கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும் – அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 03

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

இலங்கை மீன்பிடிக் கைத்தொழிலும், வளங்களும்:

இந்தியாவிற்கு தென்கிழக்கில் இந்திய உப கண்டத்தில் அமைந்திருக்கும் இலங்கையானது பல கரையோர அம்சங்களைக் கொண்ட 1770 கிலோமீற்றர் கரையோரத்தையும், 200 கடல் மைல் பிரத்தியேக பொருளாதார வலயத்தையும் (Economic Exclusive Zones), 517000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட ஆள்புல உரிமையுள்ள (Soveriegn rights) சமுத்திர பிரதேசத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இலங்கையின் தரைப் பரப்பளவைவிட 8 மடங்கு கடல் பரப்பு அதிகமாகும். இவைகளில் கண்டமேடையும், ஆழ்கடலும் அடங்குகின்றன. இங்கு பதினொரு சதவீதமாக காணப்படும் கண்டமேடைகளில்; 250000 தொன் அடித்தள, இடைத்தள, மேற்தளவாழி மீன்களும், ஆழ்கடல் மீனினங்களும் (இவைகள் இடம்பெயரக்கூடியன) பிடிபடுகின்றன. இருந்தும் மீன்பிடியானது சராசரியாக 25 கிலோமீற்றருக்குள்ளும், ஆகக்கூடியது 40 கிலோமீற்றருக்குள்ளும், மொத்தமாக 25000 தொடக்கம் 30000 சதுர கிலோமீற்றருக்குள்ளேயே நடைபெறுகின்றது.