கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும் – அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 04

நீருயிரின வளர்ப்பை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலாம். இனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு இன வளரப்பு (Monoculture) (ஒரே ஒரு தாவர அல்லது விலங்கு இனம் வளர்க்கப்படுவது), பல்லின வளர்ப்பு (Polyculture) (ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வளர்க்கப்படுவது) என்றும் பாகுபடுத்தலாம்.

நீரின அமைவிடங்களின் அடிப்படையில், நன்னீர் வளர்ப்பு (Freshwater culture) (0.01 ppt உவர்த்தன்மைக்கு கீழே உள்ள நீர்), உவர் நீர் வளர்ப்பு (Brackishwater culture), (0.01 ppt க்கும் கடல் நீர் உவர்த்தன்மைக்கும் இடைப்பட்டது), கடல்நீர் வளரப்பு; (Seawater culture or Marine culture or Mariculture) என்றும் பிரிக்கலாம்.

வைப்பிலிடப்படும் குஞ்சுகளின் எண்ணிக்கை, உட்கட்டமைப்புக்களின் பொறியியல் அமைப்பு, தள அமைப்பு, உள்ளீடுகளின் அளவு, உரப்பாவனை, பூச்சி, நோய் கொல்லிகள் பாவனை, உணவூட்டம், அறுவடைகளின் எண்ணிக்கை, விளைபொருட்களின் தரம், பின் முகாமைத்துவத்தின் அளவு என்பதனைப் பொறுத்து விரிவான (Extensive), அரை-செறிவான (Semi-intensive), செறிவான (Intensive) வளர்ப்பு என வரைவிலக்கணப்படுத்தலாம். மேற்கூறிய பரமானங்கள் (parameters) இடமிருந்து வலமாக அதிகரித்துச் செல்லும்.

ஒரு மீன் இனத்தை மற்றைய தாவர, மீனினங்களுடன் கலந்து வளர்ப்பது ஒருங்கிணைந்த (integrated fish culture) வளர்ப்பு முறை எனப்படும். இது அதிகமான பலாபலன்களை தரக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளரப்பு செய்யப்படும் இனங்கள்:

பொதுவாக மீனினங்கள் உணவுக்காகவும், அலங்கார வளர்ப்புக்காகவும், மீன்களுக்கு இரையாகவும், நீர்நிலைகளில் சிறு குஞ்சுகள் விடப்படுவதற்காகவும் வளர்க்கப்படுகின்றன. நண்டு, இறால், நன்னீர் இறால், சிங்க இறால், மட்டி, கௌவாட்டி, முத்து, கடல்நத்தை, கடல்முள்ளி, கடல்அனிமனி, கடல் அட்டை, நீர்த்தாவரங்கள், கடற்புற்கள், முருகைக்கற்பாறைகள் போன்றவைகளும் வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறான வளர்ப்புக்கள் நிலப் பகுதிகளில் தோண்டிய குளங்களிலும், சீமெந்து அல்லது கொங்கிறீட் தாங்கிகளிலும், பிளாஸ்ரிக் தாங்கிகளிலும், கூடுகள், அடைப்புக்கள், மிதவைகள் போன்றவைகளில் வளர்க்கப்படுகின்றன.

நீரியல் வளர்ப்பை ஆரம்பிக்கும் போது, அதற்குரிய இடம் தெரிவுசெய்யப்பட வேண்டும். அந்தத் தெரிவின் போது, நீர் வரத்து, போக்கு, விநியோகம், மண்ணின், அடித்தளத்தின் தன்மை, இடவுயரம், சாய்வு, உயரம், நீரின் ஆழம் போன்றவை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு விலங்கு அல்லது தாவரமானது நீருயிரின வளரப்பிற்காக தெரிவு செய்யப்படும்போது, அவை உடனடியாக கிடைக்கக்கூடியதாகவும், இயற்கையாக இனம்பெருக்கக் கூடியதாகவும், அடைத்த இடத்திற்குள் வாழக்கூடியதாகவும், வேகமான வளர்ச்சியுடையதாகவும், நோய், ஒட்டுண்ணி தாக்கங்கள் குறைவானதாகவும், நுகர்வோர் விரும்பக்கூடியதாகவும், நீரின் பௌதிக, இரசாயன காரணிகளின் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கக்கூடியதாகவும் காணப்பட வேண்டும். பின்னர் பண்ணை எந்த முறையில் அமைக்கப்படப்படவேண்டும். அப்போது நீர் வரத்து, போக்கு, இடங்களின் உயரம், அடித்தளம் போன்றவை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். பண்ணை விலங்கின் உணவு, நோய், குஞ்சுகளின் வைப்பு, பின் முகாமைத்துவம், அறுவடை முறை, சூழலியல் போன்ற அறிவு மிக முக்கியமானவையாகும்

தொடரும்….