மண் சரிவு, வீடு இழப்பு, மண்ணிற்குள் புதையுண்டது, வெள்ளம் அடித்துச் சென்றது என்றாக பல அழிவுகளை ஏற்படுத்திவிட்டது தித்வா.
மேலே கூறிய அனைத்துச் செய்திகளில் இருந்தும் நாம் ஒன்ற உய்த்துணர முடிவது மலைப் பிரதேசங்களில்தான் இத் தாக்கங்கள் அதிகம் ஏற்பட்டு இருக்கின்றன என்பது.
இந்த மலைப் பிரதேசத்திலும் உள்ள தரைப் பிரதேசங்களிலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அதிகம் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து நாசங்களை, இழப்புகளை ஏற்படுத்தியும் விட்டது.
பாதைகள் தடைப்பட்டு போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இயல்பு வாழ்வு சீர் குலைக்கப்பட்டது.
விளை நிலங்கள் கால் நடைகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
அரசு தன்னம்பிக்கையுடன் தொடர்ந்தும் மக்களுடன் நின்று நிவாரணங்கள் மீள் கட்டுமானங்களை செய்து வருகின்றது.
இதில் மனிநேயம் மேலோங்கி வளரத் தொடங்கியது.
தொண்டர் அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும், தனி மனிதர்களும், பாதிப்படையாத இடங்களில் வாழ்ந்த மக்களும், பாதிப்படைந்த மக்களின் இருப்பிடங்களை நோக்கி ஓடி வழங்கி வரும் உதவிகள் மனிதாபிமானத்தின் உச்சம், சகோதரததுவத்தின் வெளிப்பாடு, நம்பிக்கையின் மிச்சங்கள்.
வெளிநாடுகளும், புலம் பெயர் தேசத்து உறவுகளும், ஏன் உள்ளுரு பணம் படைத்தவர்கள், அரசியல் தலைவர் சந்திரிகா பண்டாட நாயக்கா உட்பட பலரும் தம்மால் ஆன பணம், பொருட்கள், உபகரண உதவிகள் என்றாகவே வழங்கி இந்த மீட்புகள் இவ்வளவு வேகமாக நடைபெற்று வருவதற்கு காரணமாகி இருக்கின்றது.
மக்களின் குறைகளை செவி சாய்த்து அவர்களின் கூக்குரலுக்கு முன்பே ஓடோடி வந்தது என்றாக செயற்படும் அரசு, அரசியல் செய்யும் எதிர்கட்சிகளின் குறை கூறும் குரல்களுக்கு அதிகம் தமது நேரத்தை செலுத்தி பதில் உரைக்கவில்லை
மாறாக தமது செயற்பாடுகள் மூலம் இந்த எதிர் கட்சிகளின் குரல்களுக்கு பதிலளித்துள்ளனர்.
இதனால் எதிர கட்சிகளின் குரல்களும் அமந்து போயின.
இதனைத் தொடர்ந்து எதிர் கட்சிகளில் பலர் அமைப்பு என்றாக இல்லாவிட்டாலும் இந்த மீட்பு, கட்டுமானப் பணிகளில் இணையை வேண்டிய சூழலும் ஏற்பட்டுவிட்டது.
இது ஒரு ஆளும் அரசின், எதிர்கட்சிகளின் சரியான போக்காக பார்க்கலாம்.
ஆனால் இந்த அனர்தங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்களின் கல்வி, சிறப்பாக பின் தள்ளப்பட்டது உயர்தரப் பரீட்சைகள்.
இதனால் ஏற்படும் மாணவர்களின் உளவியல் தாக்கம் இங்கு அதிகம் கவனத்தில் எடுகப்படவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குள் உண்டு.
பரீட்சைகளை பிற்போடுதல், பாடசாலைகளை சில காலம் மூடி வைத்தல் என்பது மாணவர்களின் உளவியல் பிரச்சனைக்கு ஏமாற்றத்திற்கு தீர்வுகளைத் முழுமையாக தருமா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும்.
பாடக் குறிப்புகளை, புத்தகங்களை இழந்து…. உட்கார்ந்த படிக்கும் கதிரை(ஆசனம்), மேசைகளை தொலைத்து அமர்ந்திருந்த ‘வசதியான’ ‘வாய்ப்பான’ ‘திண்ணை’ இழப்பு என்பது ஒவ்வொரு மாணவனின் சீரான கல்வி ஓட்டத்திற்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
வருங்காலத்தில் சந்திக்க இருக்கும் பரீட்சைகளில் சிறப்பாக க.பொ.த உயர்தர பரீட்சையில் அனர்த்தங்களின் பாதிப்பு குறைந்த அல்லது அற்ற சூழலில் வீச்சாக…. சீராக முன்னெடுத்து தம்மை தயார்படுத்திய அதே வேகத்தில் இனி உடனடியாக தம்மை இணைத்துக் கொள்முடியுமா என்றால் இல்லை என்பதே உண்மை நிலை.
உயர்தர வகுப்பு ஆசிரியராக 45 வருடங்களுக்கு மேலாக செயற்படும் என்னால் மாணவர்களின் இந்த உளவியலை ஆழமாக உணர முடிகின்றது.
இதனால் ஏற்படும் மன உழைச்சல், மன அழுத்தம், உளவியல் தாக்கம் அளப்பரியது.
இதனை பெற்றோர்கள், சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கான ஆற்றுப்படுத்தலில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டாக வேண்டும்.
இதனை 1978ம் ஆண்டு மட்டக்களப்பு – அம்பாறை என்றாக கிழக்கு மாகாணத்தில் புயல் ஏற்பட்ட போது யாழ் பல்கலைக் கழக மாணவர்களாக நாம் மீட்புப்பணி, நிவாரணம், மீள்கட்டுமானம் என்றாக செய்த போது மாணவர்கள் மத்தியில் அதிகம் அவதானித்தோம்.
ஆனால் அப்போது நவம்பரில் நடைபெற்ற அந்த அனர்த்தம் அடுத்த வருடம் ஆகஸ்ட் வரையுமான 9 மாதம் வரையிலான கால அவகாசத்தை உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வரை வழங்கி இருந்தது.
இந்த கால அவகாசத்தை சரியாக நாம் உள்வாங்கி உயர்தர வகுப்பு எல்லா மாணவர்களையும் பெற்றோர், ஆசிரியர்கள், பிரதேசத்தவர்களின் ஒத்துழைப்புடன் ஓரிடத்திற்கு அழைத்து வந்து வார இறுதி வகுப்புகளை நடாத்தி அவர்களின் கல்வியிற்கு ஊக்கம், நம்பிக்கை, அளித்து மேலெழுந்து வரச் செய்தோம்.
இந்த நிகழ்வுகள் மாணவர்களின் அனர்த்தங்களினால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தை பாரிய அளவில் தணிப்பதற்கு ஏதுவாக இருந்தது.
தொடர்ந்த பரீட்சை முடிவுகளும் இதனை நிறுவி நின்றன.
அந்த அனுபவங்களின் அடிப்படையில் சொல்கின்றோம் அனர்த்தங்களில் அதிகம் பாதிக்கப்படும் துறையாக கல்வி இருக்கின்றது. இதில் அதிக கவனம் எடுத்தாக வேண்டும்.
இது தற்போதைய விஞ்ஞபன தொழில் நுட்ப யுகத்தில் சாத்தியப்படுதக் கூடிய ஒன்றுதான்.
ஆனால் இங்குள்ள முக்கிய பிரச்சனை உயர்தரப் பரீட்சையிற்கான கால அவகாசம்தான்…?
ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சி அந்த நாட்டை முன்னோக்கி நகரத்துவதில் மற்றை எந்த துறையையும் விட அதிகம் பங்களிப்பு செய்யும்.
அதனால் எம் குழந்தைகளின் உளவியல் தாக்கங்களை இந்த இழப்பினால் ஏற்படும் அழுத்தங்களை அதிகம் கவனத்தில் கொண்டு நாம் செயலாற்ற வேண்டிய அவசியம் இங்கு இருக்கின்றது.
இதில் நாட்டில் பொதுவாக ஏற்பட்ட இழப்புகள் பற்றிய செய்திகள் தமது கிராமத்தவர்கள், உறவுகள் என்றான இழப்புகளும் இந்த மாணவர்களின் உளவியலை நிச்சயம் பாதிப்படையவே செய்திருக்கும்.
கல்வியில் ஏற்படும் பின்னடைவு இனிவரும் பல பத்து வருடங்களுக்கு மறை முகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்…?
இந்த பல பத்தை சில வருடமாக குறைப்பதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்தாக வேண்டும்.
பாடக் குறிப்புகள் தாள்களில் இல்லாது கணினி முறையில் அதிகம் இருப்பதினால் வேகமாக மீள் உருவாக்கம் செய்யலாம் என்றாலும் அந்த ‘கதிரை’ ‘திண்ணை’ ‘சூழல்’ ‘வீடு’ என்றான பழக்கப்படுத்திய படிக்கும் சூழலால் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் உளவியல் தாக்கத்தை இலகுவாக புத்தியிர் பெற்று வரச் செய்வது சற்றுக் கடினம்தான்.
இது நாடு முழுவதற்குமான பொதுப் பரீட்சையாக இருப்பதினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்து மாணவர்களின் கல்வியில் ஏற்பட்ட பாதிப்பு, பாதிப்புகள் அற்ற அல்லது குறைவான பகுதி மாணவர்களிடையே ஏற்பட்ட மாற்றத்ததை விட அதிகமானது.
இந்த ஏற்றத் தாழ்வுகளை கருத்தில் கொண்டுதான் பல்கலைக் கழக அனுமதியில் இம்முறை வெட்டுப்புள்ளிகளை தீர்மானிக்க வேண்டும்.
இதுவும் பின் தங்கிய (தரப்படுத்தல் காலத்து) பிரதேசத்திற்கான வெட்டுப் புள்ளி என்றான பார்வையுடன் பல்கலைக் கழகம் போன்ற உயர் கல்வி அனுமதி என்றாக 2026 இல் அனுமதி வழங்க வேண்டும் என்பதை நாம் முன்மொழிவாக வைக்கின்றோம்.
எமது கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியா இதனைக் கவனத்தில் எடுத்துச் செயற்படுத்துவார் என்று நம்புகின்றோம்.
புத்தாண்டில் ஏற்படவிருக்கும் கல்விச் சீர்திருத்தம் போல் இதிலும் அவர் கவனத்தை செலுத்துவார் என்று நம்புகின்றோம்.
மாணவர்கள் சார்பில் ஒரு ஆசிரியனாக இக்கோரிக்கையை பொது வெளியில் அரசுக்கு முன்வைக்கின்றேன்.