மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து தென்னிலங்கைப் பரப்பில் இப்போது அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் மாகாண சபை முறைமையின் ஊடாக அதிகார பகிர்வு என்பதே தமிழர் தரப்பு உரையாடலாக உள்ளது. வடக்கு – கிழக்கு தமிழர் சார்ந்து எழுந்த சிக்கல்களுக்குத் தீர்வாகவே மாகாண சபை முறையையே இலங்கைக்குள் வந்தது.
அதனாலேயே இணைந்த வடகிழக்கு மாகாண சபை அமைந்தது. காலப்போக்கில் அந்த முறைமை நாடு முழுவதற்குமான ஓர் அதிகார பகிர்வு முறைமையாக மாறியது. கடந்த பத்தாண்டு காலமாக அதன் நிர்வாக அதிகாரம் நிலவுகின்ற போதும் அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது.
எது எவ்வாறெனினும் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே மலையகத்தில் அதன் அதிகாரப் பகிர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக எவ்வித உரையாடலும் ஏற்பாடுகளும் அமையப் பெறவில்லை.
மத்திய, ஊவா மாகாணங்களில் கிடைக்கப்பெற்ற அமைச்சுப் பதவிகள் ஊடாக அபிவிருத்தி அரசியல் ஓரளவுக்கு முன்னெடுக்கப்பட்டது தவிர மலையக மக்களுக்கான அதிகாரப் பகிர்வாக ஏதும் குறித்து ஒதுக்கப்படவில்லை.
எனவே, எதிர் காலத்தில் மாகாண சபை ஊடான அதிகாரப் பகிர்வுகள் குறித்த சட்டத்திருத்தங்கள் ஏதேனும் வருமிடத்து மலையகத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்தும் அக்கறை காட்டும் பொறுப்பு சக சமூகங்களான இலங்கைத் தமிழர், முஸ்லிம் தரப்புகளுக்கு உண்டு என்பதை வலியுறுத்துவதாகவே எமது சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மலையக அதிகார சபையின் அதிகாரங்கள் மாகாண சபை முறைமைக்குள்ளும் உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்பது கலந்துரையாடப்பட்டது.
கூடவே அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மலையக அரசியல் அரங்கம் கொண்டு சென்ற மனுவில் மலையக அதிகார சபை என்பது அந்த ஐ.நாவில் முன்வைக்கப்பட்டுள்ள மலையகத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமையக் கூடிய ‘உள்ளகப் பொறிமுறை’ என்பதை சுட்டிக் காட்டியிருந்தமை பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் உரையாடப்பட்டது.
அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வெளியகப் பொறிமுறையில் இருந்து இது வேறுபட்டது. ஏனெனில் பிரச்சினைகளின் மையப்புள்ளி வேறுபட்டது என்பதுவும் தெளிவுபடுத்தப்பட்டது.
சக சமூக அரசியல் உரையாடல் மலையக சமூகத்துக்கு அத்தியாவசியமான காலகட்டம் இது என்பதை கவனத்தில் கொள்ளுதல் தூரநோக்குடனானது.
‘இலங்கையில் தமிழர்கள்’ எனும் அத்தியாயத்தில் இலங்கைத் தமிழர் – மலையகத் தமிழர் அரசியல் தள வேறுபாடுகள் குறித்தும், ‘மலையக அதிகார சபை’ குறித்த தனியான அத்தியாயமும் கொண்ட “மலைகளைப் பேசவிடுங்கள்” நூலை அன்பளிப்பாக வழங்கி வைத்தேன்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தமிழரசு கட்சியின் ஒத்திவைப்பு வேளை நேர ஒதுக்கீடுகளை மலையகம் சார்ந்த எனது பிரேரணைகளுக்காக வழங்கி ஒதுதழைத்தமையை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தேன். அந்த காலத்து நினைவுகளையும் அசை போட்டு விடைபெற்றோம்.