வரும் நாட்களில் இன்னும் சில எம்எல்ஏக்கள் இணைந்தாலும் அதனையும் அவர்கள் ஆதரிக்கவே செய்வார்கள்.
இந்த நடவடிக்கை தற்போது அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் ஆதரிக்கின்றனர்.
இதையே நாளை திமுகவோ அதிமுகவோ செய்து அது தவெக விற்கு பாதகமாக முடியும்போது அதன் உண்மையான ஆபத்து அவர்களுக்கு தெரியும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்று விட்டதாலயே அதன் தலை தப்பிவிட்டது இனி 05 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்க வேண்டாம்.
அது ஒரு தற்காலிக நிவாரணம் தான்.
இன்னமும் கூட தவெக அரசின் தலையில் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
இன்னும் 06 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டு கழித்து திமுகவோ அல்லது அதிமுகவோ தவெக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரக்கூடும்.
தவெக வின் மீது மக்கள் அதிருப்தி அடைய தொடங்கும் நேரத்தில் நிச்சயமாக இரண்டு கட்சிகளில் யாரேனும் ஒருவர் அந்த நகர்வை முன்னெடுப்பார்கள்.
இப்போது அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி அவர்களை தங்களுக்கு ஆதரவளிக்க வைத்ததைப்போல தவெக வில் இருக்கும் 10 சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவோ அதிமுகவோ அல்லது இரண்டு கட்சிகளும் சேர்ந்து மறைமுகமாக விலை கொடுத்து வாங்கி தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வைத்து விட்டால் அடுத்த நொடியே தவெக அரசு கவிழ்ந்து விடும்.
இது நடக்குமா சாத்தியமா? என்று நீங்கள் கேட்கலாம்.
அரசியலில் எல்லாம் சாத்தியம்தான்.
உதயமாகி இரண்டு ஆண்டுகளே ஆன கட்சி ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட நிறைவடையாத ஒரு தவெக போன்ற ஒரு கட்சியாலேயே வேறு கட்சியின் எம்எல்ஏக்களை வாங்க முடிகிறது என்றால் சுமார் 50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்து அதிகாரத்தை ருசி பார்த்த திமுக வாலேயே அல்லது அதிமுக வாலையோ இதை ஏன் செய்ய முடியாது?
தற்போது அமைச்சர் பதவி ஆசையைக் காட்டி எஸ்பி வேலுமணி சிபி சண்முகம் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக வினரை தமக்கு ஆதரவளிக்க வைத்ததே?
அதே போல தவெக விலும் அமைச்சர் பதவி கிடைக்காத ஆனால் அமைச்சர் கனவில் இருக்கும் பல எம்எல்ஏக்கள் இருப்பார்கள் தானே?
அவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆசை வார்த்தை காட்டி அவர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பணத்தைக் கொட்டி ஒரு 10 எம்எல்ஏக்களை கட்சி மாற வைப்பது ஒன்றும் கடினமில்லையே?
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பதில் வேண்டுமானால் நடைமுறை சிக்கல் இருக்கலாம்.
அதனை இரு கட்சிகளின் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.
ஆனால் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முடியுமே?
அது சாத்தியம் தானே?
ஒருவேளை அப்படி ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் தேர்தல் வரும் தேர்தல் வந்தால் நாங்கள் மக்களிடம் செல்வோம் மக்கள் எங்களுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்று தவெக வினர் கூறலாம்.
ஆனால் நீங்கள் மக்களிடம் சென்று என்ன கூறி நியாயம் கேட்பீர்கள் வாக்கு கேட்பீர்கள்?
அநியாயமாக எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்து விட்டார்கள் இது நியாயமா என்றா வாக்கு கேட்பீர்கள்?
அப்படி அதையே ஆயுதமாக வைத்து வாக்கு கேட்டால் அதிமுகவிற்கும் நீங்கள் இதையே தானே செய்தீர்கள்?
இரட்டை இலை சின்னத்தில் போட்டுவிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து தங்கள் கட்சியின் எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டீர்களே?
நீங்களா குதிரை பேரத்தை பற்றி பேசுவது என்று மக்கள் திரும்பி கேட்க மாட்டார்களா?
தவெக எதையும் செய்யாமல் ஆட்சி கவிழ்ந்தால் கூட அவர்களுக்கு மக்களின் அனுதாபம் கிடைக்கும்.
ஆனால் இத்தனையும் செய்துவிட்டு மக்களிடம் சென்று மீண்டும் வாக்கு கேட்டால் மக்களின் அனுதாபம் எப்படி கிடைக்கும்?
அப்படியெல்லாம் திமுகவோ அதிமுகவோ செய்ய மாட்டார்கள் செய்வதாக இருந்தால் இப்போதே செய்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம்.
திமுக இதனை செய்யாமல் இருந்ததற்கு காரணம் இப்போது அது செய்வது சரியல்ல என்பதால் தானே தவிர செய்ய முடியவில்லை என்பதால் அல்ல.
ஒருவேளை திமுக இதனை செய்திருந்தால் மக்கள் மத்தியில் அது திமுகவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தவெக விற்கு அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கும்
ஆனால் தற்போது தவெக வே அந்த தவறை செய்யும் போது நாளையே இதனை திமுகவோ அல்லது அதிமுகவோ செய்தால் அதனை பொதுமக்கள் சரி என்றே பார்ப்பார்கள்.
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் சரியாய் போயிற்று என்று மக்களே அந்த நடவடிக்கையை ஆதரிப்பார்கள்.
06 மாதத்திற்கு இந்த ஆட்சிக்கு நாங்கள் எந்த இடையூறும் கொடுக்க மாட்டோம் என தவெக ஆட்சி அமைந்த போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அதன் மறைமுகமான உட்கொரு பொருள் 06 மாதத்திற்கு விமர்சிக்க மாட்டோம் என்பதல்ல
06 மாதத்திற்கு ஆட்சியை கவிழ்க்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என்பதை அதன் உட்பொருள்.
தற்போது தம்முடைய நடவடிக்கைகளால் தவெக மக்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் சம்பாதிக்கும் போது நிச்சயமாக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெறும். 1
காவல்துறையில் ஒரு நடைமுறை உண்டு.
ஒரு தவறு நடக்கும் போது அந்த தவறை செய்தது சம்பந்தப்பட்ட குற்றவாளி தான் என்பது காவல்துறைக்கு நன்கு தெரிந்திருந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய மாட்டார்கள்.
அவர்களைப் பிடித்து விசாரித்து விட்டு ஆதாரம் இல்லாததால் விட்டுவிடுவது போல விட்டுவிடுவார்கள்.
அவர்களும் வெளியே சென்று நாம் காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளவில்லை என்று ஜாலியாக சுற்றித் திரிவதோடு மேலும் தவறு செய்ய தொடங்குவார்கள்.
ஆனால் அந்த குற்றவாளிகளை கண்ணும் கருத்துமாக கண்காணித்துக் கொண்டே இருக்கும் காவல்துறை அவர்கள் தவறு செய்யும் போது ஆதாரத்துடன் கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் அவர்கள் தப்பிக்கவே முடியாதவாறு சிக்க வைத்து விடுவார்கள்.
தவெக தற்போது திமுக ஆட்சி அமைக்க விட்டிருப்பதும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதும் கிட்டத்தட்ட இதே யுக்தியை போன்றது தான்.
தவெக,தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆட்சியாளர்கள் தவறு செய்யும் அளவுக்கு விட்டு விட்டு பின்னர் அந்த தவறுகளால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் போது திமுகவும் அதிமுகவும் நிச்சயம் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
அப்போது இதே குதிரை பேரத்தை இன்று ஆதரித்து பேசும் தவெக கட்சியினர் நாளை மற்றவர்கள் இதனை செய்யும்போது திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக கண்டிக்க கூட முடியாமல் அமைதியாக தான் இருக்க வேண்டும்.
தவெக விற்கு 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.
தவெக விற்கு வாக்களித்த அனைவருமே விஜயின் தீவிர ரசிகர்களும் இளம் தலைமுறையை சேர்ந்த வாக்காளர்களோ அல்ல.
விஜயோ தவெக வோ எதை செய்தாலும் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து அவர்களுக்கே வாக்களிப்பதற்கு
1 கோடியே 70 லட்சம் பேரில் குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது இதற்கு முன்பு திமுக விற்கும் அதிமுகவிற்கும் வாக்களித்தவர்கள் தான்.
விஜய் தவறு செய்யும்போது அந்த வாக்குகள் மீண்டும் திமுகவை நோக்கியோ அதிமுகவை நோக்கியோ திரும்புவதற்கு வெகு நாட்கள் ஆகாது.
இந்த குதிரை பேர அரசியல் என்பது இருபுறமும் கூர்த்தீட்டப்பட்ட கத்தி.
அதன் ஒரு முனையைக் கொண்டு மற்றவர்களை தாக்கலாம் என நினைத்தால் மற்றொரு முனை நம்மை நோக்கி தாக்குவதற்காக காத்திருக்கிறது என்பதை இப்போதே உணர்ந்து கொள்வது நல்லது