இலங்கை: கொரனா செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 587 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் 155 பேர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரை 14,766 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளாகி, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர், அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிவிட்டார். அம்பாறையைச் சேர்ந்த நபரே இவ்வாறு, நேற்று மாலை தப்பியோடிவிட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொரோனா ​தொற்றுக்கு உள்ளான மொஹமட் ரிகாஷ் என்பவரே இவ்வாறு தப்பியோடிவிட்டார். அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றம் உள்ளூராட்சி மன்ற சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கேட்டுக்கொண்ட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், அவர்களுக்கான விசேட கொடுப்பனவையும் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. வடக்கு – கிழக்கில், 2,000க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடுகின்றனரென்றும் அவர்கள் அனைவரும் உள்ளூராட்சி மன்றங்களில் பணியாளர்களாக 3 ஆண்டுகளுக்க மேல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் கூறினார்.

தற்போதைய கொவிட் – 19 அச்சுறுத்தல் நிறைந்த சூழலிலும், அவர்கள் தமது சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனரெனவும் இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசியை அவர்களுக்கு வழங்க முன்வர வேண்டுமென்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அவர்களது குடும்பங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், அத்துடன், அவர்களுக்கான நிரந்தர நியமனத்தையும் வழங்க வேண்டுமென்றார். மேலும், இச்சூழ்நிலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு,   விசேட கொடுப்பனவையும் வழங்க முன்வர வேண்டுமென்றும், ஆறுமுகம் புண்ணியமூர்த்தி கேட்டுக்கொண்டார்.