அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ

அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யுமாறு, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(08) கோரியது. குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கரித்து கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட பல்வேறு மோசமான குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறானவர் களைக் கைது செய்வதற்கும், யுத்தம் முடிந்த பின்னரும் சுமார் 7 வருடங்களாக தடுத்துவைக்கப் பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்றுக் கோரிக்கை விடுத்தார்.

ஜோசப் பரராஜசிங்கத்தை படு கொலைசெய்த நபர் யார் என்ற தகவலை கடந்த அரசாங்கத்துக்கு பெயர் விபரங்களுடன் வழங்கிய போதும் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரைக் கைது செய்வதற்கு புதிய அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி யெழுப்பினார்.

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலத்தில் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில்

சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளபோதும் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் விடுதலையை சட்டரீதியாக நோக்காமல் நடைமுறைச்சாத்தியமான முறையில் அணுகி அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு நீதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த இளம் சமூகத்தினர் துரிதமாக விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனது நண்பரான ஜோசப் பரராஜ சிங்கத்தை மட்டக்களப்புக்குச் செல்ல வேண்டாம் என நான் எச்சரித்திருந்தேன். இருந்தபோதும் அவர் கிறிஸ்மஸ் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றார். அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய நபர் யார் என்பது குறித்து நாம் கடந்த அரசாங்கத்திடம் பெயர் விபரங்களுடன் வழங்கினோம்.

ஆனால் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அந்த நபர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று தற்பொழுது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகின்றார். இதுபோன்று பல குற்றவாளிகள் பொதுநலவாய நாடுகள் உட்பட பல வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இது எவ்வாறான குற்றச் செயல்களுக்கு உதவியளிக்கப்படவுள்ளது என்பது தொடர்பில் தெளிவுஇல்லை. பொது நலவாய நாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கைதுசெய்வதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.