கிருசாந்தி…. பிரேமாவதி…

முதல் பெண் ஐனாதிபதி சந்திரிகா ஆட்சியில் கிருசாந்தி. சந்திரிகாவின் தாயாரும் முதல்பெண் பிரதமருமான சிறிமாவோ ஆட்சியில் பிரேமாவதி.

ஏப்ரல் 5 ஜே.வி.பியினர் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தை இரு தடவைகள் தாக்கிபோது பொலிசார் வெளியேறியதால் ஏப்ரல் 5-10 வரை கதிர்காமம் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இதனால் லெப்ரினன்ற் அல்பிறட் விஜேசூரிய தலைமையிலான படையினர் கதிர்காமம் வந்து உல்லாசப்பயணிகள் விடுதியில் முகாமிட்டிருந்தனர்.

ஏப்ரல் 16 காலை 9 மணி கதிர்காமம் பொலிசார் ஜீப்பில் பிரேமாவதி வீட்டுக்கு சென்று கொண்டையை பிடித்து அவளை இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றிச்சென்றனர். ஏற்கனவே சில சிங்கள யுவதிகளும் இளைஞர்களும் ஜே.வி.பி.தொடர்பு என கைதாகினர்.

1970 கதிர்காமம் சித்திரை புத்தாண்டு நிகழ்வில் பிரேமாவதி “அழகு ராணி” என தெரிவு. அதில் கலந்துகொண்ட சப் இன்ஸ்பெக்டர் உடவத்த அவள் அழகில் மயங்கி காதல் கொண்டு பல தடவைகள் சந்தித்து திருமணத்துக்கு சம்மதத்தை கேட்டபோது அவள் விரும்பவில்லை. அதனால் அவர் அவளை இவ்வாறு பழிவாங்கியதாகவும் கூறப்பட்டது.

பிரேமாவதியை பொலிசார் இராணுவ முகாமில் ஒப்படைத்ததும் லெப்.விஜேசூரிய அவளை ஜே.வி.பியுடன் தொடர்பு என துன்புறுத்தி விசாரணை செய்தபோது அவள் மறுத்தாள். இரவு முழுவதும் பாலியல் துன்புறுத்தல்.

விஜேசூரிய கட்டளைப்படி ஏப்ரல் 17 காலை நிர்வாணமாக கைகளை தலைக்கு மேலே உயர்த்தியவாறு “ஜே.வி.பியின் ஐந்து வகுப்புகளுக்கு சென்றேன்” எனகூறியபடி நடந்தாள்.

புறப்படும் முன்பும் ஆடைகளை அணிய கெஞ்சினாள். நிர்வாணமாக செல்வதை விட தன்னை சுட்டுக்கொல்லுமாறும் விஜேசூரியவிடம் கூறினாள்.

கதிர்காமம் தபாற் கந்தோர் அருகில் லெப்.விஜேசூரிய பிரேமாவதியை சுட்டுவிட்டு முகாம்திரும்பினார்.அவள் உயிர் பிரியாததால் இன்னொரு சிப்பாய் சுட்டுக்கொன்றார்.

உயிர் பிரியும்போது தண்ணீர்! தண்ணீர்! என கெஞ்சினாள். தண்ணீர் கொடுக்கக்கூடாது என விஜேசூரிய உத்தரவிட்டிருந்தார்.உயிர் பிரியு முன்பு தனது காதணிகளை கழற்றி தாயிடம் ஒப்படைக்கும்படி சவக்கிடங்கை மூட வந்தவர்களிடம் கொடுத்தாள்.

இச்சம்பவம் பரபரப்பாகி பிரதமர் சிறிமாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதால் விசாரணைக்கு உத்தரவிட்டு 1971 மே 14 அவளின் அழுகிய நிர்வாணச்சடலம் தோண்டி எடுக்கப்பட்டபோது தாயார் கதறி அழுத காட்சியை மறக்கமுடியாது.

லெப்.அல்பிறட் விஜேசூரிய,சிப்பாய் அமரதாச இரட்நாயக்கா மீது கொலை முயற்சி குற்றம்சுமத்தி சட்ட மா அதிபரால் தாக்கல் செய்த வழக்கு அம்பாந்தோட்டை (Magistrate) நீதிமன்றத்திலும் ( வழக்கு இல.65988) பின்னர் காலி உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் டி.கியூ.எம்.சிறிமானே முன்னிலையில் விசாரணை நடைபெற்று 1973 மே 30 இருவருக்கும் 16 வருட சிறைத்தண்டனை விதித்தார். பலர் சாட்சியம் அளித்தனர்.

மேலிடத்தின் உத்தரவின்படியே தான் சுட்டதாக விஜேசூரிய கூறினார்.ஆனால் அம்பாந்தோட்டை இராணுவ கேணல் நுகவெல “ கைதாகும் இளைஞர் யுவதிகளை சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடம் ஒப்படைக்குமாறே உத்தரவிட்டதாக” கூறினார்.

பிரேமாவதி ஜே.வி.பிக்கு ஆதரவோ,தொடர்போ என கண்டறியப்படவில்லை எனவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ் இக்கொலைக்கு எந்த விசாரணையும் இடம்பெறாது என லெப்.விஜேசூரிய நம்பியிருந்தார்.

லெப்.விஜேசூரிய பிரபல குதிரைப்பந்தய வர்த்தகர் ஒருவரின் மகன்.

இத் தீர்ப்புக்கு எதிரான இருவரின் மேன் முறையீட்டை விசாரணை செய்த மூன்று நீதியரசர்கள் தண்டனையை ஊர்ஜிதம் செய்தனர்.

விஜேசூரிய சிறையில் ஒரு வருடத்தால் இதய நோயினால் மரணமானார்.

இரட்நாயக்கா விடுதலையாகி 1988 தெவிநுவரவில் ஜே.வி.பி.மரண தண்டனை விதித்தது.

12 சகோதரர்களில் மூத்தவளான பிரேமாவதி பௌத்த மத ஆசிரியை. தந்தை இரவு காவலாளி. ஏழைக்குடும்பம்.

பிரேமாவதிக்கும் ஜே.வி.பிக்கும் ஒரு தொடர்புகளும் இல்லை என 1971 கிளர்ச்சி எதிர்ப்பு பணியக பொறுப்பதிகாரியான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி செனிவிரட்னா கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை “ நகிவெரண வெரனி” என்ற பெயரில் சிங்கள திரைப்படம் வெளியானது.

இதில் விஜேசூரியவாக சனத் குணத்திலக்கவும், பிரேமாவதியாக சங்கீத வீரரட்னவும் நடித்தனர்.

Leave a Reply