இந்திய விவசாயிகளின் போராட்டம்

இதனையடுத்து ஜனவரி 26, இந்திய குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணியொன்றினை நடத்தியபோது விவசாயிகள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியப் பொலிசாரால் வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொப் பாடகி ரிஹானா (Rihanna), தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, ‘இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்பதிவு இதுவரையில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தடவை பகிரப்பட்டுள்ளது.

இதே போல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுவீடனைச் சேர்ந்த கிரேற்றா துன்பெர்க் (Greta Thunberg), தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க நடிகை அமண்டா செர்னி (Amanda Cerny) தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், ‘இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் இந்தியராகவோ அல்லது பஞ்சாபியாகவோ அல்லது தெற்காசியராகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மனித நேயத்தை பற்றி அக்கறைப்படுவதுதான்’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் (Kamala Harris) மருமகள் சட்டத்தரணி மீனா ஹாரிஸ் (Meena Harris) அவர்களும் சமூக வலைத்தளத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விவசாயிகளின் போராட்டம் குறித்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவர்களது பதிவுகளால் டெல்லியில் நடைபெறும் போராட்டம் மேலும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.