இன்று பட்டுக்கோட்டை நினைவு நாள்

1959, ஆகஸ்ட்.கோவைக்கு திரைப்பட நடிகர் டிகே.பாலசந்திரனின் நாடகக் குழு வந்திருந்தது.வெரைட்டி ஹால் ரோடிலிருந்த எடிஸன் சினிமாத்தியேட்டரில் அவர்களின் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார நாடகம் நடந்து வந்தது.

நடிகர்பாலசந்திரனுடன் நாடகத்துக்குப் பாட்டெழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கோவைக்கு வந்திருப்பதை அறிந்த தோழர் முப – தானும் தோழர் வடிவேலும் பீளமேடு பகுதியில் நிறுவியிருந்த ‘மக்கள் மன்றத்தை’த் திறந்து வைக்க அவரை அழைக்கலாமென்ற ஆர்வத்தோடு மாவட்டச்செயலாளர் தோழர் ரமணியை சந்தித்துக் கேட்கிறார்.

முதலில் தயங்கிய தோழர் ரமணி, “உன் நிகழ்ச்சிக்கு அவர்களை அனுப்பினால் ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.சரி பரவாயில்லை, ஒரு மாணவனாக வந்து இயக்கத்தில் தீவிரமாக செயல்படுகிறாய். அவர்களை அழைத்துப்போ! ஆனால் ஒரு நிபந்தனை! மாலை நாலு மணியிலிருந்து ஆறு மணிவரைதான் அனுமதி. அப்புறம் அவர்களை அனுப்பிவிடவேண்டும்!

“ஆகஸ்ட் 16.பீளமேடு பகுதி அவிநாசி ரோடில் தோழர்கள் காத்திருக்கிறார்கள்.பட்டுக்கோட்டை – டிகே பாலசந்திரனின் கார் வருகிறது. அங்கிருந்து மன்றக் கட்டடத்துக்கு ஒன்று ஒன்றரைக் கிலோமீட்டர் செல்லவேண்டும்.தோழர்கள் ஊர்வலமாக கோஷம் முழங்கியபடி முன்னும்பின்னும் செல்ல – கார் ஒரு தேர் மாதிரி மெதுவாகக் கூட்டத்திடை ஊர்ந்து செல்லுகிறது.

மில்லில் ஷிப்ட் முடிந்து திரளான தோழர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள். தூக்குப் போசியும் தலையெல்லாம் பஞ்சுமாக பெண் தொழிலாளர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்!

இந்தக் காட்சி கவிஞருக்கு நெகிழ்ச்சியை மிகைப்படுத்துகிறது ! “மக்கள் கவிஞர் வாழ்க!” என்று முழக்கத்தை அன்றுதான் கேட்கிறார் பட்டுக்கோட்டை.

தோழர் எஸ்.கண்ணன் அந்த முழக்கத்தை கழுத்து நரம்புகள் புடைக்க முழங்கிக்கொண்டே செல்ல, மொத்தக் கூட்டமும் அதை எதிரொலிக்கிறது.

தோழர் வடிவேலு தலைவர். தோழர் மு.பழநியப்பன் செயலாளர். அந்த ‘மக்கள் மன்றத்தை’ -நடிகர் டிகே.பாலசந்திரன் முன்னிலையில் திறந்து வைக்கிறார் பட்டுக்கோட்டை.நான்குபுறச்சாலைகளிலும் சனம் நிரம்பி வழிந்து – அப்படியே பாதையை வழிமறித்து உட்காருகிறார்கள்.

போடப்பட்டிருந்த மேடையில் முதலில் பேச பட்டுக்கோட்டையை அழைக்கிறார்கள். ஒலிவாங்கி முன் வந்து நின்ற கவிஞருக்கு தொழிலாளர் கூட்டத்தைப் பார்த்ததும் மனம் விம்முகிறது.

“வெள்ளப் பெருக்கைப் போல இங்கே….” என்று உரையைத் தொடங்குகிறார்.எங்கே சொற்பெருக்கு?பேச நா வரவில்லை. குரல் தழுதழுக்கிறது. கண்ணில் நீர் கோக்கிறது. சில வார்த்தைகள்கூட பேச இயலாது அப்படியே உட்கார்ந்துவிடுகிறார் கவிஞர்.

அடுத்து நடிகர் டிகே.பாலசந்திரனும் மன்றத் தோழர்களும் பேசியபிறகு – மீண்டும் பட்டுக்கோட்டையிடம் உரையாடக் கேட்கிறார்கள்.”மிகவும் உணர்வுவயப்பட்ட நிலையில் இருக்கிறேன்! பேசும் நிலையில் நான் இல்லை!தயையுடன் மன்னியுங்கள்!”” என்று மறுத்துவிட்ட கவிஞர், எழுந்து நின்று மக்கள் திரளைப் பார்த்துக் கைகூப்புகிறார்.

சனத்திரள் ஆரவாரிக்கிறது.”இந்நிகழ்வு நடந்தேறிய இரண்டாவது மாதம் – அக்டோபர் எட்டாம் தேதி …

நவ இந்தியா செய்தித் தாளைப் புரட்டிய எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைவு என்று தலைப்புச் செய்தி போட்டிருந்தார்கள்!” நினைவுகூர்கிறார் தோழர் மு.பழநியப்பன்.

(Rathan Chandrasekar)