தமிழ் சினிமாவும் தற்குறிக்கலாச்சாரமும்!

இதற்கு முன்பிருந்தவர் என்ன செய்தார் என்றால், அவர் அருமையாகத் தான் வேலை செய்தார் என்கிறார் அதே நபர்.

பிறகு ஏன் மாற்றிப்போட்டீர்கள் என்றால் என் மகன் அந்தக் கட்சியில இருந்தான், அதனால் போட்டேன் என்கிறார்.

உங்க வேட்பாளர், இன்றைய சட்டமன்ற உறுப்பினர் யார் என்றால் தெரியாது என்கிறார்.

இப்படி ஒரு விளையாட்டுத்தனமாக, அப்பாவித்தனமாக, தொலைநோக்குப் பார்வையில்லாமல் ஏன் வாக்களித்தார்கள், ஏன் தேர்தல் அரசியலை இப்படி அணுகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால், அதற்கு தமிழ் சினிமா ஒரு முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது.

அரசியல்வாதி என்றால் ஊழல் செய்பவன், அதிலும் கருப்பாக இருப்பவன் செய்யும் ஊழல் தான் மிகவும் கொடூரமானது, அவர்களை நம்பாதே, வேட்டி கட்டின அரசியல்வாதி, தூய தமிழில் பேசுகிற அரசியல்வாதி, அவனுக்கு அறிவு கிடையாது, அவனிடம் பண்பு இல்லை, ஒழுக்கங்கெட்டவன், பல பெண்களுடன் சல்லாபம் கொள்பவன், கொலை செய்வான், கொடூரமானவன், கொள்ளை அடிப்பான், தேர்தல் ஆதாயத்திற்காக, பதவிக்காக, எதையும் செய்வான் என்ற பிம்பத்தை உருவாக்கியதில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்குண்டு.

நிறையப் பேர் நிஜவாழ்க்கையில் முதன் முதலாக அரசியல்வாதியைப் பார்த்துவிட்டு, என்ன சார் இவ்வளவு டீசண்டா இருக்காரு? நான் இதை எதிர்பார்க்கவேயில்லை என்பார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு அரசியல்வாதி என்றாலே அலர்ஜியை உருவாக்கிக் கொடுத்தவர்கள் நமது சினிமா இயக்குனர்கள்.

நிஜத்தில் அப்படி இல்லை என்றதும் ஆச்சர்யப்படுகிறார்கள்.சரி, அப்படி என்ன தான் இந்த சினிமாக்காரர்கள் அரசியல்வாதியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதுவும் அறிவுப்பூர்வமாக இருக்காது, எல்லாமே மேம்போக்காக, திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்காக, எதையாவது தடாலடியாக, ஆதாரமில்லாமல், அரைகுறையாக ஆராய்ச்சி செய்து சினிமா என்று எடுத்துவிடுகிறார்கள்.

ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன், முதல்வன், இந்தியன், எந்திரன் ஆகிய திரைப்படங்களில் அரசியல்வாதி ஊழல் மட்டுமே செய்பவனாக, கொள்கை எதுவும் இல்லாதவனாக, அப்பட்டமான சுயநலவாதியாகத் தான் காட்டியிருப்பார்.

அதுவும் ஒரு நாள் முதல்வன் என்ற கதை தான் அதிஅற்புதம். அரசியல் என்பது கூட்டு முயற்சி என்பதையும், அரசியல்வாதிக்கு கொள்கை இருக்கும் என்பதையும், அவர்கள் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு திட்டங்கள் தீட்டுவார்கள் என்பதையும் முற்றிலுமாக மறுதலித்த படம் அது.

அரசியல்வாதி என்பவன் சமூகத்தின் பிரதிநிதி தான், நமக்கு இருக்கும் நிறைகுறைகள் அவனிடம் இருக்கும் என்பதை புறந்தள்ளி, ஒரு நாளில் ஊழலை ஒழிப்பது, நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது சிறுபிள்ளைத்தனமானது தானே!

ஒரு கதாநாயகன் வந்து எல்லாவற்றையும் தீர்த்துவைப்பான் என்று நினைப்பது அப்பாவித்தனத்தின் உச்சம்.

அதே போல, ஏற்கனவே நம்மிடம் சில கனவுகளை நமது தமிழ் சினிமா விதைத்து வைத்திருக்கிறது. ஒரு நாள் முதல்வன் வருவான், அவனுக்கு வாக்களிப்போம் என்று காத்திருந்திருக்கிறோம். அந்த நபர் வந்ததும், வாக்குகளை அழுத்திவிட்டோம்.

தவெக, மக்கள் மத்தியில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி ஒரு தந்திர விளையாட்டு நடத்திவிட்டதாக பல ஆதாரங்கள் வெளிவருகின்றன.

ஆனால் அந்த தந்திரங்களுக்கு நமது வாக்காளர்கள் ஏன் ஈடுகொடுத்தார்கள் என்ற கேள்வியை நாம் கேட்கத்தான் வேண்டும்.

எல்லோரும் எல்லாத் தந்திரங்களுக்கும் ஆட்படுவதில்லை. நமக்குப் பிடித்த போதையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம்.

இத்தாலிய மார்க்சியவாதி ஆண்டோனியா கிராம்சி, வெகுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்த வன்முறை தேவையில்லை, அவர்களிடம் ஒரு ஒத்தக்கருத்தை (consent) உருவாக்கினால் போதும். அவர்களே ஆதிக்கத்தை (hegemony) ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அந்த ஒத்தக்கருத்தை உருவாக்க சிவில் சமூகத்தின் கூறுகளான பள்ளிக்கூடம், ஊடகம், கோயில், தொழிற்சங்கங்களும் பயன்படுத்தப்படும் என்கிறார்.

திராவிட அரசியல்வாதிகளுக்கு எதிரான எதிர்மறையான ஒத்தக் கருத்தை வெகுமக்கள் மத்தியில் உருவாக்குவதில் தமிழ்சினிமா பெரும் பங்காற்றியிருக்கிறது என்பதை வெளிப்படையாக நாம் உணரலாம்.

பல பத்தாண்டுகளாக ஏற்றப்பட்ட விஷம் இப்போது தனது வேலையைக் காட்டியிருக்கிறது.

ஷங்கர் மட்டுமின்றி மணிரத்னம் இயக்கிய இருவர், ஆயுத எழுத்து ஆகிய படங்களும், இயக்குனர் மணிவண்ணனின் பல படங்களும் திராவிட அரசியலின் மீது விமர்சனம் என்ற பெயரில் வெறுப்பை உமிழ்ந்தே வந்திருக்கின்றன.

இயக்குனர் மணிவண்ணனின் திமுக வெறுப்பு பற்றி எழுத்தாளரும் பேச்சாளருமான வே மதிமாறன் நிறையப் பேசியிருக்கிறார். ஆர்வமிருப்போர் அவசியம் பார்க்கவும்.

மதுரையில் 90களில் பிற்பகுதியில் நடத்தப்பட்ட பெரியார் பற்றிய கருத்தரங்கில் பேசிய ஈழத்து மார்க்சிய சிந்தனையாளர் கார்த்துகேசு சிவத்தம்பி, இருவர் படம் பற்றிக் குறிப்பிடும்போது, திராவிடத்தலைவர்கள் இருவரும் பெண்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தனர் என்று மணிரத்னம் படம் எடுத்திருக்கிறார் என்று வருத்தப்பட்டார்.

அதே போல மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் திராவிடக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் (வில்லன் தான்) பாரதிராஜா நடித்தது பற்றி புலிகள் தலைவர் பிரபாகரன் வருத்தப்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இயக்குனர் சேரன் எடுத்த ‘தேசிய கீதம்’ எனும் படத்தில் மாநில முதல்வரை சில புரட்சிகர இளைஞர்கள் கடத்திப் போய் கிராமத்தில் வைத்துப் போராடுவதாக எடுத்திருப்பார்.

அந்தப் படம் வந்த போது, ஜெயலலிதா தான் முதல்வர். ஆனால் ஒரு ஆண் முதல்வரைத் தான் இயக்குனர் வில்லனாகச் சித்தரித்திருப்பார்.

கலைஞர் தான் தமிழ்நாட்டில் பேருந்துகளை தேசியமயமாக்கினார். அதனால் மூலை முடுக்கெல்லாம் நமக்குப் பேருந்து வசதி கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகப் பேருந்துகளைக் கொண்ட போக்குவரத்துத்துறை நமது மாநிலத்திற்குரியது தான்.

கலைஞர் தான் கிராமங்களுக்கு சாலைகள் போட்டார். மின்சார வசதி செய்து கொடுத்தார். நவீன தமிழ்நாட்டை உருவாக்கினார். ஆனால் கலைஞர் போன்ற தோற்றம் கொண்ட ஒரு முதல்வரைத் தான் தேசிய கீதம் படத்தில் இயக்குனரால் வில்லனாகக் காண்பிக்க முடிந்திருக்கிறது. கலைஞரைத்தான் வில்லனாகச் சித்தரிக்கமுடிகிறது இவர்களால்.

ஜெயலலிதாவுக்கு எதிராக ஆணாதிக்க சிந்தனையுடன் மன்னன், மாப்பிள்ளை, படையப்பா போன்ற படங்களை எடுத்து தமது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார் ரஜினிகாந்த்.இப்படிப் பல படங்கள் தமிழ் மக்களுக்கு அரசியல்வாதிகள் பற்றி குறிப்பாக திமுக தலைவர்கள் பற்றி அவதூறுகளை மட்டுமே பரப்பி, மேம்போக்கான அரசியலை அரைகுறையாகக் கற்றுக்கொடுத்ததன் விளைவு, இப்போது தவெக வெற்றி பெற்றிருக்கிறது.

பின்குறிப்பு : நல்ல அரசியல்வாதி என்றால் தமிழ் சினிமாவில் சிவப்புத் துண்டு போட்டவர் தான். அது வி சேகர் எடுத்த குடும்பச் சித்திரங்களாகவோ அல்லது வெற்றி மாறன் இயக்கிய ‘வரலாறு’ படமாகவோ தான் இருக்கும்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பேட்டா பரம்பரை’ எனும் படத்தில் தான் திமுக பற்றியும் கலைஞர் பற்றியும் மாண்போடு சித்தரித்திருப்பார்கள்.

ஆனாலும் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம். இந்த வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது? யார் நிகழ்த்தியது? கள்ள மெளனம் தான் நமக்கு பதில்!

அமுதன் ஆர்.பி.ஆவணப்பட இயக்குனர்சென்னை

Leave a Reply