் தொடவில்லை.
இவற்றை நேரமின்மையால் தவிர்த்திருக்கலாம்….? கேள்வி பதிலுக்கு நேரம் ஒதுக்காமை போல்…?
சோசலிச அரசை நிறுவும் பாதையில் இடதுசாரி பொருளாதாரத்தை அமைப்பதில் தற்போததையை அரசு எந்தப் பார்வையும்… முன்னெடுப்புகளையும்…. ஒரு பொழி நிலத்தை கொத்துவதையும் …. கொண்டிருக்கவில்லை என்றான பார்வைகளை முன்வைத்தார்.
75 வருடங்களுக்கு மேலான இலங்கை ஆட்சியை செய்த அதே அரசு இயத்திரத்தில் பாரிய மாற்றங்கள் செய்யாது அதே அரச இயந்திரத்தின் ஊடு ஒரு வருட ஆட்சிக்குள் எல்லா மாற்றங்களையும் கொண்ட வர முடியாது என்ற புரிதல் முன்னிலை சோசலிச கட்சியிற்கு உண்டு என்பது என் பார்வை.
நேற்றைய கூட்டத்திற்கு முன்பே எனது முக நூல் பதிவு ஒன்றில் ‘நுகேகொட’வில் Nov 21 ல் நின்றிருக்க வேண்டியவர்கள் மக்கள் போராட்ட முன்னணியினரே என்று எழுதி இருந்தேன்.
இந்த கூட்டத்தை முழுமையாக செவிமடுத்த பின்பும் கூறுகின்றேன் அங்கு நின்றிருக்க வேண்டியவர்கள் முன்னிலை சோசலிச கட்சியினர்….. மக்கள் போராட்ட முன்னணியினர்.
ஒரு நாட்டின் சிறந்த ஆட்சியிற்கு ஆளும் கட்சி எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது எதிர் கட்சியாகும்.
இன்றுள்ள யதார்த்த நிலமையில் தேசிய மக்கள் சக்தி மக்களின் வாக்குகளால் ஆளுவதினால் முன்னிலை சோசலிச கட்சிதான் சிறந்த எதிர்கட்சியாக மக்கள் மன்றங்களிலும் முடிந்தளவில் மத்திய, மாகாண, உள்ளுர் ஆட்சி சபைகளிலும் நின்றாக வேண்டும்.
அதுதான் இலங்கை மதச் சார்பற்ற, இனங்களுக்கிடையேயான பாகுபாடற்ற சமத்துவமாக சமூகங்களை பார்க்கு இடதுசாரி அரசை அமைக்க வழிவகுக்கும்.
இதற்காக அவர்கள் இந்த பயணத்தை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள், கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் என்னைப் போன்றவர்களின் பிரசன்னமும் இந்த கூட்டத்தில் இருந்தது என்பதாக உணர்கின்றேன்.
கூடவே சம உரிமை இயக்கம் முற்போக்கு மக்கள் இலக்கியத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் செயற்பாடாக ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு இருந்தார்.
அது ‘அன்பின் வழியது உயிர்நிலை…’ என்ற தலைப்பில்
இந்த புத்தகம் பற்றிய விமர்சனங்களை மக்கள் இலக்கியம் முற்போக்கு இலக்கியம் பற்றி மெலிஞ்ச முத்தனின் கருத்துரையின் பின்பு மூன்று பெண்கள் நிருபா ஆயிலியம், அவ்வை விக்னேஸ்வரன், மைதிலி தயாநிதி நிகழ்த்தி இருந்தார்கள். அவை சிறப்பாக இருந்தன.
இது தொடர வேண்டும் சிறுகதை சம்மந்தமான விமர்சனத்தை அதனை வாசித்த பின்பு முன்வைக்கலாம் என்று உள்ளேன் நான் இலக்கியவாதியாக இல்லாத போதும் வாசகனாக…..
கூட்டத்தின் சிறப்பு கூட்டத்தில் ஆண்களும், பெண்களும் ‘சம அளவில்’ கலந்து கொண்டது.
நேரத்திற்கு ஆரம்பித்து நேரத்திற்கு முடித்த குழப்பம் அற்ற நிகழ்வாக அமைந்தது.
இது கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் இதில் கலந்து கொண்டவர்கள் என்றாக இரு தரப்பினரையும் சாரும்.
இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள்கள் ஒரு ஆரோக்கயமான சமுதாயத்திற்கு தேவை.
மாறாக ரிஸ்வின் டி சில்வா இற்கு வீதியை மறித்து கொடி காட்டி அட்டகாசம் செய்யும் செயற்பாடுகள் அல்ல.