இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையானது நேற்று மேலும் 155 கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 5,775ஆக உயர்ந்துள்ளது.  

சிறைக் கைதிகளை பார்வையிடுவது மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 தொற்றுநோய் வேகமாக பரவுவதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு ஆணையர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் வழக்குகளுக்காகவும் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை கொடுக்கவும் பெறவும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 9342 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன், 188 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் 91 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன், 45 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 2,076 குடும்பங்களும் கொத்மலை பகுதியில் 1242 குடும்பங்களும் ஹங்குரன்கெத்த பகுதியில் 244 குடும்பங்களும் வலப்பனை பகுதியில் 1,117 குடும்பங்களும் நுவரெலியாவில் 811 குடும்பங்களுமாக மொத்தமாக 5,490 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.