“அநுராதபுரத்தில் இதெல்லாம் சாதாரணமாம்!

ஆனால், அதே போன்றதொரு கொடூரமான குற்றச்சாட்டு இலங்கையில் ஒரு முக்கிய பிக்கு மீது சுமத்தப்பட்ட போது, அவரைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைப்பதற்கும் இங்குள்ள அதிகார வர்க்கமும் சில தரப்புகளும் காட்டும் அக்கறை, இந்த நாடு இன்னும் ஒரு ஜனநாயக நாடுதானா என்ற பலத்த கேள்வியை எழுப்பியுள்ளது.

பிரிட்டன் இளவரசரை விடவும் இலங்கையில் உள்ள ஒரு பிக்கு சட்டத்திற்கு மேலானவரா என்ற ஆக்ரோஷமான கேள்வி தற்பொழுது சமூக மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் நியாயம் கேட்கப் போனால், அதற்குச் சொல்லப்படும் காரணங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும் ரகத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. அநுராதபுரப் பகுதியில் இவ்வாறான விபரீதங்கள் நடப்பது சாதாரணமான ஒன்று என அந்தப் பிக்குவின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் கொஞ்சமும் கூச்சமின்றி வாதிடுகின்றார்.

மறுபுறம், ஒரு பிக்குவைக் கைது செய்வது ஒட்டுமொத்த புத்த சாசனத்திற்கே எதிரானது என இன்னுமொரு பிக்கு பகிரங்கமாக முழக்கமிட்டுச் சட்டத்தை மிரட்டப் பார்க்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை ஒரு விபச்சாரி எனச் சித்திரரித்து, அவளது வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு ஒரு மதத் தலைவரைக் கைது செய்வது தவறு எனப் பொறுப்பற்ற முறையில் ஒரு அரசியல் தலைவர் நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் வக்காலத்து வாங்குகிறார்.

ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை விடவும் இங்கு சிலருக்கு மதப் போர்வையும், அரசியல் செல்வாக்குமே பெரிதாகத் தெரிகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என அரசியல் சாசனத்தில் எழுதி வைத்துக்கொண்டு, நடைமுறையில் அதனைத் தலைகீழாகச் செயல்படுத்துவதுதான் இந்த நாட்டின் சாபக்கேடாகும்.

வீதியில் சாதாரண மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால், சாதாரண மக்களுக்கு உடனடியாகத் தடிமனான அபராதம் விதிப்பதுதான் இங்குள்ள பொதுவான நடைமுறை.

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றனர் என்ற ஒரு அற்பக் காரணத்தை முன்வைத்து, தமிழ் இளைஞர்கள் சிலரை மிகத் தீவிரமாக விரட்டிச் சென்று கைது செய்த இதே பொலிஸார், ஒரு சிறுமியைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பிக்குவை உடனடியாகக் கைது செய்யாமல், சொகுசு மருத்துவமனைகளில் தங்கியிருக்க அனுமதித்து, பின்னர் மிக எளிதாகப் பிணையில் செல்ல அனுமதித்ததன் பின்னணி என்ன?

சட்டம் என்பது இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இடி மின்னல் வேகத்திலும், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அதிலும் குறிப்பாக மதப் போர்வையில் இருப்பவர்களுக்கும் ஆமை வேகத்திலும், சலுகைகளுடனும் செயல்படுவது ஏன் என்ற நியாயமான கேள்வி தெற்கிலும் வடக்கிலும் தற்பொழுது ஒருசேர ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டில் அமைப்பையும் சட்ட ஒழுங்கையும் மாற்றுவோம், புதியதொரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என மேடைகளில் முழங்கிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறியவர்கள், இன்று இத்தகைய மத மற்றும் அரசியல் செல்வாக்குகளுக்கு முன்னால் மண்டியிட்டுத் தடுமாறி நிற்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சட்டத்தின் இந்த இரட்டை முகமும், நீதிக்காக ஏங்கும் அந்தச் சிறுமியின் கண்ணீரும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த சட்டக் கட்டமைப்பிற்குமே விழுந்த ஒரு பலத்த சவாலாகும்.

Leave a Reply